சர்க்கரை வியாதியும் சங்கடங்களும்

Spread the love

ஒரு பயமுறுத்தாத ரிப்போர்ட்

‘சர்க்கரை’ டாக்டர்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பதால் நீரிழிவு நோய் என்பது புதுமையான நோய் என்றோ, அதைக் கண்டு பிடித்து சில பல ஆண்டுகள்தான் ஆகிறது என்றோ நினைத்து விடாதீர்கள். நீரிழிவு நோய் மிகப்பழமையான நோய். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் இது பற்றி அறிந்திருக்கிறார்கள். பண்டைய மருத்துவ அறிஞர்களான சரகரும், சுஸ்ருதரும் தங்களது வைத்திய சாஸ்திர நூல்களிலே ‘மதுமேகம்’ என்றழைக்கப்பட்ட நீரிழிவு பற்றிய பல செய்திகளை எழுதி வைத்துள்ளனர்.

சர்க்கரை நோய் எனவும் டயாபெடிஸ் எனவும் அழைக்கப்படுகின்ற இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களது இரத்தத்திலும் சிறுநீரிலும் அளவிற்கு அதிகமான சர்க்கரை காணப்படும். உடலிலுள்ள சில சுரப்பிகள் செயல்திறன் குன்றுகின்றதால் ஏற்படுகின்ற விளைவு இது.

உலக மக்கள் தொகையில் பல கோடிப் பேர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம்நாட்டைப் பொறுத்த வரை நூற்றுக்கு 8 அல்லது 10 பேர் இந்நோய் உடையவர்களாக இருக்கின்றனர்.

நீரிழிவு நோய் பிறநோய்களைப் போல் மனிதனைச் செயலிழக்கச் செய்யக்கூடியதோ அல்லது உயிரை மாய்க்கக்கூடியதோ அல்ல. (ஆனா, கண்டுக்காம விட்ட டேஞ்சர்தான்.) உடலின் சில குறைபாடுகளினால் ஏற்படுகின்ற இந்நோயை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். ஓரளவு கல்வியறிவு உள்ளவர்கள் கூட இதன் தன்மைகளை அறிந்து கொண்டு உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை போன்றவற்றில் சிறு சிறு மாற்றங்கள் செய்து தமக்குத் தாமே மருத்துவர்களாக இருந்து இதன் தொல்லைகளின்றி நீண்ட நாள் வாழ முடியும்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

நடுவயதினருக்கும் முதியவர்களுக்கும் ஏற்படுகின்ற இன்சுலின் சாரா (Non- Insulin Dependant Diabetes) நீரிழிவு பல நேரங்களில் திருடனைப் போல் ஓசையின்றி வந்து விடும். பல நாட்கள், மாதங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருந்து விடும். தன்னிச்சையாக வேறு ஏதாவதொரு நோய்க்காக சிறுநீர் சோதனை செய்கின்ற போது இது கண்டுபிடிக்கப்படலாம். இருப்பினும் நடுவயதினருக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் நீரிழிவு ஏற்பட்டு இருக்கிறது அல்லது ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் வழியாகச் சர்க்கரை வெளியே செல்வதால் அது தன்னுடன் நிறையத் தண்ணீரையும் சேர்த்துக் கொண்டு செல்கிறது. இதனால் அடிக்கடி அதிக அளவில் சிறுநீர் கழிக்க நேரிடும்.

தண்ணீர் குடிப்பதில் ஆர்வம்

மேற்சொன்னவாறு அளவிற்கு அதிகமாகத் தண்ணீர் உடலிலிருந்து வெளியேறுவதால் இதைச் சமன்செய்ய அதிக நீர் தேவைப்படுகிறது. இதனால் இடைவிடாத தாக உணர்வும் தண்ணீர் குடிப்பதில் மிகுந்த ஆர்வமும் இருக்கும்.

உணவில் அதிக விருப்பம்

நீரிழிவு நோய் இருக்கின்ற போது இரத்தத்தில் குளுகோஸ் என்னும் சர்க்கரை சத்து இருந்த போதிலும் இன்சுலின் குறைவால் அதை செல்களால் கிரகிக்க முடியாமல் போகிறது. அப்போது செல்கள் சர்க்கரைச் சத்தை எவ்வாறாயினும் பெற வேண்டிப் பெரிதும் முயல்கின்றன. அதையொட்டி மிகுந்த பசியுணர்வைத் தூண்டிவிடுகின்றன. இதனால் அளவிற்கதிகமான பசி உணர்வும் உண்ணுவதில் மிகுந்த ஆர்வமும் ஏற்படுகிறது.

உடல் எடை குறைதல்

இரத்தத்தில் குளுகோஸ் மிகுந்து இருந்தும் அதைச் செல்களால் கிரகிக்க முடியாமல் குளுகோஸ் சிறுநீரில் கலந்து வெளியே சென்று விடுவதால் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்புக் கரைந்து குளுகோஸாக மாறுகிறது. உணவில் உள்ள சர்க்கரை உடலில் ஒட்டாததாலும் மேலும் உடலில் உள்ள கொழுப்புக் கரைவதாலும் எடை குறைவு மற்றும் அதிகமான களைப்பு ஏற்படுகிறது.

வேலையில் ஆர்வம் குறைதல்

உடல் உறுப்புகளுக்கு குறிப்பாக மூளைக்கு சர்க்கரைச் சத்து மிகவும் தேவைப்படுகிறது. இது இல்லாது போகின்ற போது மூளை திறன் இழக்கிறது. மறதி ஏற்படுகிறது. வேலையில் மனமொன்றிப் பார்க்க முடியாமல் போகிறது.

கட்டி, கொப்புளம், சரும நோய்கள் தோன்றுதல்

குளுகோஸ் நிறைந்த இரத்தத்தில் நோய்க்கிருமிகள் எளிதாக இடம்பிடித்து வளர்கின்றன. இவை புண், காயம் போன்றவைகளை எளிதில் ஆறவிடாமல் செய்வதுடன் கட்டி, கொப்புளம், பிளவை எனப்படும் கார்பங்கிள் போன்ற சரும நோய்களை உண்டுபண்ணுகின்றன.

உடலில் அரிப்பு

அநேக நேரங்களில் பிறப்புறுப்பில் அரிப்பு என்று வருகின்ற பெண்களைச் சோதித்துப் பார்த்ததில் மிகப் பலருக்கு நீரிழிவு இருப்பது தெரிய வந்தது. சர்க்கரை நிறைந்த இரத்தம் நரம்பு முனையையும் இதர மெல்லிய பாகங்களில் ஓடுகின்ற நுண்ணிய இரத்தக்குழாய்களையும் நலியச் செய்து அங்கு அரிப்பினை உண்டாக்குகிறது.

உடல் வலியும் களைப்பும்

கொழுப்பும், தசைப்புரதமும் கரைந்து போவதால் உடல் வலியும் களைப்பு ஏற்படவும் செய்கிறது.

பார்வை மங்குதல்

இரத்தத்தில் சர்க்கரை கூடுவதால் கண்களிலுள்ள திரவங்களின் அடர்த்தி மாறுபடுகின்ற போது கண்ணில் பார்க்கும் திறன் குறைகிறது. கண்ணிலுள்ள விழி ஆடி அளவிற்கதிகமான சர்க்கரை கரைந்த திரவத்தில் அமிழ்வதால் தன்னுடைய தெளிவினை இழந்து மாவு படிந்தாற் போல் ஆகிவிடுகிறது. இதன் காரணமாகவே நீரிழிவுக்காரர்கள் காட்ராக்ட் என்னும் கண் கோளாறுக்கு விரைவில் இலக்காகின்றனர்.

உடலுறவில் ஆர்வம் குன்றுதல்

மிதமிஞ்சிய களைப்பும், மனச்சோர்வும், கேளிக்கையில் விருப்பமில்லாமையும் இயற்கையாக இந்நோயுடன் சேர்ந்த நரம்புத்தளர்ச்சியும் உடலுறவில் உள்ள ஆர்வத்தைக் குறைக்கலாம்.

நீரிழிவினால் வரக்கூடிய பிறநோய்கள்

கட்டுப்படுத்தப்படாத அல்லது சரிவர வைத்தியம் செய்யப்படாத நீரிழிவுக்காரர்களின் இரத்தச் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பதால் அவர்களுக்குச் சிறு காயங்களோ அல்லது புண்களோ ஏற்பட்டால் அவை விரைவில் ஆறுவதில்லை. மேலும் இவர்களது தோல் பகுதியும் பிற உடல் உறுப்புக்களும் நோய் உண்டுபண்ணக்கூடிய பாக்டீரியாக்களுக்கேற்ற விளை நிலமாக அமைகிறது. இதனால் கட்டி, கொப்புளம், பிளவை எனப்படும் கார்பங்கிள், தோல் அரிப்பு மற்றும் தோல் நமைச்சல் போன்ற நோய்கள் தோன்றக்கூடும்.

இவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நிலையில் இருப்பதால் இவர்களைத் தொற்றுநோய்கள் எளிதில் தாக்குகின்றன. சாதாரண மனிதர்களைக் காட்டிலும் நான்கு முறை கூடுதலாக நீரிழிவுக்காரர்கள் டி.பி. என்னும் எலும்புருக்கி நோயினால் பாதிக்கப்படுகின்றனர். கட்டுபடுத்தப்படாமல் சிறுநீரில் சர்க்கரை வெளியேறுகின்ற போது இவர்களது உடல் நாளுக்கு நாள் இளைக்க ஆரம்பிக்கிறது. மேலும் இவர்கள் நீரிழிவு நரம்பு அழற்சி என்னும் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது மிகுந்த உடல் நோயையும் கை, கால் கடுப்பினையும் உண்டாக்கக் கூடியது.

நீரிழிவுக்காரர்கள் தங்கள் கண் பார்வையைக் காத்துக் கொள்வதில் பெரிதும் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயினால் ஏற்படக்கூடிய உடல் மாற்றங்களை அவர்களது கண்கள் தெளிவாகக் காட்டி விடும். கண்களில் உள்ள இரத்தக்குழாய்கள் தடித்தும் மாறுபட்டும் காணப்படும். இதைச் சரியான முறையில் கவனிக்காமல் விட்டுவிட்டால் இது டயபெடிக் ரெடினைட்டிஸ் என்னும் கண் கோளாறையும் காட்ராக்ட் எனப்படும் கண்ணில் புரை படர்வதையும் உண்டு பண்ணும்.

இரத்தக்குழாய்கள் கெட்டிப்படுவதும் தடித்துப் போவதும் வயது முதிர்ந்த நீரிழிவுக்காரர்களின் இடையே பெரிதும் காணப்படுகிறது. இவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மிக எளிதில் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகின்ற போது உடலின் பல பாகங்களுக்கும் செல்லுகின்ற இரத்தத்தின் வழியில் தடை ஏற்படுகின்றது. இதனால் கால் மற்றும் பாதங்களில் புண்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

கட்டுப்படுத்தப்படாத நீரிழிவினால் சிறுநீர்ப்பிரித்திகள் மிகவும் பாதிக்கப்படக்கூடும். ஆல்புமின் சத்தை இழந்து உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதுடன் கணுக்கால், பாதம் போன்ற உறுப்புகளில் சுரப்பு ஏற்பட்டு வீக்கம் உண்டாகிறது.

நீரிழிவுக்காரர்கள் தங்களது வாயையும், பற்களையும் பாதுகாத்துக் கொள்வதில் மிகுந்த கவனமாக இருத்தல் வேண்டும். இரத்தத்தில் இருக்கின்ற உயர் விகித சர்க்கரையினால் வாயில் ஏற்படக்கூடிய சிறு புண்கள் கூட ஆறுவதற்கு நாளாகலாம். ஜிஞ்ஜிவைட்டிஸ் என்னும் பல் ஈற்றினைப் பாதிக்கக்கூடிய நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் விரைவில் பற்சிதைவு ஏற்படுவதுடன் வாயில் விரும்பத்தகாத வாடை வீசவும் ஏதுவாகும்.

நீரிழிவு தொடர்பான பரிசோதனைகள்

நீரிழிவு நோய்க்கான குணங்களும், குறிகளும் பல என்றாலும் அதை பார்க்கத் தவறுகின்றவர்கள் மிகப் பலராகும். இன்னமும் தமக்கு நீரிழிவு இருக்கிறதென்றே அறியாமல் வாழ்கின்றவர்கள் அநேகம் பேர். கடந்து 20 ஆண்டுகளாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு காரணம் சமச்சீரான உணவின்மை, செயற்கை உணவுகள், நேரத்துக்கு சாப்பிடாதது, உடற்பயிற்சி செய்யாதது என்று சொல்லலாம். சர்க்கரை நோய் வந்த பின்பு அவஸ்தைப்படுவதை விட வருமுன் காப்பதே நல்லது. அதற்கு செயற்கை உணவுகளை தவிர்த்து, சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு, தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். சர்க்கரை எனும் சனிப் பார்வை படாமல் தப்பித்துக் கொள்ளலாம். எதற்கும் ஆண்டுக்கு ஒருமுறை சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.


Spread the love
error: Content is protected !!