வியாதிக்கேற்ற பத்திய உணவு முறை

Spread the love

ஆயுர்வேதம் தனது வைத்திய முறைகளில் உணவுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கிறது. மருந்துடன், வியாதிக்கேற்ற பத்திய உணவையும் பரிந்துரைக்கிறது. இந்த பத்திய உணவு முறைகளை கடைப்பிடிக்காவிட்டால், மருந்துகளால் மட்டும் பயனிருக்காது.

ஆயுர்வேதம், வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் சமநிலை கெட்டால் வியாதிகள் உண்டாகும் என்ற அடிப்படை கருத்தை கொண்டது. பத்திய உணவு, தகுந்த மருந்துடன் இணைந்து, நோயை களைய, உதவுகிறது. நம்மில் பலர், பத்தியம் என்றாலே பயப்படுகிறார்கள். ஆங்கில முறை வைத்தியத்தில் மருந்துகளுக்கு பத்தியம் இல்லை. மருந்துகள் மட்டும் சாப்பிட்டால் போதாதா என்று நினைப்பவர்கள் இங்கு அதிகம். ஆனால் பத்தியமின்றி நோயைக் குணப்படுத்த இயலாது.

உதாரணமாக அஜீர்ணம் ஜுரத்தை உண்டாக்கும். இயற்கை வெளிபாடுகளை தவிர்ப்பது, நீண்ட பிரயாணம், போன்ற காரணங்களால் உண்டாகும். இந்த நோய்க்கு, சூடாக வெந்நீர் சாப்பிட்டால் நல்லது. வெந்நீரை சிறிது சிறிதாக குடித்து வந்தால், உடலின் இயற்கை சூடு அதிகமாகிறது. வாயு தோஷம் கெட்டிருப்பதை வெந்நீர் நேர்ப்படுத்துகிறது. உடல் லேசாகிறது. இங்கு வெந்நீர் பத்தியம்.

பத்திய முறைகள்  

உப்பில்லா பத்தியம்:- உப்பில்லா பண்டம் குப்பையிலேஎன்பார்கள். இப்போது உப்புள்ள பண்டம் தான் குப்பையிலே. உப்பு உடலுக்கு தேவையான பொருள் தான். வயிற்றில் அக்னி‘, உப்பால் வளருகிறது. உணவில் ருசி கூட்டுவது உப்பு. ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பு தான் மனித உடலுக்கு தேவை. நாம் சாப்பிடும் உணவுகள், காய்கறிகளிலிருந்தே உடலுக்கு தேவையான உப்பு கிடைக்கும். எனவே தனியாக உப்பு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அதிக உப்பு ஆபத்து. இதன்

விளைவுகள்:-

அதிக உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயநோய் ஏற்படும். சிலருக்கு சோடியம் உப்பை வெளியேற்ற முடியாது. அப்போது தேங்கிய உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்தக் குழாய்களில் உப்பு சேர்ந்து, குழாய்களில் உட்புறத்தில் படிந்து, இரத்தம் முழுவதுமாக ஓட முடியாமல் தடை செய்யும்.

உடலிலிருந்து உப்பு வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேறும். மஹோதரம் போன்ற வியாதிகளில் உப்பு, குடலின் வெளியே சவ்வுகளிடம் தேங்கி விடும். இந்த மாதிரி சமயங்களில் உப்பில்லா பத்தியம் பலனளிக்கும். மகோதரத்திலும், வேறு காரணங்களாலும் அதிக அளவில் சிறுநீர் போவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை உப்பு அதிகமாக்கும். உப்பை நிறுத்துவது தான் வழி.

உடல் அரிப்பு, படை, அக்கி போன்ற தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் உப்பை தவிர்க்க வேண்டும். உப்பில்லா பத்தியம் மனநிலைமையும் சரிவர இருக்க உதவுகிறது. வியர்வை தோன்றாது. அசதி குறையும்.

உப்பில்லா பத்தியத்தை கடைப்பிடிக்கும் போது, பால், மோர், இவை சேர்ந்த அன்னம், பொங்கல் போன்றவற்றை சாப்பிடலாம். புளி, மிளகாய், எண்ணை, முற்றிய காய்கறிகள் இவைகளை உப்பின்றி சமைத்து உண்பதால் கேடுகள் விளையும். உப்பை நிறுத்துவதின் முக்கிய காரணம் நுண்ணிய ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதே.

உப்பை அறவே குறைக்க முடியாதவர்கள் இந்துப்பை சேர்த்துக் கொள்ளலாம். நல்ல தர முள்ள இந்துப்பு கிடைப்பது கடினம். உப்பை வறுத்து சேர்ப்பதும் உண்டு. மாதத்தில் பல நாட்கள் உப்பை முழுவதும் தவிர்த்து இதர நாட்களில் உப்பை வறுத்தும் உபயோகிக்கலாம்.

புளிப்பில்லாத பத்தியம்  

புளி, அரிசி, துவரை, உளுந்து இவற்றை செரிக்க உதவுகிறது. குடலில் வாயுவையும் மலத்தையும் தேங்காமல் வெளியேற்ற உதவும். புளியை தவிர எலுமிச்சை, நாரத்தை போன்றவைகளும் புளிப்புச் சுவை உள்ளவை.

அதிக அளவில் புளியை உபயோகித்தால், இரப்பை நோய்கள், வயிற்றில் புண், ஜீரணக் குறைவு, நெஞ்செரிச்சல் போன்றவை தோன்றும். தோல் வியாதிகளும் உண்டாகலாம். சிறுநீரக கோளாறுகளுக்கும் புளி காரணமாகலாம். இந்த நிலைமைகளில், புளியை தவிர்க்க வேண்டும். புளி மட்டுமல்ல எலுமிச்சம் பழம், தக்காளி, புளித்த மோர் இவற்றையும் தவிர்க்க வேண்டும். பழுத்த புளியை 6-7 மாதங்கள் ஜாடியில் வைத்து, எடுத்து உபயோகிக்கும் போது, அனலிலிட்டு வாட்டிய பின் உபயோகித்தால் புளியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பத்திய உணவுகளுக்காக புளி பதப்படுத்தப்பட்டு உபயோகமாகிறது.

வாய்வு பதார்த்தங்களை தவிர்க்கும் பத்தியம்

கிழங்கு வகைகள், வாழைக்காய், கொத்தவரங்காய், பூசணி, பரங்கி, பருப்பு இவை வாய்வை உண்டாக்குபவை. இவை ஜீரணமாக தாமதமாகும். வயிறு முழுவதும் வாயு சேர்ந்து, மேலேறி விலாவில் வலியை உண்டாக்கும். மூட்டுவலி உண்டாக்கும். இந்த வாய்வுப் பண்டங்களுக்கில்லாத பத்திய உணவு மேற்கொண்டால், வாய்வின் அழுத்தம் குறைந்து, பாதிப்புகள் நீங்குகின்றன.

கரப்பான் பண்டம் நீக்கிய பத்தியம்

கரப்பான் போன்ற தோல் வியாதிகள் உள்ளவர்கள், இட்லி, தோசை, முட்டைக்கோஸ், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, தக்காளி, நல்லெண்ணை, மாங்காய், புதிய அரிசி, புளித்த தயிர், மீன் இவற்றை தவிர்க்க வேண்டும்.

தவறான உணவு சேர்க்கைகள் (விருத்தாஹாரங்கள்)

சில உணவுகள் ஒன்றுக்கொன்று சேராதவை. இவற்றை தனித்து உண்ண வேண்டும். ஆயுர்வேதம் இவற்றை தனித்துக் கூறும். இந்த ஒவ்வாத கலவை உணவுகளை தொடர்ந்து உபயோகித்தால் கெடுதல் ஏற்படும். இவை பின் வருமாறு

விருத்தாஹாரங்கள்

தயிருடன் வாழைப்பழம், மீன், மாங்காய், கோழிக்கறி சேர்க்கக் கூடாது.

உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், மிளகாய் இவற்றுடன் வெள்ளரி, தயிர், பால் சேர்க்கக் கூடாது.

பாலுடன் புளித்த மாவு பண்ங்கள் (இட்லி), மீன், பச்சை முள்ளங்கி சேர்க்கக் கூடாது.

முட்டையுடன் பால், மாமிசம், வாழைப்பழம், மீன் சேர்க்கக் கூடாது.

எலுமிச்சைக்கு விருத்தாஹாரங்கள் தயிர், தக்காளி, பால், வெள்ளரி, பால் சேர்த்த டீ.

மாங்காயுடன் வெள்ளரி, சீஸ், தயிர் சேர்க்கக் கூடாது.

முள்ளங்கிக்கு உளுந்து சேர்க்கக் கூடாது.

மிளகுடன் மணத்தக்காளி சேர்க்கக் கூடாது.

தேனுடன் சூடான உணவு நெய், நல்லெண்ணெய் சேர்க்கக் கூடாது.

சூடான உணவுடன் தயிர் சேர்க்கக் கூடாது.

உணவு நலம் ஜனவரி 2011

வியாதிக்கேற்ற, பத்திய, உணவு முறை, ஆயுர்வேதம், உணவு, மருந்து, ஆயுர்வேதம், வாதம், பித்தம், கபம், பத்திய உணவு, மருந்து, அஜீர்ணம், ஜுரம், பத்திய முறைகள், உப்பில்லா பத்தியம், உடல் அரிப்பு, படை, அக்கி, தோல் வியாதி, ரத்தக் குழாய், புளிப்பில்லாத பத்தியம்,    புளி, அரிசி, துவரை, உளுந்து, இரப்பை நோய்கள், வயிற்றில் புண், ஜீரணக் குறைவு, நெஞ்செரிச்சல், சிறுநீரக கோளாறு, வாய்வு, பதார்த்தங்களை, தவிர்க்கும், பத்தியம், கிழங்கு வகைகள், வாழைக்காய், கொத்தவரங்காய், பூசணி, பரங்கி, பருப்பு, மூட்டுவலி, கரப்பான், பண்டம், நீக்கிய, பத்தியம், இட்லி, தோசை, முட்டைக்கோஸ், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, விருத்தாஹாரங்கள்,


Spread the love