சர்க்கரைக்கான சமையல் முறை

Spread the love

நீரிழிவு தொல்லை தரும் நோய்களில் ஒன்று. முற்றிலும் குணப்படுத்த முடியாத வியாதியான நீரிழிவை கட்டுப்பபாட்டில் வைக்க முடியும். அதற்கு முக்கிய தேவைகள் – மருந்துகள் மற்றும் உணவு, நீரிழிவிற்கு மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவு. அதுவும் பத்திய உணவு.

நீரிழிவு நோய் ஏற்படும் முக்கிய காரணம் கணையம் இன்சுலீனை சுரக்க இயலாமல் போவது. இதனால் சர்க்கரை (க்ளூகோஸ்) சக்தி உடலில் சேராமல் போய் ரத்தத்தில் தங்கி விடும். ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

நீரிழிவில் இரு அடிப்படை பிரிவுகள் உள்ளன. தினமும் கட்டாயமாக இன்சுலீனை ஊசி மூலம் ரத்தத்தில் ஏற்றி கொள்ளும் நிலைமையான டைப் – 1 ஒன்றும், மாத்திரைகளாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப்படும் நிலைமை டைப் – 2 என்றும் சொல்லப்படுகிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாட்டின் அவசியம் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதொன்று. உடல் பருமன் அளவுக்கு மீறி இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

நீரிழிவுக்கு ஏற்ற உணவு முறைகள்

1. நீரிழிவு நோயாளிகள் கார்போ-ஹைடிரேட் உணவுகளை உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். பிறகு திடீரென்று இறங்கி விடும். கார்போஹைடிரேட் இரு விதத்தில் கிடைக்கிறது. 1. மாவுச்சத்து – இது ரொட்டி, தானியங்கள், அரிசி, மாவுகள், காய்கறிகள் – முதலியவற்றிலிருந்து கிடைக்கும் சிக்கலான கார்போஹைட்ரேட். 2. சர்க்கரை – பழங்கள், பழரசங்கள், பால், தேன் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் சாதாரண கார்போஹைட்ரேட். எல்லா வகை கார்போஹைட்ரேட்டுகளும், இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். எனவே கார்போஹைடிரேட் உணவுகளை ஒரே தடவையாக உட்கொள்ளாமல், பிரித்து நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பல தடவை உட்கொள்ளவும். இதனால் பசியும் குறையும். நீரிழிவு நோய் நிபுணர்களின் தற்போதைய கருத்து மாறுபடுகிறது. இந்த கால நிபுணர்கள். கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவு மற்றும் நார்ச்சத்து செறிந்த உணவுகளை உட்கொண்டு கொழுப்பை குறைக்கவும் என்கின்றனர், இதனால் கொலஸ்ட்ரால் அளவுகளும் குறையும். எனவே உங்கள் டாக்டரை அணுகி உங்களுக்கேற்ற உணவு முறையை தேர்ந்தெடுக்கவும்.

2. உணவில் உப்பை குறைப்பதும் நல்லது.

3. பருப்பு, காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு ஆனால் கெட்டியாக இருக்கக் கூடாது. நெய், வெண்ணை, வனஸ்பதி வகைகளை முற்றிலும் தவிர்க்கவும்.

4. உண்ணும் பால் ஆடை நீக்கியதாக இருக்க வேண்டும். வீட்டிலேயே தயாரித்த தயிர், பனீர், சோயா பாலிலிருந்து எடுக்கப்பட்ட பனீர், தயிர் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

5. ஒரு பொழுதும், விரதம் இருத்தல் போன்ற பழக்கங்கள் கூடாது. சாப்பிடாத வேளைக்கான உணவை, அடுத்த வேளையில் சேர்த்து சாப்பிடக் கூடாது.

6. நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம். குறிப்பிட்ட உணவு வகைகள் கட்டுப்பாடான அளவுடன் சாப்பிட வேண்டும்.

7. மாதம் ஒரு முறை தங்கள் எடையை ஒரே எடை இயந்திரத்தின் மூலம் எடுத்து குறித்துக் கொள்ள வேண்டும்.

8. மாத்திரை அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்ளும் போது மயக்கம் வந்தால் உடனே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.

9. எந்த விதமான கஞ்சி, கூழ், களி சேர்த்துக் கொள்ளக் கூடாது.

10. வறுத்த உணவுகள் – காய்கறிகளை விட கூட்டு, அவியல் செய்து சாப்பிடுவது நல்லது. கிழங்கு வகைகளை (முள்ளங்கி தவிர) அதிமாக சாப்பிட வேண்டாம், இவற்றில் கார்போஹைடிரேட் சீக்கிரம் ஜீரணமாகி, ரத்த சர்க்கரை அளவை ஏற்றும்.

11. அரிசி, மைதாவை விட கேழ்வரகு பயன்படுத்தலாம்.

12. முக்கியமாக, மூன்று வேளை உணவை ஆறு வேளை உணவாக பிரித்துக் கொண்டு உண்ணவும். ‘ஓவராக’ சாப்பிடாதீர்கள்.

13. குறைவான உப்பை பயன்படுத்தவும்.

14.உணவு முறையை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் உடல் நிலை, உயரம், எடை போன்றவைகளை கருத்தில் கொண்டு, உங்களுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு விரிவான ஆலோசனை உங்கள் டாக்டரிடம் பெற்றுக் கொள்ளவும்.

மிதமாக வாரம் ஒரு முறை சேர்க்கக் கூடிய காய்கறிகள்: பட்டாணி, சுண்டைக்காய், கேரட்.

மாதம் இருமுறை சேர்க்கக் கூடிய காய்கறிகள்: கிழங்கு வகைகள், சேனை, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை, வாழைக்காய், டபுள்பீன்ஸ் விதை போன்ற வகைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு.

தினமும் சேர்க்கக் கூடிய பழ வகைகள் ஏதாவது ஒன்று மட்டும்: (சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்)

1/2 ஆப்பிள், 1 சாத்துக்குடி, பச்சை வாழைப்பழம் 1/2 மட்டும், தக்காளி 1 சிறியது, கொய்யாப்பழம் சிறியது 1, மலைவாழைப்பழம் 1, ஆரஞ்ச் 1.

வாரம் ஒரு முறை சேர்க்கக் கூடிய பழங்கள்: (சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்)

பச்சை திராட்சை 10 லிருந்து 15, பப்பாளி, தர்பீஸ், கிர்ணிபழம் – 100 கி, மாதுளை 1.

தாராளமாக சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்: வெள்ளரி, எலுமிச்சம்பழம், மோர், வெஜிடேபிள் சூப், உப்பிட்ட ஊறுகாய் (எண்ணெய் இல்லாமல்)

பயன்படுத்தக் கூடிய எண்ணெய்கள்: நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ரீஃபைண்ட் எண்ணெய்.

அசைவம் சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்: முட்டை 1  (வெள்ளைக் கரு 2 மட்டும்), மீன் 2 துண்டு அல்லது கோழிக்கறி ( தோல் நீக்கியது) 100 கிராம் (5 துண்டு) அல்லது ஆட்டுக்கறி 100 கிராம் ( 5 துண்டு).


Spread the love
error: Content is protected !!