புட்டிங் வகைகள்

Spread the love

காரமல் புட்டிங்

தேவை

பால் – 500 மி.லிட்டர்

முட்டை – 3

கஸ்டர்டு பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – 200 கிராம்

முந்திரிபருப்பு – 50 கிராம்

செர்ரி – 50 கிராம்

பாதாம் பருப்பு – 50 கிராம்

செய்முறை

புட்டிங் செய்ய வேண்டிய பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு சிறிதளவு தண்ணீரும் ஊற்றி சிறு தீயில் வைக்கவும். சர்க்கரை இளகி இளம் பிரவுன் காப்பி டிக்காஷன் கலராக மாறிவரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும். இது தான் காரமல்.

கஸ்டர்டு பவுடரைச் சிறிதளவு குளிர்ந்த பாலில் கட்டி விழாமல் கலக்கவும். முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, செர்ரி பழம் ஆகியவைகளை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

மீதி இருக்கும் பாலை நன்றாக வற்றக் காய்ச்சவும். அடுப்பில் காய்ச்சிக் கொண்டிருக்கும் போதே கஸ்டர்டு பவுடர் பாலைக் கொட்டிக் கலக்கவும். சர்க்கரை பாகுவையும் அதில் கொட்டி கலக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.

அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ளவும். 3 முட்டைகளையும் சூடான பாலில் அடித்து விடவும். கட்டி விழாத வண்ணம் இருக்க முட்டை அடிப்பானால் அடித்துக் கொண்டே கலக்கவும்.

புட்டிங்கிற்குரிய பால் இப்பொழுதே கட்டியாக இருக்கும். அதனை காரமல் செய்து வைத்திருக்கும் பாத்திரத்தில் ஊற்றி வாயை மெல்லிய சுத்தமான பேப்பர் வைத்து கட்டி ஆவியில் 5 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்தவுடன் ஒரு குச்சியால் குத்தினால் புட்டிங் ஒட்டாமல் இருக்கும். நறுக்கிய முந்திரி, பிஸ்தா வகைகள் செர்ரி தூவி பிரிஜ்ஜில் குளிர வைத்துச் சாப்பிடவும்.

கஸ்டர்டு புட்டிங்

தேவை

பால் – 500 மி.லிட்டர்

சர்க்கரை – 150 கிராம்

கஸ்டர்டு பவுடர் – 4 டீஸ்பூன்

எஸன்ஸ் (பிடித்தமான ருசிக்கு) – சில துளிகள்

செய்முறை

பாலை சுண்டக் காய்ச்சவும்.

அதில் சர்க்கரையைக் கொட்டி கலக்கி பாலை ஆற வைக்கவும்.

ஆறிய பாலில் கஸ்டர்டு பவுடரை கலக்கவும்.

கலக்கும் போது கட்டி விழாமல் பார்த்துக் கொள்ளவும்.

அத்துடன் எஸன்சையும் கலந்து, ‘புட்டிங்கோப்பையில் ஊற்றவும்.

பின்பு அதனை பிரிஜ்ஜில் வைக்கவும்

இது தான் கஸ்டர்டு புட்டிங்

பின்குறிப்பு

மேற்கண்ட கஸ்டர்டு புட்டிங்கில் சாக்லேட் பவுடர் 2 டீஸ்பூன் கலந்தால், அது அதிகப்படியான சுவையைத் தரும்.

ஆப்பிள் புட்டிங்

தேவை

ஆப்பிள் – 2

வெல்லச் சர்க்கரை – 50 கிராம்

வெண்ணெய் – 1 டீஸ்பூன்

இவை தவிர பிரட் வாழைப்பழ புட்டிங்கிற்குத் தேவையான பொருட்களை உபயோகிக்கவும்.

செய்முறை

ஆப்பிளைத் தோல் சீவி சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த ஆப்பிளுடன் வெல்லச் சர்க்கரை வெண்ணெய் இரண்டையும் சேர்க்கவும்.

வாழைப்பழத்திற்குப் பதிலாக ஆப்பிளை உபயோகித்து பிரட் வாழைப்பழ புட்டிங்கிற்குச் செய்தது போல் செய்ய வேண்டும். பேக் செய்யும் பெட்டி இல்லாவிட்டால், ஒரு வாணலியில் 2 முதல் 3 அங்குலம் உயரத்திற்கு மண்ணை நிரப்பவும்.

அடுப்பில் வைத்து மண்ணை நன்றாக சூடு ஏற்றிக் கொள்ளவும்.

புட்டிங் செய்யும் தட்டை மண்ணின் மேலே வைத்து ஒரு தட்டினால் வாணலியை மூடி விடவும். மேல் பாகம் மொர மொரப்பாக ஆகும் வரை பேக் செய்யவும்.

ஜாம் புட்டிங்

தேவை

பால் – 1 கப்

ரொட்டி – 5 துண்டுகள்

சர்க்கரை – 1 கப்

முட்டை – 3

வெனிலா எஸன்ஸ் – 3 துளிகள்

வெண்ணெய் – 3 டீஸ்பூன்

ஜாம் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

புட்டிங் பாத்திரத்தின் உள்பக்கம் வெண்ணெய் தடவி அதில் ரொட்டித் துண்டுகளை அடுக்கவும்.

பாலை நன்கு கொதிக்க வைத்து ரொட்டித் துண்டுகளின் மீது ஊற்றவும்.

அதை அப்படியே சிறிது நேரம் ஊற வைக்கவும்.

சர்க்கரை, வெண்ணெய், முட்டை, எஸன்ஸ் ஆகியவற்றை ஒன்று சேர்த்து கடைந்து கொள்ளவும்.

முட்டைக் கலவையை ரொட்டியுடன் ஒன்று சேரும் படி கலக்கவும்.

டிரைபில் புட்டிங்

புட்டிங் தயாரிக்க ஸ்பான்ஞ் கேக் செய்யும் முறை

தேவை

மைதா மாவு – 250 கிராம்

சர்க்கரை – 200

முட்டை – 6

பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்

உருக்கிய வெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்

வெதுவெதுப்பான தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்

ஸ்பான்ஞ்ச் கேக் செய்யும் முறை

மூன்று முட்டையின் மஞ்சள் கருவையும், மூன்று முட்டைகளையும், சர்க்கரையையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும். எஸன்ஸ் சேர்க்கவும். மைதா மாவை பேகிங் பவுடருடன் சேர்த்துச் சலிக்கவும்.

மூன்று முட்டையின் வெள்ளைக் கருவை முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும்.

சலித்த மாவை முட்டையும், சர்க்கரையும் கலந்த கலவையில் சிறிது சிறிதாகப் போட்டு விரல் நுனிகளால் கலக்கவும். உருக்கிய வெண்ணெயையும், வெது வெதுப்பான தண்ணீரையும் தயாரித்த கலவையில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.

கடைசியாக அடித்த வெள்ளைக்கருவைக் கலவையுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். 10 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில், உருக்கிய வெண்ணெய்யை மிகவும் நன்றாகத் தடவவும். கலவையைத் தட்டில் போட்டு நிரப்பி விடவும்.

400 டிகிரி யீ சூட்டில் சுமார் 30 டிகிரி முதல் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கேக் தயாரானவுடன் ஆற வைக்கவும்.

புட்டிங் தயாரிக்கத் தேவையான சாமான்கள்

ஆப்பிள் பழம்             2

வாழைப்பழம்             4

திராட்சைப்பழம்          100 கிராம்

க்ரீம்                     1 கப்

கஸ்டர்ட்                 1 கப்

புட்டிங்கின் மேலே அழகு செய்யத் தேவையானவை

சில்வர் பால்ஸ் (Silver Balls), செர்ரிப் பழங்கள்.

கஸ்டர்ட் தயாரிக்கும் முறை

கஸ்டர்ட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

பால் – 2 கப்

கஸ்டர்ட் பவுடரை 1/4 கப் பாலில் கரைத்துக் கொள்ளவும்.

மீதி இருக்கும் பாலை அடுப்பில் வைக்கவும்.

பால் கொதி வரும் பொழுது கரைத்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடரை அதில் விடவும்.

ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.

4 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.

புட்டிங் தயாரிக்கும் முறை

எல்லாப் பழவகைகளையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையை 11/2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

கேக்கைக் குறுக்கு வாட்டில் 4 மெல்லிய பாகங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் முதலில் ஒரு பாகம் கேக்வை வைக்கவும்.

தயாரித்துள்ள சர்க்கரைத் தண்ணீரைத் தெளிக்கவும். நறுக்கிய பழத்துண்டுகளைச் சிறிதளவு போட்டுழு பரவலாக நிரவிவிடவும்.

சிறிதளவு க்ரீம், கஸ்டர்ட் இவைகளைப் பழத்தின் மேல் ஊற்றவும்.

மற்றொரு கேக் துண்டைப் பழத்துண்டுகளின் மேல் வைக்கவும்.

முதலில் சொன்னது போல் சர்க்கரை தெளிக்கவும். பழத்துண்டுகள், சிறிதளவு க்ரீம், கஸ்டர்ட் முதலியவற்றை கேக்கின் மேல் சமமாகப் போடவும்.

மூன்றாவது கேக் துண்டையும் பழத்துண்டுகளின் மேல் வைத்து, முறையே சர்க்கரைத் தண்ணீர் தெளித்து, பழத்துண்டுகள், க்ரீம், கஸ்டர்ட் இவற்றைப் போட்டு நீரவி விடவும்.

கடைசி அடுக்கு கேக்கின் மேல் க்ரீமோ அல்லது கஸ்டர்ட் கலவையோ தடவி விடவும். மேலே செர்ரிப் பழங்கள், சில்வர் பால்ஸ், பழவகைகள் முதலியவற்றால் அலங்கரிக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து “சில்”லென்று பரிமாறவும்.

வாழைப்பழ புட்டிங்

தேவை

வெண்ணெய்                        45 கிராம்

சர்க்கரை (பொடித்தது)             150 கிராம்

மைதா மாவு                        180 கிராம்

வாழைப்பழம்                          –          3

பால் (கெட்டியானது)                 3/4 கப்

முட்டை                                3

வாழைப்பழ எஸன்ஸ் (அ) வெனிலா எஸன்ஸ் – 1/2 டீஸ்பூன்

செய்முறை

வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்றாகக் குழைத்துக் கொள்ளவும். மைதா மாவைச் சலித்துக் கொள்ளவும். முட்டையின் மஞ்சள் கருவை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். எஸன்ஸ் சேர்க்கவும்.

அடித்த முட்டையை வெண்ணெய்க் கலவையுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாக அடிக்கவும். மைதா மாவையும், பாலையும், குழைத்த கலவையுடன் மாறிமாறிச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். வில்லைகளாக நறுக்கிய வாழைப்பழத்தைக் கலவையுடன் சேர்க்கவும்.

கடைசியாக, நன்றாக அடித்த முட்டையின் வெள்ளையைக் குழைத்த கலவையுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். கலவையை வெண்ணெய் தடவிய புட்டிங் பாத்திரத்தில் போடவும். 350 டிகிரி f  சூட்டில் சுமார் 1 மணி நேரம் பேக் செய்யவும்.

பாதாம் ஜெல்லி புட்டிங்

தேவை

ஜெல்லி பாக்கெட்                     1

பைனாப்பிள் (அ) லெமன் ஜெல்லி

பால்                      –               1 லிட்டர்

சர்க்கரை                             100 கிராம்

ஜெலடீன்                              10 கிராம்

முந்திரிப் பருப்பு (அ) பாதாம் பருப்பு – 50 கிராம் (நற நறவென்று அரைக்கவும்)

மெல்லிய ரவை                       1 டேபிள் ஸ்பூன்

பாதாம் எஸன்ஸ்                      4 (அ) 6 துளிகள்

பச்சைக் கலர்                         சில துளிகள்

ராஸ்பெர்ரி கலர், ராஸ்பெர்ரி எஸன்ஸ் – சில துளிகள்

செய்முறை

ஜெல்லி பாக்கெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பின் படி ஜெல்லி தயாரிக்கவும். தயாரித்த ஜெல்லியை இருபாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும். ஒரு பாகத்தில் ராஸ்பெர்ரி ரெட் கலரும் ராஸ்பெர்ரி எஸன்ஸ் சில துளிகளும் சேர்க்கவும்.

மற்றொரு பாக ஜெல்லிக் கரைசலைப் புட்டிங் செய்யும் பாத்திரத்தில் விட்டு ப்ரீசரில் வைக்கவும். பாலை நன்றாகக் காய்ச்சவும்.பிறகு பாலில் ரவையையும் அரைத்த முந்திரி அல்லது பாதாம் பருப்பையும் போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.பிறகு அடுப்பிலிருந்து பாலை இறக்கிவிடவும்.

சூடு ஆறியவுடன் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கவும்.

ஜெலடீன் 1/4 கப் கொதிக்கும் தண்ணீரில் கலக்கவும். நன்றாகக் கரைந்த ஜெலடீனைப் பாலுடன் சேர்க்கவும். பாதாம் எஸன்ஸ், பச்சைக் கலர் சில துளிகள் ஜெலடீன் கலந்த பாலுடன் சேர்க்கவும். இந்தக் கலவையை இரு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும்.

ஒரு பாகத்தை ப்ரீசரில் உறைய வைத்த ஜெல்லிக் கரைசலின் மேல் மெதுவாக விடவும். (ஜெல்லிக் கரைசல் உறைந்த பின்னரே கலவையை மெதுவாக ஊற்ற வேண்டும்.)

பின்னர் இதையும் ப்ரீசரில் வைத்து உறைய வைக்கவும். இந்த பாதாம் பால் கலவை இறுகியவுடன், அதன் மேலே ராஸ்பெர்ரி கலர், எஸன்ஸ் கலந்த ஜெல்லிக் கரைசலை ஊற்றி ப்ரீசரில் வைத்து உறைய வைக்கவும்.

மேலே ஊற்றிய ராஸ்பெர்ரி கலர் ஜெல்லிக் கரைசல் உறைந்து இறுகியதும், மீதம் உள்ள மற்றொரு பாகமான பாதாம் பால் கலவையை ஊற்றிப் ப்ரீசரில் வைக்கவும்.  புட்டிங் தயாரானதும் மேலே செர்ரிப் பழங்கள், முந்திரிப்பருப்பு, சில்வர் பால்ஸ் வைத்து அலங்கரிக்கவும்.

இந்தப் புட்டிங்கை கண்ணாடி கிண்ணத்தில் செய்தால் வண்ண வண்ண கலர்களில் புட்டிங் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கும். கண்ணாடி வழியாகப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நன்றாக உறைந்த பின்தான் அடுத்த கலவையை ஊற்ற வேண்டும்.

வேகமாக ஊற்றக்கூடாது, அப்படி ஊற்றினால் முதலில் இறுகிய பாகத்துடன் கலந்து விடும். மெதுவாகக் கரண்டியினால் எடுத்து ஊற்றவும். ஜெலடீனைச் சேர்க்கும் பொழுது பாலும், ஜெலடீனும் ஒரே சூட்டில் இருக்க வேண்டும்.

பால் குளிர்ந்து இருந்தால் ஜெலடீன் உருண்டை உருண்டையாக மாறிவிடும். பாலுடன் ஒன்றாகச் சேராது.

பிரெட் பால் புட்டிங்

தேவை

ரொட்டித் துண்டுகள்           –            8

பால்                                         1 லிட்டர்

முந்திரிப் பருப்பு                –            6

செர்ரிப் பழங்கள்                           6

ஏலக்காய்ப் பொடி                          1/2 டீஸ்பூன்

சர்க்கரை                                       8 டீஸ்பூன்

பால் ஏடு                                      2 டேபிள் ஸ்பூன்

நெய்                              –             பொரிப்பதற்கு

செய்முறை

ரொட்டித் துண்டுகளை நீளமாக விரல் பருமனுக்கு வெட்டிக் கொள்ளவும். சூடான நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாலைக் கெட்டியாகக் காய்ச்சிக் கொள்ளவும்.

பொரித்த ரொட்டித் துண்டுகளைப் பாலில் போட்டு 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.

நெய் தடவிய பேக் செய்யவும் தட்டில் ஊறிய ரொட்டித் துண்டுகளைப் போடவும்.

மிருதுவாக்கிய பால் ஏட்டை மேலே தடவி விடவும். முந்திரி, செர்ரிப் பழங்களை அழகாக வைக்கவும்.

400 டிகிரி f சூட்டில் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.


Spread the love