நமது சர்மத்தின் மேற்பரப்பில் பல நுண்ணுயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இவை உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு சர்மம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சர்ம முடியும், நகங்களும் நுண்ணுயிர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதில் உதவுகின்றன. சர்மத்தின் செல்கள் 30 நாளுக்கு ஒரு முறை “இறந்து” போய் புது செல்கள் உண்டாவதும், நுண்ணுயிர்கள் அகற்ற உதவுகின்றது. செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கும் சர்ம எண்ணை “சீபம்”, பேக்டீரியா போன்ற கிருமிகளை தடுக்கும் பொருட்களை உடையது. தவிர தோலின் அமில, கார அலகு, அமிலத்தன்மை அதிகமுள்ளதாக இருப்பதால் பல கிருமிகள் தோலில் படிந்து வளர்ச்சியடைய முடியாது. ஆனால் அக்குள்களிலும், தொடையும், அடிவயிறும் சேரும் பாகங்களில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், இந்த இடங்களில் சுலபமாக நுண்ணுயுர்கள் தாக்கி, படை, சொறி, அரிப்பு இவற்றை உண்டாக்குகின்றன. ஒரு கலவையில் இருக்கும் ஒரு முனைப்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் மரபணுக்கள் தான் அந்த கலவையில் அமிலத்தன்மையையும், காரத் தன்மையையும் நிர்ணயிக்கின்றன. இந்த ஹைட்ரஜன் அயன்களின் அளவு பிஎச்7 ஆக இருந்தால் கலவையின் அமிலமும் காரங்களும் நடுநிலையாக இருக்கிறது என்று அர்த்தம். பிஎச் 7 க்கு மேலிருந்தால் காரத்தன்மை அதிகம். பிஎச் 7 க்கு குறைந்தால் அமிலத்தன்மை அதிகம். தோலை பொருத்தவரை, பிஎச் 5.5 முதல் 6 வரை இருந்தால் நல்லது.
சர்மத்தை பாதிப்பவை என்னவென்று பார்ப்போம்
அரிப்பு, தொற்றில்லாத கரப்பான், சினைப்பு பொதுவான அரிப்பு, டெர்மடைடீஸ் சோரியாசிஸ் முதலியன.
முகப்பரு
அழுத்தத்தால் ஏற்படும் புண்கள்
வியர்வை பிரச்சனைகள்
நிறமூட்டி கோளாறுகள் – இதில் அல்பினிஸம், விடிலிகோ, மெலாஸ்மா இவை அடங்கும்.
பாக்டீரியாவால் வருபவை – இதில் சீழ் கொப்புளங்கள், ஃபர்னங்கிலஸ், ஃபாலிக்குலைடீஸ், தோல் கட்டிகள், கொப்பளங்கள், செல்லூலைட்டீஸ் முதலியன.
ஃபங்கஸால் வருபவை – படர் தாமரை, கான்டீடாஸிஸ் முதலியன.
புல்லுருவிகளால் – சொறி, சிரங்கு, பேன் தொல்லை முதலியன.
வைரஸால் வருபவை – மரு, பாலுண்ணிகள், ஹெர்பஸ் தொற்று போன்றவை.
சூரிய வெப்பத்தால் ஏற்படுபவை.
வயது இவற்றை விரிவாக பார்ப்போம்.
அரிப்பும் உலர்ந்த தோலும்
உலர்ந்த, செதில் செதில்களாக தோலுரியும் சர்மம், எல்லா வயதினர்களுக்கும் ஏற்படும். குறிப்பாக 60 வயதிற்கு மேலிருப்பவர்களுக்கு எண்ணைப்பசை குறைவால் தோல் அரிப்பு ஏற்படும். குளிர்காலத்தில் அதிகமாகும். உலர்ந்த சர்ம நிலை என்பார்கள். இந்த வறட்சி தோல் மீதும் ஏற்படும். சரீரத்தின் உட்புறத்திலும் உண்டாகும். சர்மத்தின் மேல் ஏற்படும் வறட்சியால், உடலெல்லாம் சாம்பல் தடவியது போலிருக்கும். தேமல்கள் தோன்றும் . சொறிந்தால் சாம்பல் நிற துகள்கள் உதிரும்.
காரணங்கள்
எக்சிமா போன்ற சர்ம நோய்கள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள்
சுற்றுப்புற காற்றில் ஈரப்பசை குறைவு.
அடிக்கடி குளிப்பது, கடினமான சோப்புகளை உபயோகிப்பது.
சொறிந்த இடங்களில் கோடுகள் தோன்றும். மொத்தத்தில் அரிப்பு, சொறியும் உபாதைகள் உண்டாகும். உடம்புக்குள் கடுமையான மலச்சிக்கல் ஏற்படும். சாதாரண மருந்துகளுக்கு கேட்காத அளவு மலச்சிக்கல் இருக்கும்.
ஆயுர்வேத நிவாரணங்கள்
பிண்ட தைலத்தை சிறிது சூடாக்கி உடம்பெல்லாம் தடவி, 1/2 மணி ஊறி பயத்தம் மாவினால் தேய்த்து குளிக்க வேண்டும். சர்மத்தின் வறட்சி நீங்க, எண்ணை பசை தெரியும் வரை இந்த குளியலை தொடரவும்.
அருகம்புல் தைலத்தையும், பிண்டத் தைலத்திற்கு பதில் உபயோகிக்கலாம்.
ஆயுர்வேத தயாரிப்பான நீலி கரள காதி தைலமும் பயனளிக்கும்.
சோப்பை உபயோகிக்க வேண்டாம்.
சர்ம வறட்சியுள்ளவர்கள், நீர் நிறைந்த தக்காளி, புடலங்காய், பூசணி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாமிச சூப்பும் நல்லது. எள்ளுச் சோறு, தேங்காய் சாதம், நெய்யில் வறுத்த முந்திரிபருப்பு, திராஷை நிறைந்த பால் பாயசம் உடலில் எண்ணைபசையை உண்டாக்கும்.
வேலமரப்பட்டை, மாமரப்பட்டை இவற்றை தலா 25 கிராம் எடுத்துக் ஒரு லிட்டர் நீரில் காய்ச்சவும். எழும் ஆவியில் துணியை காட்டி (அ) நீரில் நனைத்து, அரிப்புள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்கவும்.
தேங்காய் பாலுடன் தக்காளி சாறு சேர்த்து அரிப்புள்ள இடங்களில் மசாஜ் செய்யவும்.
பாகற்காய் சாற்றை அரிப்புகளின் மேல் தடவலாம்.
அரிப்பும் தொற்றில்லா சினப்புகள் – உடலின் அரிப்பு ஏற்படுவது சகஜம். உடலின் நோய் தடுக்கும் எதிர்க்கும் சக்தியின் பிரதிபலிப்பாக கூட அரிப்புகள் ஏற்படும். அரிப்பைத் தவிர சினப்புகளில் சில சிறுவர்களுக்கும் சில வயது வந்தவர்களுக்கும் கூட இரத்த பரிசோதனையால் காரணம் தெரியாமல் போகலாம்.
அழுத்தப் புண்கள் படுக்கை புண்கள் – படுத்த படுக்கையாக இருப்பவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் படுக்கை புண்கள் இதில் அடங்கும். இவைகளை அலட்சியபடுத்த வேண்டாம். வலியும், வேதனைகளும் ஏற்படுவது மட்டுமின்றி, தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தோலின் அடுக்குகளுக்கு ஆக்சிஜன் தேவை. அதை ‘சப்ளை‘ செய்வது ரத்தம். தோலுக்கு அதிக ரத்தம் பாயும் படியாகவே தோலடுக்குகள் அமைந்துள்ளன. இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ரத்தம் பாயவில்லை என்றால், சர்மம் இறந்து விடும். முதலில் புறத்தோல் இறந்து விடும். இறந்து ஒடிந்து விடுவதால் புண்கள், ரணங்கள் ஏற்படும். இந்த திறந்த புண்களின் வழியே பாக்டீரியா, உடலுள்ளே நுழையும். ஒரே இடத்தில் மணிக்கணக்காக படுத்திருப்பது, உட்கார்ந்திருப்பது போன்ற நடவடிக்கைகள் சர்ம அழுத்தத்தை உண்டாக்கும். நார்மல் மனிதர்கள் தூங்கும் போது கூட படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் பக்கவாதம் வந்தவர்கள், கோமா போன்ற மயக்க நிலையில் இருப்பவர்கள் இவர்களால் உதவியின்றி, படுக்கும் உட்காரும் நிலையை மாற்ற முடியாதவர்கள். இவர்களுக்கு படுக்கை புண்கள் ஏற்படும்.
அதிகப்படியான ஈரப்பசையும் சர்ம அழுத்த புண்களை உண்டாக்கும். படுக்கையில் சிறுநீர் கழிந்து அது தெரியாமல் பல மணி நேரம் இருந்தாலும் படுக்கை புண்கள் ஏற்படும். இதர காரணங்கள். உராய்வுகள், ஊட்டச்சத்து இன்றி உடல் பலவீனமாதல் போன்றவை.
படுக்கைப் புண்களை வருமுன் தடுப்பது நல்லது. படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளை சரியாக கவனித்து, தோலில் சிவப்பாக திட்டுக்கள் தோன்றினால், படுக்கை நிலையை மாற்ற வேண்டும். சர்மத்தை ஈரப்பசையின்றி வைப்பது அவசியம்.
அழுத்தப் புண்களுக்கான சிகிச்சை ஆன்டி – பையாடிக் மருந்துகள். புரதம் செறிந்த உணவு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
வியர்வை பிரச்சனைகள் – தனியே விவரிக்கப்படுகின்றன.
நிறமூட்டி கோளாறுகள் – தனியே விவரிக்கப்படுகின்றன.
பாக்டீரியாவால் வருபவை
பாக்டீரியா இனத்தை சேர்ந்தது ஸ்டாபைலோகோகஸ் என்ற பாக்டீரியா. திராட்சை கொத்துகள் போல் கூட்டமாக இருக்கும். இந்த இனத்தின் ஒரு பிரிவான சர்மத்தில் அதிகம் காணப்படும். இதனால் பல தோல் தொற்று வியாதிகள் ஏற்படுகின்றன. இவை
சீழ் கொப்புளங்கள்- இந்த பாதிப்பு குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் அதிகம் நேரிடும். குழந்தைகள் மண், புழுதிகளில் விளையாடுவதால் சுலபமாக தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். சிவப்பு நிற பாகங்களாக முதலில் தோன்றி பிறகு வேகமாக உடல் எங்கும் பரவும். பிறகு சீழுடன் கூடிய கொப்புளங்களாக உருவாகி வெடித்து, சீழ் கசியும். இதில் ஒரு வகை தழும்பு, வடுக்களின்றி மறையும். ஒரு வகை வடுக்களை உண்டாக்கி விட்டு மறையும். அரிப்பு, சிறிதளவு வலி இருக்கும்.
முடிக்கால் உறைகளின் அழற்சி – சாதாரணமாக எல்லோருக்கும் வரும் இந்த அழற்சி, பல பிரிவுகளாக சர்மத்தை பாதிக்கிறது. முடிக்கால் உறைகள் பாதிக்கப்பட்டு, முடி இழப்பு ஏற்படும். முடி வளரும் நுண்ணிய உறைகளை சுற்றி வெள்ளை நிற சிறிய கட்டிகளாக தோன்றும். அரிப்பை உண்டாக்கும். சில சமயம் வலியும் இருக்கும் சிலருக்கு இந்த தொற்று தோன்றி தானாகவே மறையலாம். ஆழமாக, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் திரும்பவும் தோன்றும். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ஃபோலிகுலைட்டீஸை இரண்டு வகையாக சொல்லலாம். ஒன்று மேலெழுந்த வாரியான முடி அழற்சி. இதில் ஸ்டாபைலோகோகல் பாக்டீரியா உண்டாக்கும் தொற்றால் அரிப்புடன் கூடிய கட்டிகள் உடலில் எங்கெங்கு முடி உள்ளதோ அங்கெல்லாம் தோன்றலாம். ஆண்களின் தாடை பிரதேசத்தை தாக்கும் போது சவர அரிப்பு எனப்படும். சிலருக்கு முகச் சவரத்திற்கு பின் தாடையில் உள்ள முடிகள் வளைந்து, தான் தோன்றிய துவாரத்துகுள்ளேயே நுழைந்து விடும். இதனால் எரிச்சலுண்டாகும்.
இரண்டாவது வகை ஆழமான முடி அழற்சி.
முகப்பருக்களுக்கு எடுத்துக் கொள்ளும் ஆன்டி – பையாடிக் மருந்துகள் இந்த தொற்றை உண்டாக்கலாம். ஆழமான முடி அழற்சி முடியை முழுமையாக பாதிக்கும். வலி, சீழ் கட்டிகள், தழும்புகள் (கட்டிகள் மறைந்த பின்) முதலியன இதன் அறிகுறிகள்.
தோல் கட்டிகள்
உடலில் எங்கு வேண்டுமானாலும் உண்டாகும் கட்டிகள், சீழ் பிடித்தவை, வலியையும், வேதனையும் தருபவை. தோலடியுள்ள தந்துகிகள், நரம்பு நுனிகள் இவற்றையும் பாதிப்பதால் வலி இருக்கும். சில சமயம் ஜுரமும் இருக்கும். தோன்றும் காரணங்கள்.
பேக்டீரியா- இது வேர்வை சுரப்பிகளையும், முடிக்கால் உறைகளையும் தாக்கும். உடலில், முடிக்கால்கள் வழியாக அல்லது தோலில் ஏற்படும் வெடிப்பு, காயங்களின் வழியே உள்நுழையும்.
ரத்தத்தில் மாசு, அசுத்தங்கள் படிவது.
பேக்டீரியா தோலடியில் சேர்ந்து பெருகும். அப்போது சில நச்சுப் பொருட்கள் உருவாகும். இதனால் சுழற்சியும், வீக்கமும் ஏற்படும்.
இந்த நச்சுப் பொருட்களை தாக்குவதற்காக ரத்த வெள்ளை அணுக்கள் ஒடி வரும். இதனால் சீழ்ப்பை உருவாகும், இந்த பை கட்டியின் நடு பாகமாகும்.
அறிகுறிகள்
கால், தோள்கள், கழுத்துக்கும் இடுப்புக்கும் நடுவிலுள்ள பாகம், இவற்றை தாக்கும். சிவந்த, சிறு கட்டிகளாக எழும். பிறகு சீழ் படிந்து மஞ்சள் நிறமாகி, வலியும் வீக்கமும் அதிகமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் ராஜபிளவை எனப்படும்.
செல்லூலைடீஸ் – இது சர்மத்தையும், அதன் கீழ் உள்ள திசுக்களையும் பாதிக்கும் பாக்டீரியா தொற்று. இதை உண்டாக்குவது பாக்டீரியா. இந்த தொற்று நோய் பொதுவாக கால்களில் காணப்படும். முதல் அறிகுறி தோலின் ஒரு பகுதி, சிவந்து, மிருதுவாகி வலிக்கத் தொடங்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் தோல் சிறிது வீங்க ஆரஞ்ச் பழத்தோல் போல் இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் சாத்தியங்கள் அதிகம். நீர் நிறைந்த சிறிய அல்லது பெரிய கொப்புளங்கள் தோலின் மீது தோன்றும்.
இதன் ஒரு பிரிவுகள் சர்மம் சிவப்பாகி வீங்கியிருக்கும். குளிர் ஜுரம், வலி, தலைவலி, முதலியன தோன்றலாம். பலவீனமானவர்களை சுலபமாக தாக்கும்.
ஈஸ்ட் பாதிப்புகள்
கான்டிடா எனும் பூஞ்சன ஈஸ்ட், வாய், ஜீரண மண்டலம், மற்றும் பெண்களின் பிறப்புறுப்புகளில், சாதாரணமாக குடியிருக்கும். சில காரணங்களால் இந்த பூஞ்சனம், ஈரமுள்ள உடல் உறுப்புகளை பாதிக்க தொடங்கும். வெய்யில் காலம், புழுக்கம், சுகாதார குறைவு, இறுக்கமான நைலான் உள்ளாடைகள், இவைகளை காரணமாக சொல்லலாம். தோலிடுக்குகளால் சிவந்த சினைப்புகள், சொறி, கரப்பான்கள் ஏற்படும். குதம், பெண்களின் பிறப்புறுப்பு, அக்குள், வாய், மார்பகங்களின் கீழே, வயிறு தசை மடிப்புகள், இந்த ஈரப் பிரதேசங்களின் இந்த பூஞ்சன ஈஸ்ட் தாக்கும். ஆணுறுப்பிலும் ஏற்படலாம். இந்த பூஞ்சனம் உண்டாக்கும் பாதிப்பை கான்டிடாசிஸ் எனப்படுகிறது. இதன் விசித்திரம் என்னவென்றால் ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த தொற்று நோய் சுலபமாக பீடிக்கும். ஆன்டி – பையாடிக் மருந்துகள் கான்டிடாவை கட்டுப்பாட்டில் வைக்கும் பேக்டீரியாக்களையும் அழித்து விடும்.
ஃபங்கஸ்ஸால் வருபவை
பூஞ்சனம்- பூஞ்சனத் தொற்றுக்கள் சாதாரணமாக உடலின் ஈரமான பிரதேசங்களில் ஏற்படுகின்றன. தோலிடுக்குகளும் பூஞ்சனத்திற்கு புகலிடங்களாகும். கால் விரல்களின் நடுவே, மார்பகங்களின் கீழே (தோலுடன் உராயும் இடங்களில்), பிறப்புறுக்களை சுற்றி, பூஞ்சனத் தொற்று ஏற்பட ‘வசதி‘யான இடங்கள் பொதுவாக வட்ட வடிவத்தில் தோன்றும். குண்டானவர்களும் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் பூஞ்சன தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகின்றனர். இந்த பூஞ்சனம் ஒரு இடத்தில் குடியிருந்து வேறு இடங்களில் சினைப்பையும், அரிப்பையும் உண்டாக்கும். காலில் ஏற்படும் தொற்றினால் கை விரல்களில் அரிப்பு உண்டாகலாம். சுத்தம் சுகாதார குறைவினாலும் ஏற்படும்.
தோபீஸ் இச், ரிங்வேர்ம், படை, படர் தாமரை என்று மற்றவர்களாலும் அழைக்கப்படும் சருமப்பற்று அல்லது பூஞ்சைத் தொற்று ட்ரைக்கோ பைட்டான் ரூப்ரம் என்னும் ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுவதாகும்.
சருமத்தில் நோய்த் தொற்று உண்டாக்குகின்ற நுண்ணுயிரிகளில் பூஞ்சைகள் முதலிடம் பெறுகின்றன. ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த இந்த பூஞ்சைகள் உருவிலும் வடிவிலும் பல வகைப்பட்டவை.
காவி அல்லது சற்று பழுப்பு நிறத்தில் திட்டு, திட்டாகத் தோன்றும் இப்படையானது மேல் தொடையின் உட்புறங்கள், பிறப்புறுப்புக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பெரினியம் எனப்படும் பகுதி, ஆணுறுப்பில் விரைகளின் இடங்களிலும், தொடைகளின் முடிவிலுள்ள சில சிறுமடிப்புகளிலும் ஏற்படக் கூடியது. இதனால் மேற்சொன்ன இடங்களில் தொடர்ந்த அரிப்பு, நமைச்சல், தடிப்பு, எரிச்சல் ஏற்படும். நாட்பட்டுப் போகின்ற போது அரித்துச் சொரிந்த இடம் புண்ணாகி விடுவதுடன் நீர் போன்ற சிறு கசிவும் அந்த இடங்களில் ஏற்படும்.
படர்தாமரை உடலின் எந்த பாகத்தில் ஏற்படுகின்றோ அந்தப் பாகத்தின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக கால் விரலில் ஏற்படும் படை டினியா பெடிஸ் எனப்படுகிறது.
சொறி சிரங்குகள் அரிப்பு பூச்சியினால் சொறி, சிரங்குகள் உண்டாகின்றன. வீட்டில் ஒருவருக்கு இந்த தொற்று வந்தால் போதும், அனைவருக்கும் பரவி விடும். இந்த வகை பெண் பூச்சி, புறத்தோலில் ஒரு சுரங்கப் பாதையை தோண்டி அதில் தனது முட்டைகளை இடுகிறது. முட்டைகள் சில நாட்களில் பொரித்து குஞ்சுகளாகும்.
இந்த பாதிப்பின் முக்கிய அறிகுறி – அரிப்பு, தாங்க முடியாத அரிப்பு, அதுவும் இரவில் அதிகமாக அரிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்மில்லாமல், வீட்டில் உள்ள அனைவருக்கும் சிகிச்சை தர வேண்டும். படுக்கை, போர்வைகள், இதர துணிமணிகள் இவற்றை நன்றாக தோய்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வைரஸ் தொற்று நோய்கள்:
அ. மரு, பாலுண்ணி என்று நாம் சொல்லும் கட்டிகள் வைரஸ் தாக்குதலால் ஏற்படுகின்றன. ஆங்கிலத்தில் Warts என அழைக்கப்படும் மருக்கள் எந்த வயதிலும் வரலாம். பெரியவர்களை விட சிறுவர்களுக்கு அதிகம் ஏற்படும். தேகத்தில் ஒரே ஒரு மரு தோன்றலாம். நுலீற்றுக்கணக்கிலும் தோன்றலாம். முக்கால் வாசி மருக்கள் ஆபத்தில்லாதவை. பிறப்புறுப்புகளில் தோன்றும் மருக்கள் தான் அபாயமானவை. மருக்கள் அவற்றின் வடிவமைப்பு மற்றும் தோன்றும் இடங்களை வைத்துப் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.