எப்போதும் ஏ.சி.யா? நோய் வரும் யோசி

Spread the love

கோடை காலம் என்றாலும் சரி… குளிர்காலம் என்றாலும் சரி வசதி படைத்தவர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் எப்போதும் ஏ.சி. அறையில் தான் தங்கள் பணிகளை கவனிப்பார்கள். வெயில் காலம் தான் என்றில்லை நவம்பர், டிசம்பர் மாதத்திலும் இவ்வருடம் பகலில் சூரியன் சுட்டெரிக்கிறது. இதற்கு என்ன காரணம் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டு சூரியனின் கதிர் வீச்சுக்களின் தாக்கம் அதிகரித்து வருவது தான். கோடை காலத்தில் வெளியே வருவதற்கு பயப்படும் அளவில் வெயிலின் தாக்கம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரங்கள் வரையில் ஏ.சி. அறையில் இருப்பதனால் அவ்வளவாக பிரச்சனை ஏற்படுவதில்லை.

ஆனால் நாள் முழுவதும் ஏ.சி அறையில் இருப்பதுதான் பலவித நோய்களை நம்மை அறியாமலேயே உடலில் கொண்டு வருகிறது. ஏ.சியின் காரணமாக குளிர்ச்சி கிடைக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் இயற்கையின் காற்றை சுவாசிப்பது, முடிந்தவரை செயற்கை ஏ.சி அறையில் இருப்பதைத் தவிர்த்தால் நாம் கீழ்க்காணும் உடல் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். ஏ.சியின் மூலம் நாம் அதிகம் பாதிக்கப்படுவது நமது உடலில் பெரும்பாலும் நுரையீரல் தான். இதனால் சுவாசக் கோளாறு, சளி, எரிச்சல் மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது.

சுத்தமான இயற்கை காற்றை சுவாசிக்க முடியாமல் போவதும், மிகவும் குறைவான காற்று சுழற்சியின் காரணமாகவும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஒரே அறையில் காற்றானது அடைக்கப்பட்டு, மீண்டும் சுழற்சியாவதால் ஒருவருக்கு சளி ஏற்படும். சளியானது மற்றவரை எளிதில் தொற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. குறிப்பாக வைரஸ் தொற்றுகள் ஏ.சி. அறையில் எளிதில் பரவிவிடும். ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பதால சருமத்தில் மட்டுமன்றி, தொண்டையிலும் அரிப்புடன் கூடிய எரிச்சல் காணப்படும். ஏ.சி அறையில் சுற்றும் காற்றில் காணப்படும் தூசிகள், பூஞ்சைகள் காணப்படுதால், அவை அலர்ஜிகளை ஏற்படுத்தி தும்மலை அதிகரிக்கும். மேலும் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். சளி சவ்வுகளிலும் வறட்சியை ஏற்படுத்தும்.

கண்களை ஏ.சி. பாதிக்கும்

அதிக நேரம் ஏ.சி அறையில் இருப்பவர்களுக்கு விழி வெண்படல அழற்சி மற்றும் கண் இமை அழற்சிகள் ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக காண்டாக்ட் லென்சு அணிந்திருப்பவர்களுக்கு இத்தகைய அழற்சி ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

அதிகப்படியான சோர்வு ஏற்படும்.

எப்போதும் சோர்வுடன் இருந்தால், அதற்கு ஏ.சியும் ஒரு காரணம். இவ்வாறு அடிக்கடி சோர்வு, கடுமையான தலை வலியினால் பாதிக்கப்பட்டு வந்தால் ஏ.சி. அறையில் பணி சூழலைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

வெப்பத்தை தாங்கும் ஆற்றல் குறையும்

நார்மலான அறை வெப்பநிலையில் உள்ளவர்களுக்கு வெயிலும், குளிரும் ஒன்றாகத்தான் இருக்கும். அதிக வெப்பமும், அதிகக் குளிரும் தாங்கக்கூடிய சக்தி இருக்கும். ஆனால், ஏ.சி.யிலேயே அதிக நேரம் இருப்பவர்கள் வெளியே வந்து வெயிலில் சிறிது நேரம் நடமாடச் சொல்லுங்கள். அவர்களால் அது இயலாது. மேலும் அப்படி சிறிது நேரம் இருந்தால், சருமத்தில் எரிச்சல் ஏற்படும். அதிகமாக உடல் வியர்க்கும். வைட்டமின் டி குறைபாடுகள் தோன்றவும் வாய்ப்புண்டு.


Spread the love