சர்க்கரை வியாதியை அலட்சியப்படுத்தாதீர்கள். ‘விதி’யென்று விட்டு விடாதீர்கள். பிறவியிலிருந்தே இந்த சர்க்கரை நோய் இருந்தால், மருந்து இன்சுலீன் இவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நடுவில் வந்தால், ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு இவற்றுடன் குறைந்த அளவு மருந்து இல்லை மருந்தில்லாமலேயே சமாளிக்கலாம். எந்த நிலையிலும் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால் இன்சுலீன் மருந்து தான் தீர்வு என்ற முடிவு ஏற்பட்டால் மனம் தளர வேண்டாம். இன்சுலீன் மாத்திரம் எடுத்துக் கொள்வதில் கஷ்டம் ஒன்றும் இல்லை என்ற மனப்பான்மையை உண்டாக்கிக் கொள்ளுங்கள்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல், இவற்றை தவிர்க்கவும். சர்க்கரை வியாதி பற்றிய விவரங்களை அறிந்து ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ளுதல் பயனளிக்கும். டென்ஷன், ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, விரக்தி, கவலை இவற்றை தவிருங்கள். தியானம், யோகா, உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். நீரிழிவு வியாதியைப் பற்றிய உங்களின் விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். நோயைப்பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, செயல்படுவது, நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கும்.