சர்க்கரை நோயுடன் சகஜமாக வாழ்வது எப்படி?

Spread the love

சர்க்கரை நோய் வந்து விட்டாலே சகல சுகமும் போனது போல் பலருக்கும் கவலை வந்து விடும். ‘சுகர்’ வந்தாலே ‘ஃபியர்’ வந்து விடும். வரக் கூடாத வியாதிகளில், நீரிழிவும் ஒன்று என்பார்கள். அதற்காக வருத்தப்பட்டு பாரம் சுமப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. ஆனால், தற்போதைய முன்னேறிய சிகிச்சை முறைகளாலும், விழிப்புணர்வாலும், நீரிழிவுடன் வாழலாம். எப்படி என்பதை பார்ப்போம்…-

தினசரி செய்ய வேண்டியவை:

1.உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது.

2.உடற்பயிற்சி, போதிய உடலுழைப்பு இவற்றால் உடலை    சுறுசுறுப்பாக      வைத்துக் கொள்வது

3.நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்வது

4.இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுதல்

இதற்கான எளிய வழி முறைகள்:-

1.உணவு

நீரிழிவு நோய்க்கு கட்டுப்பாடான சமச்சீர் உணவின் அவசியம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஒரு நோயாளிக்கு ஒத்து வரும் உணவு, மற்றொரு நோயாளிக்கு ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எனவே உங்களுக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய உணவை நீங்கள் டாக்டர் மற்றும் டயட்டீசியனுடன் கலந்தாலோசித்து தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். உணவு, நீரிழிவு உண்டாக்கும் பல சிக்கல்களை ஓரளவு தடுக்கும் படி அமைய வேண்டும். முக்கியமாக இதயத்திற்கு இதமான உணவாக இருக்க வேண்டும். ரொட்டி, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மாமிசம், பால் – பால் சார்ந்த உணவுகள், கொழுப்புகள் போன்ற உங்களுக்கு பழக்கமான பொது உணவுகளிலிருந்தே உங்களின் தினசரி உணவு திட்டத்தை வரையறுத்துக் கொள்ளலாம். இது உங்கள் குடும்பத்தினருக்கும் ஒத்துப் போகும் படி இருப்பதால், உங்களுக்கு என தனி உணவுகளை தயாரிக்கும் அவசியம் இல்லை. இந்த பொது உணவுகளிலிருந்து உங்களுக்கேற்ற உணவை, புத்திசாலித்தனமாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

*உங்களுக்கு அதிக உடல் பருமனை உண்டாக்காத உணவை தேர்ந்தெடுங்கள்

*உணவில் அளவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

*உணவால் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் அதிகம் ஆகாமல் check  செய்து கொள்ளுங்கள்.

உணவைப் பற்றிய சில யோசனைகள்:-

1.உணவுகளை திட்டமிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்

2.சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். வேளை தவறி உண்பதை தவிர்க்கவும்.

3.உட்கொள்ளும் உணவு பாகங்களின் சரியான அளவுகளை தெரிந்து கொண்டு உண்ணவும். இதற்கு டயட்டீஷியனை அணுகி தெளிவு பெறலாம். அவர் ஒரு கப், அரை கப் என்று உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு பரிந்துரைப்பார்.

4.கார்போஹைடிரேட், கொழுப்பு சேர்ந்த உணவுகளை அளவாக உட்கொள்ளவும்.

5.உணவு நேரங்களின் நடுவே பசியெடுத்தால், தண்ணீர் குடிக்கவும்.

6.வயிறு முட்ட உண்ண வேண்டாம்.

7.மதுகுடிப்பது கூடாது.

8.’டைனிங் டேபிளில்’ (மேஜையில்) சாப்பிடவும்.

9.காய்கறிகள், தானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்

10.நொறுங்க தின்றால் நூறு வயது. உணவை மென்று சாப்பிடவும்.

11.எப்போதும் கைவசம் ஒன்றிரண்டு சாக்லெட்களை வைத்துக் கொள்ளவும். தாழ்நிலை சர்க்கரை ஏற்பட்டால் உடனே உட்கொள்ளவும்.

12.சமச்சீர் உணவுக் கலவையை உட்கொள்வது நன்மை பயக்கும்.- கார்போஹைடிரேட்ஸ் (அளவாக) புரதம், கொழுப்பு (அளவாக) விட்டமின், தாதுப்பொருட்கள் – இவைகள் உணவில் தேவையான அளவு இருக்க வேண்டும்.

13.உணவு மாற்றங்களை திடீரென்று கொண்டு வரவேண்டாம். படிப்படியாக கொண்டு வரவும்.

14.சிபாரிசு செய்யப்பட்ட காய்கறி, பழங்களை, 5 தடவை கூட ஒரு நாளில் உட்கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

15.உப்பு, உப்புள்ள பதார்த்தங்கள் இவற்றை குறைக்கவும். ஊறுகாய் உடலுக்கு ஊறு விளைவிக்கும்.

அதிக உடல் பருமன் (Obesity), பல நோய்கள், குறிப்பாக டயாபடீஸ், உண்டாக காரணமாகிறது. உடல் பருமனை சரியான அளவில் வைக்க வழிகள்:

1.சிறு தட்டுக்களில் உண்ணவும். உணவின் அளவை குறைக்கவும்

2.காலை உணவை தவிர்க்க வேண்டாம்.

3.அவசர கதியில் உண்ண வேண்டாம். மெதுவாக உண்ணவும்.

4.வேகவைத்த உணவுகள் நல்லது. பொறித்து, வறுத்த உணவுகள் வேண்டாம்.

5.காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

6.மசாலா, உணவுக்கு வாசனை, சுவையூட்டும் பொருட்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்லது என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி. இது பற்றி மேலும் ஆய்வுகள் தேவை. அதனால் அடக்கி வாசிப்பது நல்லது.

நீரிழிவை தடுக்க எளிய வழிகள்

‘சோம்பித்திரியேல்’ என்கிறது ஆத்திசூடி. “சோம்பர் எம்பவர் தேம்பித்திரிவர்” என்கிறது கொன்றை வேந்தன். ‘நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள், தானும் கெட்டதுடன் நாட்டையும் கெடுத்தார்’ என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளை பாடி, நடித்து விழிப்புணர்வை ஊட்டினார் மறைந்த எம்ஜிஆர். இவ்வளவும் சொல்வது எதற்காகத் தெரியுமா? உடலை, உள்ளத்தை வேலையின்றி வைக்காதீர்கள். எந்தவொரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக அலைபவர்கள் அல்லல் படுவார்கள் என்பதை உணர்த்தத்தான். உடலுழைப்பும், உடற்பயிற்சியும் தினசரி இருக்க வேண்டும். ஆயுர்வேத ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, ‘நீரிழிவு நோயாளிகள் 4 மைல் நடக்க வேண்டும், கிணறு வெட்டுவது போன்ற உடலுழைப்புகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றார். நடப்பது, நீச்சல், நடனம், சைக்கிள் ஓட்டுவது, விளையாட்டு இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை செயல்படுத்துங்கள். வீட்டு வேலைகள் தோட்ட வேலைகளை தினசரி செய்யவும். உடலும் உள்ளமும், ஆரோக்கியமாக இருக்கும்.

உடற்பயிற்சியில் விளையும் நன்மைகள்:-

•சரியான உணவும், உடற்பயிற்சியும் சேர்ந்தால், நீரிழிவை (டைப் 2) தடுக்கும் வாய்ப்புகள் 58 சதவீதம் ஆகும்.

•உடற்பயிற்சி உங்கள் எடையை சரியான அளவில் வைக்க உதவும்.

•இதயம், நுரையீரலுக்கு வலிமை கூட்டும்.

•இன்சுலினின் வேலையை ஊக்குவிக்கும்.

•உடலுழைப்பு / வேலைகளால் சக்தி பெருகும்.

•மன அழுத்தத்தை குறைக்கும்

உடற்பயிற்சியின் போது நீரிழிவு நோயாளிகள், சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம், கண்பாதிப்புகள் இவை உள்ளவர்கள் எடை தூக்குதல் போன்ற கனரக உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். யோகாவில் நீரிழிவு நோய்க்கென பிரத்யேக ஆசனங்கள் உள்ளன.

ஒரு நாளில் 30 நிமிடமாவது காலை மாலை என ஏதாவது ஒரு வேளையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இவற்றில் உடலை ஈடுபடுத்துங்கள். உடம்புக்கும் உள்ளத்துக்கும் மிகவும் நல்லது. இது வரை உடலை பயிற்சியின்றி வைத்திருந்தால், முதலில் 10 நிமிடங்களிலிருந்து ஆரம்பிக்கவும். போகப் போக நேரத்தை அதிகரிக்கவும். ரத்த சர்க்கரை 100 அல்லது 120க்கு குறைவாக இருந்தால், உடற்பயிற்சிக்கு முன் சிற்றுண்டியை உட்கொள்ளவும். பயிற்சியின் போது தாழ் நிலை சர்க்கரை நிலை ஏற்பட்டால், குளூக்கோஸ் மாத்திரைகள், சாக்லெட், பழரசம் போன்றவைகளை உடனே உண்ணவும்.

‘தம்பல்ஸ்’ அடித்த உடன், தசைகள் புடைப்பது போல், உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே பலன்களை எதிர் பார்க்காதீர்கள். சில வாரங்கள் போக வேண்டும். ஒரே மாதிரி உடற்பயிற்சிகள் போரடித்தால் மாற்றிக் கொள்ளவும். நடைபயிற்சி செய்பவர், சைக்கிள் பயிற்சி செய்யலாம். ‘வாக்கிங்’ செல்பவர்கள் ‘ஜாகிங்’ போகலாம். உடற்பயிற்சியால் எலும்புகள், தசைகள், மூட்டுக்கள் இவை வலிவடையும். உடற்பயிற்சி செய்கிறேன் என்று தயவு செய்து உடலை வருத்திக் கொள்ள வேண்டாம். அதனால், பாதிப்புகள்தான் உண்டாகும். விதையைப் போல தூவுங்கள். மரமாக உங்களுக்குள்ளேயே வளரும். உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும், இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது.

உடற்பயிற்சி என்றவுடன் பெரிய ஜிம்முக்கு போக வேண்டும். ‘ட்ரெட்மில்’ வாங்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இதெல்லாம் தேவையில்லை. உடற்பயிற்சி என்றால் ணீநீtவீஸ்மீ வாக இருப்பது. அதாவது திட்டமிட்ட உடல் இயக்கம். நடப்பதே போதும். ஒரு நாளைக்கு 30 முதல் -45 நிமிடங்கள், வாரத்தில் ஜந்து முறை பயிற்சிகள் செய்தாலே போதுமானது. உடலும், உள்ளமும் நலம் பெறும்.


Spread the love
error: Content is protected !!