அஜீரணக் கோளாறு உடலில் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆகாரத்தை மென்று சாப்பிடாமல், அவசர அவசரமாக விழுங்குவது, உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை உட்கொள்வது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, நேரம் தவறி சாப்பிடுவது, உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ எதுவும் இல்லாமல் இருப்பது, போதைப் பொருட்களைச் சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் செரிமான உறுப்புகள் சரிவர வேலை செய்ய இயலாமலும், செரிமான நீர் சுரக்க இயலாமலும் செரிமானக் கோளாறு ஏற்படுகின்றது.
உணவு எவ்வாறு செரிமானமாகிறது?
நாம் உண்ணும் உணவை ஜீரணிக்கச் செய்வது பற்களும், உமிழ் நீரும் தான். உப்பு, வாயு சம்பந்த்மான ஆகாரத்தை ஜீரணிக்கச் செய்வது இரைப்பையும், அதில் சுரக்கும் ஜீரண நீரும் தான். உண்ணும் உணவுகளை சாறு வேறு சக்கை வேறாக பிரித்து, மலத்தைத் தள்ளுவது ஈரலில் இருந்து சுரந்து வரும் பித்த நீரின் குணமாகும். கொழுப்பு வகை உணவுகளை ஜீரணிக்கச் செய்வது கணையம் ஆகும். கணையத்திலிருந்து சுரந்து வரும் நீர் இதற்கு உதவி செய்கிறது.
செரிமானப் பிரச்சனையைச் சரி செய்வது எப்படி?
1. உணவை நன்றாக மென்று, அவசரப்படாமல், டென்சன் இல்லாமல் சாப்பிட வேண்டும்.
2. ஒரு முறை சாப்பிட்டு மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆவதற்கு முன்பு மறுபடியும் வேறு ஏதாவது ஒரு உணவு வகைகளைச் சாப்பிட ஆரம்பித்தல் கூடாது.
3. உணவுகளுக்கு இடையில் வேறு எதுவும் சாப்பிடுவது நல்லது அல்ல. அளவுக்கு மீறியும் சாப்பிடக் கூடாது.
4. சாப்பிடுவதற்கு சற்று முன்பும், பின்பும் உடல் களைப்பு உண்டு பண்ணும்படியான உடல், மனப் பயிற்சி செய்தல் கூடாது.
5. வேர்வைத் துவாரங்கள் அடைபடாதிருக்க, சோப்பு ஏதாவது உபயோகித்து குளித்து உடலை நல்ல பூத்துவாலையினால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
நன்றாகச் சமைக்கப்பட்ட, எளிதில் செரிமானம் ஆகக் கூடிய காய்கறிகள், மாமிசம் கலந்த உணவுகள் தான் அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்குச் சிறந்தது. வெஜிடேரியள் அல்லது சைவ உணவு மட்டும் சாப்பிடலாம் ஆனால் அசைவ உணவு மட்டும் சாப்பிடுவது நல்லதல்ல.
உருளைக்கிழங்கு, மாவுப் பண்டங்கள், இனிப்புப் பண்டங்கள், சர்க்கரை, நெருப்பில் வாட்டப்படாத ரொட்டிகள் முதலியவை தவிர்க்கப்பட வேண்டும். காபி, டீ, புகையிலை, மது அருந்துதலைத் தவிர்க்க வேண்டும்.
மனதில் எவ்வித கவலையும் இருத்தல் கூடாது. உடலில் குளிர் தாக்காத அளவில் தூங்கும் பொழுது கம்பளிப் போர்வைகளினால் போர்த்திக் கொள்ள வேண்டும். நெஞ்செரிச்சல் ஏதும் காணப்பட்டால் ஒரு சோடா வாங்கி அருந்திக் கொள்ளலாம். வாய்வு காரணமாக, வயிறு பொறுமிக் கொண்டு சிரமம் தந்தால் மிளகு கஷாயம் அருந்துங்கள். பெப்பர்மின்ட் நீர் அருந்தலாம். ஆகாரத்துடன் புதினா துவையல் செய்து சாப்பிட ஜீரணம் சீராகும்.
குழந்தைகளின் அஜீரணத்தை குணப்படுத்த
ஒரு மேஜைக் கரண்டி ஓமத்தை எடுத்து வெறு வானலியில் அதை வெடிக்கவிட்டு ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதித்து சிறிது வற்றியதும் எடுத்து அதனைத் தேன் கலந்து மூன்று வேளை உட்கொள்ளச் செய்யலாம்.
மிளகு அரைத் தேக்கரண்டி, உப்பு அரைத் தேக்கரண்டி இந்த இரண்டையும் மைபோல அரைத்து, ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் கலந்து வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு தேனுடன் கலந்து அருந்தி வர குழந்தைகளின் செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
உங்கள் நலன் கருதி
ஆயுர்வேதம்Dr. S. செந்தில் குமார்