நீரிழிவுடன் தினசரி வாழ்வது எப்படி?

Spread the love

வரக் கூடாத வியாதிகளில், நீரிழிவும் ஒன்று என்பார்கள். ஆனால் தற்போதைய முன்னேறிய சிகிச்சை முறைகளாலும், விழிப்புணர்வாலும், நீரிழிவுடன் வாழலாம். எப்படி என்ற உங்களின்

கேள்விக்கு, இதோ பதில்
தினசரி செய்ய வேண்டியவை
:

1. உணவுக் கட்டுபாடுகளை கடைப்பிடிப்பது
2. உடற்பயிற்சி, போதிய உடலுழைப்பு இவற்றால் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது
3. நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்வது
4. இரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ளுதல்
இதற்கான சுலப வழி முறைகள்:-

1.உணவு:– நீரிழிவு நோய்க்கு கட்டுப்பாடான சமச்சீர் உணவின் அவசியம் சந்தேகமின்றி ஒன்று. ஒரு நோயாளிக்கு ஒத்து வரும் உணவு, மற்றொரு நோயாளிக்கு ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எனவே உங்களுக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய உணவை நீங்கள் டாக்டர் மற்றும் டயட்டீசியனுடன் கலந்தாலோசித்து தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். உணவு, நீரிழிவு உண்டாக்கும் பல சிக்கல்களை ஓரளவு தடுக்கும் படி அமைய வேண்டும். முக்கியமாக இதயத்திற்கு இதமான உணவாக இருக்க வேண்டும். ரொட்டி, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மாமிசம், பால் – பால் சார்ந்த உணவுகள், கொழுப்புகள் போன்ற உங்களுக்கு பழக்கமான பொது உணவுகளிலிருந்தே உங்களின் தினசரி உணவு திட்டத்தை வரையறுத்துக் கொள்ளலாம். இது உங்கள் குடும்பத்தினருக்கும் ஒத்துப் போகும் படி இருப்பதால், உங்களுக்கு என தனி உணவுகளை தயாரிக்கும் அவசியம் இல்லை. இந்த பொது உணவுகளிலிருந்து உங்களுக்கேற்ற உணவை, புத்திசாலித்தனமாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
· உங்களுக்கு அதிக உடல் பருமனை உண்டாக்காத உணவை தேர்ந்தெடுங்கள்
· உணவில் அளவுகளை தெரிந்து கொள்ளுங்கள்
· உணவால் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் அதிகம் ஆகாமல்  செய்து கொள்ளுங்கள்.

உணவைப் பற்றிய சில யோசனைகள்

1. உணவுகளை திட்டமிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்
2. சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். வேளை தப்பி உண்பதை தவிர்க்கவும்.
3. உட்கொள்ளும் உணவு பாகங்களை தராசில் நிறுத்து சரியான அளவுகளை தெரிந்து கொண்டு உண்ணவும்.
4. கார்போஹைடிரேட், கொழுப்பு சேர்ந்த உணவுகளை அளவாக உட்கொள்ளவும்
5. உணவு நேரங்களின் நடுவே பசியெடுத்தால், தண்ணீர் குடிக்கவும்.
6. வயிறு முட்ட உண்ண வேண்டாம்
7. மதுகுடிப்பது கூடாது.
8. ‘டைனிங் டேபிளில்’ (மேஜையில்) சாப்பிடவும்
9. காய்கறிகள், தானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்
10. உணவை மென்று சாப்பிடவும்
11. எப்போதும் கைவசம் சிறிது சர்க்கரை, சாக்லெட் போன்றவற்றை வைத்துக் கொள்ளவும். தாழ்நிலை சர்க்கரை ஏற்பட்டால் உடனே உட்கொள்ளவும்.
12. சமச்சீர் உணவுக் கலவையை உட்கொள்வது நன்மை பயக்கும் – கார்போஹைடிரேட்ஸ் (அளவாக) புரதம், கொழுப்பு (அளவாக) விட்டமின், தாதுப்பொருட்கள் – இவைகள் உணவில் தேவையான அளவு இருக்க வேண்டும்
13. உணவு மாற்றங்களை (தேவையானால்) தீடிரென்று கொண்டுவராதீர்கள். படிப்படியாக செய்யவும்
14. காய்கறி, பழங்களை (சிபாரிசு செய்யப்பட்ட), 5 தடவை கூட ஒரு நாளில் உட்கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.
15. உப்பு, உப்புள்ள பதார்த்தங்கள் இவற்றை குறைக்கவும்.
அதிக உடல் பருமன் பல நோய்கள், குறிப்பாக டயாபடீஸ், உண்டாக காரணமாகிறது.

உடல் பருமனை சரியான அளவில் வைக்க:-

1. சிறு தட்டுக்களில் உண்ணவும். உணவின் அளவை குறைக்கவும்
2. காலை உணவை தவிர்க்க வேண்டாம்.
3. மெதுவாக உண்ணவும்
4. வேகவைத்த உணவுகள் நல்லது. பொறித்து, வறுத்த உணவுகள் வேண்டாம்.
5. காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
6. மசாலா, உணவுக்கு வாசனை, சுவையூட்டும் பொருட்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்லது என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி. இது பற்றி மேலும் ஆய்வுகள் தேவை.


Spread the love
error: Content is protected !!