ஆஸ்துமாஉணவு

Spread the love

“குளிர் காலத்தில் வரும், தூசியிலே நின்னா வரும்” என்ற நிலைமையைத் தாண்டி, எப்போதுமே நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்! என நெஞ்சுக்குள் எதோ சிம்பொனி கேட்டுக் கொண்டேயிருந்த ஆஸ்துமாக் காலம் இது. ஆஸ்துமா சிகிச்சையில் உணவு ஒரு மருந்தும் கூட.

ஆஸ்துமா இருந்தால் காலை பானாமாக மறந்தும் பாலோ அல்லது எந்த பவர் சீக்ரட் என்ர்ஜியோ கலந்த பாலோ கொடுக்கத் தேவையில்லை. பல் துலக்கியதும் முதலில் 2-3 குவளை நீர் வெதுவெதுப்பான நிலையில் அருந்துவது நல்லது.அதன் பின் பால் கலக்காத தேநீர் சிறந்தது. காபி, தேநீர் சாப்பிட்டா அதே மாதிரி கருப்பாயிடுவே” என்று உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தயவு செய்து பூச்சாண்டி காட்டாதீர்கள்.

வெளுத்த பாலை விட கறுத்த தேநீருடன் காபியும் எவ்வளவோ மேல். நல்ல வீசிங்கில் இரவில் சிரமப்பட்டிருந்தால் கற்பூரவல்லி, துளசி,கரிசலாங்கண்ணி என இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்துப் போட்டு கசாயமாக வைத்து இனிப்புக்குத் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நெஞ்சில் இரவில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி உடனடி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக இந்த கலவை கசாயத்தைக் காலை பானமாக குடித்து வர இரைப்பு கண்டிப்பாகக் கட்டுப் படும். கூடவே தும்மல் இருந்தால் முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவில் வீசிங்கில் சிரமப்பட்டவர்க்கு காலை உணவு சாப்பிடப் பிடிப்பதில்லை. பசியும் இருப்பதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகுரச சாதம், இட்லி என ஏதோவொன்றை சாப்பிடுவது நல்லது.ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல், அரை வயிற்றுக்குச் சாப்பிடுவதும் வேண்டும். இடையில் தேநீர் சாப்பிடுவதும் நல்லது.

மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரை, புடலை, சவ்சவ் இவற்றைத் தவிர்க்கலாம். மிளகு, ரசத்துடன் நிறைய கீரை காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், சீரகத்தை வேகவைத்து எளிதில் மலம் கழிக்க வைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.வாயு உண்டாகும். செரிக்க நேரமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரைத் தவிர்க்கலாம். சில வகை காய்கள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வேண்டும். அதே சமயத்தில் தன் நாவுக்குப் பிடிக்காததை எல்லாம்,”அய்யோ எனக்கு பாகற்காய் அலர்ஜி! வெண்டைக்காய் ஒத்துக்காது” என நடிக்கத் துவங்கினால் இழப்பு கூடும்; இழப்பும் கூடிடும்.

மாலையில் தேநீரோ, சுக்குக் கசாயமோ எடுப்பது இரவு சிரமத்தை பெருவாரியாகக் குறைக்கும். இரவு உணவை முடிந்தவரை ஏழரை மணிக்கு முன்னதாக எடுத்துப் பழகிக் கொள்வது நல்லது. கோதுமை ரவை கஞ்சி, இட்லி நல்லது. பரோட்டா, பிரியாணி என படுக்கைக் போகும் முன் புகுந்து உணவில் விளையாடுவது நல்லதல்ல. படுக்கைக்குப் போகும் முன் புகுந்து உணவில் விளையாடுவது நல்லதல்ல. படுக்கைக்குப் போகும் போது காலி வயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும்.

பல ஆஸ்துமா நோயாளிக்கு வாழைப்பழம் குறித்து தேவையற்ற அச்சம் உள்ளது. நாட்டு வாழைப்பழம் தினசரி மாலை வேலையில் சாப்பிடலாம். மலத்தையும் இளக்க அது உதவிடும். ஆற்றலையும் தரும். மோரில் அல்லது தற்போது சந்தையில் கிடைக்கும் ஹப்பிரிட் மஞ்சள் வாழை கடைசித் தேர்வாக மட்டுமே இருக்கலாம்.

எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை பழங்களை மருந்து எடுத்துவரும் காலத்தில் கண்டிப்பாக 6,7 மாதம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.பகல் பொழுதில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாச்சித் துண்டுகள் சிறிது மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.

இனிப்புப் பண்டங்கள் ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. ரொம்ப ஆசைப்பட்டால் பகல் வேளையில் கொஞ்சமாக சுவைக்கலாம். அதுவும் குளிர் காலத்தில் தேவையில்லை. பெரியவர்கள் மதிய உணவுக்குப் பின்னர் 2 வெற்றிலை சுவைப்பது ஆஸ்துமாவுக்கு நல்லது தான்.

வெற்றிலையும் மிளகும் ஆஸ்துமா நோயில் பயனளிப்பதை நம் ஊர் சித்தர்கள் மட்டுமல்ல. பல வெளிநாட்டு ஆய்வாளர்களுமே சொல்லியுள்ளனர். வெற்றிலையுடன் புகையிலையை மட்டும் மறந்தும் சேர்த்து விட வேண்டாம். புற்று நோய் வந்துவிடும்.

சிகப்பரிசி அவல், புழுங்கலரிசிக் கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக்கீரை பொரியல், மணத்தக்காளி வற்றல்,இலவங்கப் பட்டைத் தேநீர், இவையெல்லாம் ஆஸ்துமாகாரர் மெனு கார்டில் அவசியம் இடம் பெற வேண்டும்.

சிறந்த உணவுத் தேர்வுடன், சரியான சித்த மருத்துவம், மூச்சுப் பயிற்சி எனும் பிராணாயாமம் இருந்தால் ஆஸ்துமாவைக் கண்டு பயம் கொள்ளத் தேவையே இல்லை.

ஆயுர்வேதம்.காம்


Spread the love