பத்திய உணவுகள்

Spread the love

உடல் நிலை பாதிக்கும் பொழுது அமையும் பத்திய உணவுகள்

ஒவ்வொரு வகையான நோய்களுக்கும் ஒவ்வொரு வகையான உணவுக் கட்டுப்பாடுகள் வைத்திய முறைகளில் கூறப்பட்டுள்ளன. சில வகையான நோய்களிலே, நோயாளி சாதாரண உணவுகளை சாப்பிடலாம். ஆனால், பெரும்பாலான நோய்களில் முக்கியமாக இரைப்பை, குடல் சார்ந்த நோய்களில் பத்தியமான உணவுகள் மிகவும் அவசியம்.

நோய் எதுவாக இருந்தாலும், சரி, நோயாளி ஏராளமான நீரைக் குடிக்க வேண்டும். அவ்வாறு கொடுப்பதற்குரிய நீரானது, நன்றாகக் காய்ச்சி பின்னர் குளிரச் செய்து இருக்க வேண்டும். கனிந்த பழங்கள், பழங்களிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகள் நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவுகள் ஆகும். பொரித்த முட்டைகளையும், நன்றாக வெந்த முட்டைகளையும் நோயாளிக்குக் கொடுத்தல் கூடாது. ஆனால், முட்டைகளைப் பக்குவம் செய்து நோயாளிகளுக்குக் கொடுக்கலாம்.

சிறிதளவு நீரைக் கொதிக்க வைத்து, அதனுள்ளே முட்டையை உடைத்து விட்டு, முட்டையின் வெண் பகுதியெல்லாம் வெளேரென்று ஆனது முட்டையை கொதிக்கிற நீரிலிருந்து எடுத்து விட வேண்டும். ஒரு சிறு பாத்திரத்தில் அரைப்படி நீர் விட்டுக் காய்ச்சி, கொதிக்க ஆரம்பித்ததும், பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு, நீரில் இரண்டு முட்டைகளைப் போட வேண்டும்.

பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மட்டும் முட்டைகளை நீரில் இருந்து எடுக்காமலிருக்க வேண்டும். சரியாக பதமாக இருந்தால், முட்டையின் உட்பாகம் மெல்லிய இழுது போல உறைந்திருக்கும். இப்படி பக்குவம் செய்யப்பட்ட முட்டைகள் எளிதில் ஜீரணமாகின்றன.

முதலிலேயே முட்டையின் வெண் பகுதியைக் கரண்டியைக் கொண்டு நன்றாக அடித்து, அது கெட்டியாக நுரையாக மாறும் படி செய்ய வேண்டும். பிறகு மஞ்சள் பகுதியையும் இப்படியே அடித்து இவைகளுடன் கொஞ்சம் சர்க்கரையையும் ஓரிரு ஸ்பூன் அளவு அன்னாசி பழச்சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட முட்டை உணவை அரை டம்ளர் அளவுள்ள பாலுடன் அல்லது பழச் சாறுடன் சேர்த்துக் கலக்கி நோய் வாய்ப்பட்டவர்களுக்கு அருந்தக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்வதற்கு எக்னாக் என்று பெயர்.

வயிற்றோட்டம், சீதபேதி, இரைப்பை அல்லது குடல் சார்ந்த கடுமையான நோய்கள் காணப்படும் பொழுது நோயாளிக்கு தரக் கூடிய உணவு சில சமயங்களில் முட்டை நீர் தான்.

முட்டை நீர் எவ்வாறு செய்வது?

முன்பே காய்ச்சிக் குளிரச் செய்த ஒரு டம்ளர் நீரிலே, முட்டையின் வெண் பகுதியை ஊற்றிக் கலந்து முட்டை நீர் செய்து கொள்ளலாம். கொஞ்சம் எலுமிச்சம் பழச் சாற்றை இதனுடன் கலந்து வாய்க்குச் சுவையாக இருக்கும்படி செய்து கொள்ளலாம்.

நோய் வாய்ப்பட்டிருக்கும் சமயங்களில், பெரியவர்களாயினும் சரி, சிறியவர்கள் எனினும் சரிஞ் மிகச் சிறந்த உணவு சோற்றுக் கஞ்சி அல்லது கோதூமைக் கஞ்சி தான். பழுப்புக் கோதுமை மாவை அல்லது அரிசியை உபயோகித்து இந்தக் கஞ்சியை தயாரித்துக் கொள்ள வேண்டும்.

நன்றாகக் காய்ச்சப்பட்ட புதுப்பாலும், சுட்டு எடுத்த உருளைக் கிழங்குகளும் கொதிக்கிற நீரில் அழுத்தி எடுக்கப்பட்ட பழங்களும், ஆரோரூட் கஞ்சியும், டோங்கு ரொட்டியும் நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்.

வெங்காயம், பூண்டு முதலிய சாதாரண காய்கறிகளை நோயாளிகள் தவிர்த்து விட வேண்டும். கார உணவு வகைகள், மிளகு, இஞ்சி, அதிகமாக உப்பு சேர்த்துள்ள உணவுகள், இனிப்புகள் உள்ள உணவுகளை நோயாளிகள் தவிர்த்து விட வேண்டும்.

நோயாளிகளுக்கு உணவைத் தயார் செய்யும் போது, உணவுகள் எளிதாக ஜீரணமாகி, பசியை உண்டாக்கக் கூடிய சுத்தமான உணவுகள் தானா என்பதை நாம் முக்கியமாக எண்ணிப் பார்ப்பது அவசியம்.

பா. முருகன்


Spread the love