உதர விதானம் (Diaphragm)
நுரையீரலின் எலும்பு தசையும் இல்லாததால், சுவாசம், விலா எலும்பு தசைகள், அடிவயிறு தசைகள், கழுத்து தசைகளாலும் மற்றும் உதர விதானத்தாலும் நடைபெறும். உதரவிதானம் கோவில் மணி போன்ற அமைப்பை கொண்ட தசை விரிப்பாகும். அடிவயிற்றையும், நுரையீரலையும் பிரிக்கிறது. மார்பு, விலா எலும்புக் கூடு மற்றும் முதுகெலும்பு இவற்றின் அடிபாகத்துடன் உதரவிதானம் இணைக்கப்பட்டிருக்கும். இது சுருங்கும் போது, மார்புக்கூட்டின் நீளத்தையும் குறுக்களவையும் அதிகப்படுத்துகிறது. இதனால் நுரையீரல் விரிவடையும். காற்றை வெளியேற்ற, நுரையீரலின் மீட்சித்தன்மை (Elasticity) உதவுகிறது. எனவே ஓய்விலிருக்கும் மனிதனுக்கு சுவாசத்திற்காக செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது, பல தசைகள் காற்றை வெளியேற்ற உதவுகின்றன. அடிவயிற்றின் தசைகள் சுருங்கி, உதரவிதானத்தை அழுத்த அது தன் பங்குக்கு நுரையீரலை அழுத்த, காற்று வெளியேறுகிறது.