ஹை ஹீல்ஸ் தீமைகள்

Spread the love

இன்றைய காலத்தில் அநேக பெண்கள் தான் அணியும் காலணிகள் உயரமானதாக, அழகாக, கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிந்து நடப்பது அநேக பெண்களின் விருப்பமாக மாறியுள்ளது. இது அனைவருக்கும் நம்பிக்கை மற்றும்  தைரியத்தை அளிப்பதாக சில பெண்கள் கூறுவது உண்டு. குறைந்த உயரம் உள்ளவர்கள் உயரம் அதிகம் தெரிய வேண்டும் என்பதற்காகவே ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு செல்வர்.

முதன்முதலில் ஹை ஹீல்ஸ் அணிந்த பெண்மணி பிரான்ஸ் நாட்டின் கேத்தரின் டே மெடிசி என்பவர். இவர் பிரான்ஸ் அதிபரை 14 வயதில் மணந்து கொண்டார். இவர் அதிபரின் உயரத்திற்கு நிகராக இருப்பதற்காக ஹை ஹீல்ஸ் அணிந்து உள்ளார். பின் பணக்கார பெண்களும் பெருமைக்காக இதனைப் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பேஷன் ஷோக்களில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வாறாக தற்போது சாதாரணமாக உபயோகிக்கும் காலணி வகைகளில் ஹை ஹீல்ஸ் ஒன்றாக மாறிவிட்டது.

ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவதால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பலரும் அறியாமல் இருக்கின்றனர். ஹை ஹீல்ஸ் அணிவது ஆபத்தா? இதனால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகுகின்றன என்பதை பற்றி பார்க்கலாம்.

ஹை ஹீல்ஸ் பக்க விளைவுகள்

ஹைஹீல்ஸ் அணிந்து நடப்பதினால் நம் உடலின் முழு எடையும் முன் பாதத்தின் அடிப்பகுதியில் தாங்கிக் கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக அப்பகுதி முழுவதும் வலி ஏற்படும். பின் அன்றைய தினம் இரவு முழுவதும் தீராத வலியை ஏற்படுத்துகின்றது. இதனால் சீரான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இரு கால்கள் வீங்கி இரண்டு நாள் வரையில் வலி குறையாத நிலையும் ஏற்படலாம்.

நீண்ட நாட்கள் ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவதால் கொப்புளங்கள், குதிகாலின் பின்பகுதி பெரிதாகி சிவப்பாக அல்லது வீங்கிக் காணப்படுதல், கால்களில் சுளுக்கு ஏற்படுதல், குதிகால் வலி போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனால் எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து விரிசல்கள், முறிவுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு தட்டையான காலணிகள் அணிய  முடியாத நிலை ஏற்படலாம்.

கர்ப்பப்பைக்கு

ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது நம் உடல் நேர்கோட்டில் இல்லாமல் சாய்வான தோற்றத்தில் இருக்கும். உடல் சீரற்ற அமைப்பில் இருப்பதால் இடுப்பிற்கு கீழ் உள்ள கர்ப்பப்பையில் அதிக அளவில் அழுத்தம் ஏற்படும். இதனால் மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி, தாம்பத்திய உறவின் போது வலி, குழந்தை தங்குவதில் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.

மூட்டு எலும்பு தேய்மானம்

ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு நடப்பதினால் மூட்டுகளில் அதிக அழுத்தம் உருவாகி மூட்டு தேய்மானம் ஏற்படுகின்றது. இதனால் ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் என்னும் மூட்டு எலும்பு தேய்மான நோய் எளிதில்  ஏற்பட வழிவகுக்கிறது.

முதுகு வலி

ஹை ஹீல்ஸ் உடலின் சமநிலையை பாதிப்பதால் முதுகெலும்பில் அதிக அளவில் அழுத்தம் ஏற்படுகின்றது. இதனால் முதுகுவலி வருவதும் இயல்பாகிறது.

ஹை ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் முதுகு வலியின் ஆரம்ப கட்டத்தை கடந்த பின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்தில் உள்ள தசைகள் இறுகி இலகுவாகும். இதில் அதிக எடை உள்ளவர்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் அதிகளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே கூடுமானவரை ஹீல்ஸ் அணிவதை தவிர்ப்பது நலம் பயக்கும்.

ஹீல்ஸ் வாங்கும் முறை

ஹீல்ஸ் வாங்கும் போது அதன் உள்ளே இருக்கும் ‘சோல்’ ரப்பரில் தயாரித்ததா என்று பார்த்து வாங்கவும். ரப்பர் சோல் கால்களை வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாகும்.

கால்களுக்கு பொருத்தமான அதிக உயரமில்லாத காலணிகளை தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

பாதுகாப்பு முறைகள்

ஹை ஹீல்ஸ் அணியும் சூழ்நிலையில் உள்ளவர்கள் குறைந்த நேரம் அணியலாம்.

யோகா போன்ற  உடற்பயிற்சிகளை மேற்கொள்வது பாதிப்புகளை குறைக்க உதவும்.

ஹை ஹீல்ஸ் அணியும் பெண்கள் சோர்வாக இருக்கும் நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு கழுவலாம். இது கொஞ்சம் இதமாக வைக்க உதவும்.

தோல் காலணிகள் காற்றோட்டமாக அமைந்து பாதுகாக்கிறது. இது ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடையது. இதனை அதிக நேரம் பயன்படுத்தாமல் குறைந்த நேரம் உபயோகிப்பது நல்லது.

நீண்ட நாட்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து பழகியவர்கள் உடனடியாக ஹீல்ஸ் இல்லாத காலணிகளை அணியக்கூடாது. பாதங்களில் கீழ் உள்ள ஆர்ச் எனப்படும் வளைவுகள் மிகவும் குறைந்துவிடும். குறைந்த அளவில் ஹீல்ஸ் உள்ள காலணிகளை மாற்றி பின் ஹீல்ஸ் இல்லாத காலணிகளை அணியலாம்.

குறிப்பு

பெண்கள் மிகுந்த அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம்.

சில கால அழகை விட, நீண்ட கால ஆரோக்கிய வாழ்க்கையே முக்கியம் என்பதை உணர்ந்து ஏற்ற காலணிகளை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வு  வாழ்வோம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love