நோய்களுக்கு காரணம்..நாம் தான்!

Spread the love

வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள முற்பட்ட நாளிலிருந்து நமக்கு போனசாக நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதை கூட உணர்ந்து கொள்ளாமல் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது உலக ஜனம்.

இன்று பலவிதமான நோய்கள் பல்வேறு விதமான பெயர்களில் அதுவும் வாயில் நுழையாத பெயர்களில் உள்ளன. சரி, இவ்வாறு நோய்கள் பெருகக் காரணம் என்ன?

வெளிநாடுகளை மிஞ்சும் விதமாக மருத்துவ வசதியுடன் இன்று எத்தனை எத்தனை மருத்துவ மனைகள், விதவிதமான மருத்துவர்கள், வித்தியாசமான மாத்திரைகள் இருந்தும் நோய்கள் குறைந்ததுண்டா?

அப்போது நாம் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம்? நாம எங்கு திசை மாறினோம்? திருவள்ளுவர் சொன்னதைப் பார்ப்போம்.

மருந்து என்ற ஓர் அதிகாரமே படைத்திருக்கிறார். மருந்துக்குக் கூட ஒரு மருந்து பெயரைச் சொல்லவில்லை. இத்தனை நோய்களில் ஒரு நோயின் பெயரைக் கூட சொல்லவில்லையே ஏன் என்று நாம் சிந்தித்ததுண்டா?

அவ்வாறு வள்ளுவர் ஏன் ஒரு மருந்து பெயரைக்கூட சொல்லவில்லை. ஏன் என்று சிந்தித்ததுண்டா?

அவர் காலத்தில் மிளகு, சீரகம், திப்பிலி, கடுக்காய் ஓமம், ஏலக்காய், வேப்பிலை இப்படி ஒரு மருந்து கூடவா இருக்காது அல்லது அவர்தான அறியாமல் இருந்திருப்பாரா?

நோய் வந்த பிறகு மருந்தைத்தேடி அலைவதை வள்ளுவர் விரும்பவில்லை. வருமுன்னர் காப்பதுதான் வாழ்க்கை என்று முன் சொன்னவர் பின் எப்படி இந்த நோய்க்கு இன்ன மருந்து என்று கூறுவார்.

அதனால்தான் வள்ளுவர்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

அருந்தியது அற்றது போற்றி உணின் என்றார்.

இவ்வுடலுக்கு மருந்து தேவைப்படாது. வேண்டவே வேண்டாம், எப்பொழுது என்றால், நாம் முன்னர் உண்ட உணவு செரித்து விட்டது என்று தெரிந்த பிறகு மீண்டும் உணவு உண்டால் மருந்து தேவைப்படாது என்று கூறியுள்ளார்.

நாம் வள்ளுவரைப் பள்ளியிலிருந்து கல்லூரி வரை பாடமாக வைத்து மதிப்பெண் போடுவதோடு சரி, வள்ளுவர் சொன்னது தான் வாழ்க்கை. அதைக் கடைபிடித்து வாழ்வில் மேன்மை அடைவோம் என்று சொல்லித் தருவதில்லை.

நம்மைப் பார்த்து யாராவது “பசித்துச் சாப்பிடுங்கள்” தேவைக்கேற்ப சாப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்களா? இல்லையே நாம் இங்கே தான் தவறு செய்து விட்டோம். இங்கேதான் திசைமாறி விட்டோம். உணவு உண்பதை மட்டுமே வாழ்க்கையாக, சடங்காக மாற்றிவிட்டோம்.

நாம் விலங்குகளிடமிருந்தும் பறவைகளிடம் இருந்தும் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் விலங்குகளின் உணவு உண்ணும் முறையையும் பறவைகளின் உணவு உண்ணும் முறையையும் நமக்கு ஏதுவாக அறிந்து கொள்ளத் தவறிவிட்டோம்.

இரவில் நடமாடும் விலங்குகளோ பறவைகளோ பகலில் உண்பதில்லை. நாம் அப்படியா இருக்கிறோம்? இரவிலும் உண்கிறோம். தேவைக்குச் சாப்பிடுங்கள், இப்படி இருந்து விட்டால் நோயாவது நொடியாவது, எதுவும் அண்டாது.


Spread the love