சர்க்கரை நோய் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்

Spread the love

கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு ஏற்படுவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் இரத்த வழி உறவினர்களில் எவருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிகவும் அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என உலக சுகாதார மையம் அச்சுறுத்தி உள்ளது. எனினும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே உண்மை.

35 வயதை தாண்டி விட்டாலே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும். ஆனால், நம்மில் 10 சதவீதம் பேர், இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது இல்லை. ஏதேனும் பிரச்சனை என்று வந்த பிறகுதான்  மருத்துவரிடம் செல்கிறோம். சர்க்கரை நோய் உயிரைக் குடிக்கும் ஒரு நோய்.

உரிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் நோயில்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம். இந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, மரபு ரீதியாக வாய்ப்புகள் அதிகம்,  சுற்றுச் சூழலுக்கு மாறுபட்டு வாழும் போக்கு, சர்க்கரை சத்தை அதிகம் கொண்ட (பிசா,சாக்லேட்) உணவு வகைகளை அதிகமாக உண்பது, உடலுக்கு பயிற்சி இல்லாதது அன்றாட வாழ்க்கை போன்ற பலக் காரணங்களால், இந்தியர்கள் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்

தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, இரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் “ஸ்ட்ரோக்’ என அழைக்கப்படும் பக்கவாதம் தொடங்கி, பாதத்தில் ஏற்படும் நோய்கள் வரை அனைத்து உறுப்புகளையும் சர்க்கரை நோய் ஒரு கை பார்த்துவிடுகிறது.

சர்க்கரை நோயானது கண்ணின் விழித்திரையை பாதிக்கிறது. இது இதய இரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. மேலும் சிறுநீரக இரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இது மட்டுமின்றி, ஆண்மைக் குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத அனைத்து வேதனைகளையும் ஏற்படுத்துகிறது.

நமது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றது. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை ஏற்படாது. இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை ஏற்படத் துவங்கும். இதன் விளைவு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.

சர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி?

பிற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. ஏதேனும் பிற பிரச்சனைக்காக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்லும் போது தற்செயலாக, இரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கும் தெரிய வருகிறது.

சாப்பிடுவதற்கு முன், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின், சர்க்கரையின் அளவு 80 முதல் 140 க்குள் இருக்க வேண்டும். இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படுகிறது. சாப்பிட்ட பின் இரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கி., வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் இரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். பாரம்பரியத்தில் எவருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவது போன்ற காரணங்களால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என, ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டு வகை

சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். சிறு வயதில் வருவது இது “ஜுவனையில் டயாபடிக்’ என அழைக்கப்படுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். வைரஸ் கிருமியால், கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் முழுமையாக சுரக்காமல் போய்விடும். அல்லது இன்சுலினுக்கு எதிரான ஆன்டிபாடீஸ், உடலில் உருவாகி இன்சுலின் சுரப்பு அடியோடு நின்றுவிடும். இது 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளையே பாதிக்கிறது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். முதல் வகை சர்க்கரை நோயாளிகள், 5 முதல் 7 சதவீதம் பேர் உள்ளனர்.

இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் வருவது. குழந்தை பருவத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்கும். ஆனால், 35, 40 வயதை தாண்டும் நிலையில், இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரும். இப்போது 30 வயதிலேயே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளை சாதாரணமாக பார்க்க முடிகிறது. இரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டு விட்டால், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப, மாத்திரையோ அல்லது இன்சுலின் ஊசியோ தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு சர்க்கரை நோயாளிக்கு எழுதி கொடுக்கும் மாத்திரைகளை நாம் சாப்பிடக் கூடாது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பொறுத்து எந்த மாத்திரை, எவ்வளவு அளவு என்பது தீர்மானிக்கப்படுவதால் மருத்துவரின் பரிந்துரையுடன் மாத்திரை சாப்பிட வேண்டும்.

அறிகுறிகள்

சர்க்கரை நோய்க்கென்று குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும் இல்லை, தொடக்கத்தில் தெரியாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகம் ஏற்படும். அதிகமாக பசி ஏற்படுதல், உடல் சோர்வு, எடை மிக வேகமாகக் குறைய தொடங்குதல், சிறுநீர் வெளியாகும் இடத்தில் அரிப்பு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாக கருதலாம். இது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம், சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள இரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே சர்க்கரை நோய் வருவதற்கு முன்பே, சரியான உணவு, சரியான உடல் பயிற்சி போன்றவற்றை செய்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.


Spread the love