நீரிழிவு நோயாளிகளுக்கான சிற்றுண்டி உணவுகள்

Spread the love

புதினா – ராகி தோசை

தேவையான பொருட்கள்

ராகி மாவு   –1கப்

அரிசி மாவு  –2டே.ஸ்பூன்

ரவை        –3டே.ஸ்பூன்

புதினா       –3/4கப்

பச்சை மிளகாய்-2

துருவிய இஞ்சி-1/2டீஸ்பூன்

பூண்டு        –2பல்

சீரகம்         –1டீஸ்பூன்

வெங்காயம்   –1

உப்பு, நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப

செய்முறை

புதினா, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் முதலியவற்றை பொடிப் பொடியாக நறுக்கவும். ராகி மாவு, அரிசி மாவு, ரவை, உப்பு முதலியவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சிறிது அதிகமாக தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய புதினா, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், இஞ்சி முதலியவற்றை சேர்த்து, சீரகத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கி தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி சுட்டு எடுத்து வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.

கோதுமை ரவை புலாவ்

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை –1கப்

பட்டாணி        –2டே.ஸ்பூன்

தக்காளி         –1

வெங்காயம்      –1

குடமிளகாய்      –1

கேரட்            –1

பச்சை மிளகாய்   –2

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2டீஸ்பூன்

பட்டை           –1சிறுதுண்டு

நெய் (அ) எண்ணெய்-2டீஸ்பூன்

தண்ணீர்          –2கப்

உப்பு              -தேவைக்கேற்ப

செய்முறை

வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் முதலியவற்றை ஒரே அளவுள்ள சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், தக்காளி, கேரட், பட்டாணி என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு பேஸ்டையும் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கடைசியாக கோதுமை ரவையையும் போட்டு வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி ஒரு சத்தம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

கோதுமை ரவை இட்லி

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை –4டே.ஸ்பூன்

கடலைப்பருப்பு  –2டே.ஸ்பூன்

புளித்த தயிர்    –1கப்

எண்ணெய்      –1டீஸ்பூன்

உப்பு            -தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் –1

கொத்தமல்லி   -சிறிது

மிளகு         –1/4டீஸ்பூன்

செய்முறை

பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை ரவையையும், கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு, மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளித்த தயிர் எண்ணெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

மேத்தி பராத்தா

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு –1கப்

பச்சை மிளகாய் –2

மிளகாய் பொடி –1டீஸ்பூன்

மஞ்சள் பொடி –1/2டீஸ்பூன்

இஞ்சி விழுது –1/2டீஸ்பூன்

ஓமம்         –1டீஸ்பூன்

பெருங்காயம்  –1சிட்டிகை

மேத்தி இலை –1கப்

உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப

(மேத்தி – வெந்தயக் கீரை)

செய்முறை

பச்சை மிளகாயை நசுக்கிக் கொள்ளவும். மேத்தி இலையை நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். பின்னர் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக தோசைக்கல்லில் சுட்டு எடுத்து தாலுடன் சூடாகப் பரிமாறவும்.

தால் பராத்தா

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு-1கப்

பாசிப்பருப்பு    –1/2கப்

சீரகம்          –1டீஸ்பூன்

மிளகாய் பொடி –1/4டீஸ்பூன்

மஞ்சள் பொடி  –1சிட்டிகை

கொத்தமல்லி இலை-1டே.ஸ்பூன்

பச்சை மிளகாய் –2

உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப

பெருங்காயம்   –1சிட்டிகை

செய்முறை

கோதுமை மாவுடன் சிறிது எண்ணெய், உப்பு சேர்த்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பச்சை மிளகாயை நைசாக நசுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்து பின் பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, வேக வைத்த பருப்பு முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். தண்ணீர் இல்லாமல் வற்றும் வரை வதக்கவும். கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும். பின்னர் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி உருண்டைகளுக்கு நடுவில் வைத்து பராத்தாக்களாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுத்து, வெஜிடபிள் சாலடுடன் சூடாகப் பரிமாறவும்.

ராகி புட்டு

தேவையான பொருட்கள்

ராகிமாவு   –1கப்

அரிசிமாவு  –1கப்

துருவியதேங்காய்-1/2கப்

உப்பு       -தேவைக்கேற்ப

தண்ணீர்    –1கப்

செய்முறை

அரிசி மாவு, ராகி மாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசறிக் கொள்ளவும். பின் புட்டுக் குழாயில் புட்டு மாவு, பின்னர் தேங்காய் என்று ஒன்று மாற்றி ஒன்று வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கொண்டைக் கடலை குழம்புடன் சூடாகப் பரிமாறவும்.

வெஜிடபிள் மோ மோ

தேவையான பொருட்கள்

கேரட்         –1/4கப்

பீன்ஸ்         –1/4கப்

பனீர் துருவியது-1கப்

வெங்காயம்    –1கப்

இஞ்சி          –1டீஸ்பூன்

பூண்டு          –1டீஸ்பூன்

பச்சை மிளகாய்-2டீஸ்பூன்

எண்ணெய், உப்பு-தேவைக்கேற்ப

சோயா சாஸ்   –2டீஸ்பூன்

கொத்தமல்லி   –2டே.ஸ்பூன்

மைதா         –2கப்

செய்முறை

மைதா, உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். கேரட், பீன்ஸ், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி முதலியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி பின் வெங்காயம், கேரட், பீன்ஸ் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். வதங்கியதும் சோயா சாஸ், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். மைதா மாவை சிறு சிறு பூரிகளாகச் செய்து அதன் நடுவில் இந்த மசாலாவை வைத்து மூடி ஆவியில் வேக வைத்து பரிமாறவும்.

பேபி பொட்டேட்டோ இன் டோமேட்டோ சாஸ்

தேவையான பொருட்கள்

குட்டி உருளைக்கிழங்கு-200கி

சின்ன வெங்காயம்    –100கி

தக்காளி ஜுஸ்        –2கப்

தேங்காய் பால்        –1கப்

மஞ்சள் பொடி         -சிறிது

மிளகாய் பொடி        –3டீஸ்பூன்

மல்லிப் பொடி         –2டீஸ்பூன்

மிளகு                 –1டீஸ்பூன்

சீரகம்                 –1டீஸ்பூன்

நல்லெண்ணெய்       –100மி.லி.

உப்பு                  -தேவைக்கேற்ப

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ள வேண்டும். தக்காளியை அரைத்து வடிகட்டி திக்காக ஜுஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் மிளகு, சீரகம் போட்டு பொரிய விட்டு பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியாப் பொடி சேர்த்து வதக்கி தக்காளி ஜுஸை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கிரேவி கொதித்து கொண்டிருக்கும் பொழுது , வேக வைத்த குட்டி உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்தெடுத்து கிரேவியில் போடவும். நன்கு 5 நிமிடம் கொதித்தவுடன் கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி அடுப்பிலிருந்து இறக்கவும்.

மேத்தி பனீர்

தேவையான பொருட்கள்

பன்னீர்     –100கி

கிரீம்       –1டே.ஸ்பூன்

பட்டர்       –1டீஸ்பூன்

வெந்தயக்கீரை-1கப்

வெங்காயம்   –1

தக்காளி       –1

பச்சை மிளகாய்-1

பூண்டு       –3பல்

சீரகம்        –1டீஸ்பூன்

மிளகாய் பொடி-1டீஸ்பூன்

எண்ணெய், உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை

வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு முதலியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி சீரகம் போட்டு தாளித்து பின் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். வதங்கியதும் மிளகாய் பொடி போட்டு வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கி பின் உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கிரேவி கொதிக்கும் பொழுது வெந்தயக்கீரையைப் போடவும். பின் பனீரைப் போட்டு சிறிது கொதிக்கவும். கிரீம் மற்றும் பட்டர் சேர்த்து சப்பாத்தி மற்றும் பராத்தாவுடன் பரிமாறவும்.

மஷ்ரூம் வெஜ்ஜஸ்

தேவையான பொருட்கள்

1.மஷ்ரூம்    –1பாக்கெட்

கார்ன்ஃப்ளார்  –1/2கப்

உப்பு, தண்ணீர் -தேவைக்கேற்ப

சில்லி ஃப்ளேக்ஸ்-சிறிது

2.பூண்டு       –2டே.ஸ்பூன்

தக்காளி சாஸ் –2டே.ஸ்பூன்

சில்லிஃப்ளேக்ஸ்-1டீஸ்பூன்

உப்பு, தண்ணீர்  -தேவைக்கேற்ப

மிளகாய் பொடி –1டீஸ்பூன்

செய்முறை

மஷ்ரூமை கழுவி இரண்டாக கட் பண்ணி, நெம்பர் 1 – ல் கூறிய பொருள்களை எல்லாம் பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து அதில் மஷ்ரூமை முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பூண்டை உரித்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, பின் சில்லி ஃப்ளேக்ஸ், மிளகாய் பொடி போட்டு வதக்கி பின் தக்காளி சாஸ் ஊற்றி கொதிக்க விடவும். சாஸ் நன்கு கொதிக்கும் பொழுது பொரித்து வைத்துள்ள மஷ்ரூமை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

வெஜிடபிள் ஃஸ்டூ

தேவையான பொருட்கள்

கேரட்   –1கப்

உருளை    –1கப்

காலிஃப்ளவர்-1கப்

பட்டாணி   –1/2கப்

பச்சை மிளகாய் கீறியது-3

வெங்காயம்  –1

இஞ்சி, பூண்டு விழுது-1டீஸ்பூன்

உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப

தேங்காய்ப் பால்-2கப்

எலுமிச்சம்பழம் ஜுஸ்-சிறிது

வெண்ணெய் –சிறிது

தாளிக்க

பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகுத்தூள்-தேவைக்கேற்ப

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கேரட், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவரை ஒரே அளவுள்ள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெய் சூடாக்கி அதில் பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு, கேரட், காலிஃப்ளவர், பட்டாணி போட்டு வதக்கி உப்பு, தண்ணீர் தேங்காய்ப்பால் ஊற்றி வேக வைக்கவும். கடைசியாக மிளகுத்தூள் சேர்த்து, முதல் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பரிமாறும் சமயம் எலுமிச்சம் ஜுஸ் கலந்து பரிமாறவும்.

பாசிப்பருப்பு இட்லி

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு          – 1கப் தலைதட்டி

இட்லி அரிசி         – 2 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய்     – 4

கறிவேப்பிலை        1 டேபிள் ஸ்பூன்

தனியா               1 டீஸ்பூன்

சீரகம்                – 1/2 டீஸ்பூன்

சிறிய வெங்காயம்    – 1 கப்

உப்பு                 – தேவைக்கேற்ப

செய்முறை

பாசிப்பருப்பு, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஊற வைக்கவும். ஊறியதும் மிளகாய், தனியா, சீரகம், சிறிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். பின்னர் இட்லி தட்டிலி இட்லீகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து மிளகாய் சட்னியுடன் பரிமாறவும்.
Spread the love