மருத்துவச் செய்திகள்

Spread the love

டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி

நீரிழிவு அதுவும் டைப் 1 நீரிழிவு, ஒரு வேதனையான நோய். இந்த நோயாளிகள் தினமும் 2 (அ) 3 முறை, ஊசி மூலம் இன்சுலீனை உடலில் ஏற்றிக் கொள்ள வேண்டும். தற்போது ஒரு தடவை போட்டுக் கொண்டால் பல நாட்கள் தாங்கும் இன்சுலீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை Supramolecule insulin assembly என்கின்றனர்.

விலங்குகளில் இந்த இன்சுலீனை பயன்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய கண்டுபிடிப்பை (Supra molecular assembly) 200 மைக்ரோ கிராம் அளவில் கொடுக்க விலங்குகளில் இன்சுலீன் சுரப்பை 120 லிருந்து 140 நாட்கள் வரை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அதாவது ஒரு தடவை செலுத்திய மருந்து 3 (அ) 4 மாதங்கள் வரை இன்சுலீன் தேவையின்றி சமாளித்தது.

இந்த புதிய மருந்து, இன்சுலீனில் புரத மடிப்புகளைமாற்றி, தயாரிக்கப்பட்டது. ஒரு புதுமையான முறையில் மருந்து விலங்குகளின் உடலில் செலுத்தப்பட்டது. நீடித்த காலம் தொடர்ந்து “ரீலிஸ்” ஆகும் புதிய இன்சுலீன், உணவு உண்ட உடனேயும் சரி, 12 லிருந்து 18 மணி நேரம் பட்டினியாக இருந்த போதும் சரி, கிளைசமிக் அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

தினமும் போட்டுக் கொள்ளும் இன்சுலினால் ஒரு அபாயம் இருந்தது. காலையில் திடீரென்று ரத்த சர்க்கரை அளவு குறைந்து ஹைபோ – கிளைசீமியா ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகம். புதிய இன்சுலினால் இந்த அபாயம் இருக்காது.

டைப் 2 நீரிழிவு நோயாளிகளால் இந்த புதிய இன்சுலீன் 30 நாட்கள் வரை நார்மல் குளுக்கோஸ் அளவை தக்க வைத்தது. அடுத்த வருடத்திலிருந்து இந்த மருந்து மனிதர்களை வைத்து சோதிக்கப்படும்.


Spread the love