கண்களைத் தாக்கும் நீரிழிவு

Spread the love

நீரிழிவு நோயினால் உடலின் பல உறுப்புக்களும் பாதிக்கப்படும் என்றாலும் அதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது கண்கள் தான். நீரிழிவினால் கண்ணில் நுண்ணுயிரித் தொற்று (Conjunctivitis – Iritis) கிளாக்கோமா (Glaucoma) எனப்படும் கண் விழி மிகுந்த அழுத்தம், புரை எனப்படும் காட்ராக்ட் (Cataract) போன்ற பலதரப்பட்ட கண் குறைபாடுகள் தோன்றலாம் என்றாலும் அவற்றிலெல்லாம் பெரிதும் தீங்கு விளைவிக்கக் கூடியது டயாபடிக் ரெடினோபதி (Diabetic Retinopathy) எனப்படும் விழித்திரை நோய் தான்.

நீரிழிவு நோய் கண்களில் உள்ள எல்லாப் பகுதிகளையுமே பாதிக்கின்றது. அதனால் வேதனையோ வலியோ ஏற்படாமல் கண்பார்வை சிறுகச் சிறுகப் பாதிக்கப்படுகிறது. என்றாலும் டயாபடிக் ரெடினோபதி எனப்படும் விழித்திரை நோய் விழித் திரையைப் பாதித்துப் பார்வையை முற்றிலுமாகப் பறித்து விடக் கூடியது. ஆராய்ச்சிகளின் மூலம், 20 ஆண்களுக்கு மேலாக நீரிழிவு உள்ளவர்களில் 70% ரெடினோபதிக்கு ஆளாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் அனைவரது விழித்திரைகளும் குறிப்பட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கப்பட வேண்டும். இது மிகவும் அவசியம்.

நீரிழிவு விழித்திரை நோய் வகைகள்

முதல் வகை பின்புல விழித்திரை நோய் (Background Retinopathy). இந்த வகையில் ரத்தகுழாய் மிக சிறிய அளவில் விரிவடைவதால் (Aneurysm) மற்றும் மிகச்சிறிய புள்ளிகள் போன்று விழித்திரையில் ரத்தக் கசிவுகள் தோன்றும்.

தொடக்க நிலையில் தொல்லை எதுவும் இதனால் ஏற்படுவதில்லை. ஆனால் நீரிழிவு உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். என்பதற்கு இது ஒரு அபாய அறிவிப்பு ஆகும். நீரிழிவு நோயினர் இதைக் கவலையுடன் கருத்தில் கொள்ள வேண்டும். சிலரது கண்களில் கசிகின்ற திரவம் கண்ணில் காணும் பகுதி (Seeing Portion) யாகிய மாக்குலா (Macula) எனப்படும் விழித்திரையின் மையப்பகுதியில் சேர்ந்து விடக் கூடும். இதற்கு மாக்குலோபதி (Maculopathy) என்று பெயர். இதனால் பார்வை தெளிவற்றுப் போவதுடன் விரைந்து பார்வை இழப்பில் போய் முடியவும் கூடும். இந்த நிலை ஏற்படுகின்ற போது நீரிழிவு கட்டுப்படுத்தப்பட்டால் மட்டும் போதாது. அத்துடன் ஒழுக்கினைக் கட்டுப்படுத்துவதற்கு லேசர் ஒளிவழி உறைவு முறை மருத்துவம் (Laser Phoyocoagulation) செய்ய வேண்டும்.

விழித்திரையிலிருக்கும் இரத்தக் குழாய்களில் இருந்து இயல்பு கடந்த (abnormal) புது இரத்தக் குழாய்கள் சில முளைத்துக் கிளைக்கும் போது (Outgrowth of normal blood vessels) அதை உயிர்மப் பெருக்க விழித்திரை நோய் (Proliferative Retinopathy) என்கின்றனர். புதிதாகத் தோன்றிய இரத்தக் குழாய்களின் சுவர்கள் எளிதி நொறுங்கக் கூடியவைகளாக இருப்பதால் அவற்றிலிருந்து இரத்த ஒழுக்கு எந்த நேரமும் ஏற்படக் கூடும். எனவே புதிய இரத்தக் குழாய்கள் கண்ணில் தோன்றக் கூடிய அறிகுறி தென்பட்டதுமே லேசர் ஒளிவழி உறைவு செய்யப்படவேண்டும்.

சில நீரிழிவுக்காரர்களுக்கு விழித்திரை முழுவதுமே புதிய இரத்தக் குழாய்கள் பல தோன்றியிருந்தும் அவர்கள் அது பற்றிய விபரம் எதுவுமே தெரியாது இருக்கக் கூடும். இந்த இரத்தக் குழாய்களிலிருந்து பெருமளவு இரத்தப் பெருக்கு ஏற்பட்டுக் கண் முழுவதுமே திரவப் படலத்தில் முழ்கடிக்கப்படுகின்ற வரை கண் பார்வை ஒரளவு தெரியக்கூடும். ஆனால் இந்த அபாயம் எந்த நேரத்திலும் நிகழலாம். அவ்வாறு நிகழாவிட்டால் கண்ணில் நார்க்கற்றைகள் (Fibrous bands) ஏற்பட்டு விழித்திரையின் இணைப்பை விடுபடச் செய்து (Retinal detachment) கண்பார்வையை இழக்கச் செய்து விடும்.

பார்வையின்மையைத் தவிர்க்கும் முறை

நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது முற்றிலும் அவசியமானது. நீரிழிவுக்காரர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது விழித்திரைகளைச் சோதித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே விழித்திரையில் மாறுதல்கள் இருக்குமானால் இன்னும் குறைந்த கால இடைவெளியில் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். பின்புலம் சார்ந்த விழித்திரை நோய் இருக்குமானால் மிகுந்த விழிப்புடன் நீரிழிவு கட்டுப்படுத்தபடுவதுடன் ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உயிர்மப் பெருக்க விழித்திரை நோய் அல்லது மாக்குலோபதி விழித்திரை இருக்குமானால் நீரிழிவுக் கட்டுபாட்டு மருததுவம் மட்டும் போதாது. லேசர் ஒளிவழி உறைவு முறை மருத்துவமும் செய்யப்படவேண்டும். லேசர் ஒளிக்கற்றைகளை விழித்திரை மேல் படுமாறு செலுத்தித் தீய்த்து விடுகின்ற முறையே இது. இதனால் வலியோ வேதனையோ ஏற்படாது என்பதுடன் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. வெளிநோயாளிகளாக இருந்து கொண்டே இதைச் செய்து கொள்ள முடியும். நீரிழிவினால் ஏற்படக் கூடிய விழித்திரை நோய்க்கு லேசர் ஒளிவழி உறைவு முறை ஒரு திறன் மிக்க மருத்துவமாகும். எனவே கண்களை நீரிழிவு கவர்ந்து கொள்ளும் முன்னர் காத்துக் கொள்வது தான் அறிவுடைமை.


Spread the love
error: Content is protected !!