பெயரில் ‘இனிக்கும்’ வாழ்க்கையில் ‘கசக்கும்’

Spread the love

இந்தியாவில் விலைவாசி ஏறிக்கொண்டே போவதைப் போல நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது.  இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம் என்ற நிலைமை உள்ளது.  வயதான பின்பு தான் வந்து தொல்லை கொடுக்கும் என்பதெல்லாம் மலையேறி விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இளமையிலேயே இந்த ‘சர்க்கரை’ வந்து வாழ்க்கையை ‘கசக்க’ செய்து விட்டது. வழக்கம் போல் நாமும் நவம்பர் 14ம் தேதியை உலக நீரிழிவு நோய் தினமாக அனுசரித்து விட்டோம்.

உடல் உழைப்பு இல்லாமை, கொழுப்பு, -சர்க்கரை கொண்ட உணவை அதிகம் உட்கொள்ளுதல், மன அழுத்தம் அதிகரிப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுவதும், உடல் பருமனும்தான் நீரிழிவு நோய்க்கு காரணங்கள். இந்த நோயின் அடிப்படைகளை முழுமையாக அறிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இந்நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும்.

அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தோல் தொற்று, காயம் ஆறுவதில் தாமதம், கைகால் மரத்துப்போதல் ஆகியவை டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகள்.

இதயம், கண் சார்ந்த பிரச்னைகள், பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு என எல்லா ‘பெரிய’ நோய்களுக்கெல்லாம் சர்க்கரை வியாதிதான் பிள்ளையார் சுழி போடுகிறது. நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் சர்க்கரை பல்வேறு சச்சரவுகளை ஏற்படுத்தும்.

நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க சமச்சீரான உணவு அவசியம். தினமும் வேளாவேளைக்குச் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதச் சத்து உணவு வகைகளை கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும். மிக அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகங்களைப் பாதிக்கும்.

மாவுச் சத்து உணவு வகைகளை மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க வேண்டும். பீட்சா, பர்கர் உள்ளிட்ட சாட் அயிட்டங்களுக்கு ‘குட்பை’ சொல்ல வேண்டும். சாக்லெட், இனிப்பு வகைகளுக்கு ‘தடா’ போட வேண்டும். இல்லாவிட்டால் சர்க்கரை உங்கள் உடலை ‘பொடா’வில் தள்ளிவிடும். மது, புகையிலை பழக்கம் இருந்தால் அதை நிறுத்த வேண்டும்.

உணவு முறையில் மாற்றம் இருந்தால் மட்டும் போதாது. உடற்பயிற்சியும் அவசியம். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்கவும், டைப் 2 எனப்படும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன. அதற்காக காசு பணம் செலவழித்து ஜிம்முக்கு போக வேண்டியதில்லை. நடைப்பயிற்சியே காசு பணம் செலவில்லாத நல்ல பயிற்சி. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பயிற்சி.

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் முறையாக உடற்பயிற்சி செய்வதன் மூலமும் அளவான சத்துணவைச் சாப்பிடுவதன் மூலமும் இன்சுலின் பயன்பாட்டையோ, வேறு மருந்துகள் சாப்பிடுவதையோ குறைத்துக்கொள்ள முடியும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு உடற்பயிற்சி மட்டுமே ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவாது. அதேசமயம் இன்சுலின் முழுமையாகச் செயலாற்ற உடற்பயிற்சி உதவுகிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென மாறாமல் இருக்க, உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு போதுமான அளவு சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறதா இல்லையா என்பதை 2 & 3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. டைப் 2 நோயாளிகள் ஹெச்பி.ஏ.1.சி. எனப்படும் மூன்று மாத ரத்த சர்க்கரை சராசரி அளவையும் எடுத்துப் பார்க்க வேண்டும். அதில் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கும்.


Spread the love