உலகிலேயே அதிக மக்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நாட்டில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது என்றால் சற்றே அதிர்ச்சி அடைவீர்கள். உலகில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் ஐவரில் ஒருவர் இந்தியர் என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகிறது. சர்க்கரை நோய் வந்தால் எல்லா நோய்களும் வரிசை கட்டி நிற்கும். எனவே அதை ‘தொடரி’ என்று கூறலாம். சர்க்கரை நோயின் காரணமாக இருதயம், சிறுநீரகங்கள், கண்கள், கால்கள் என உடலின் முக்கிய பாகங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் தான் சர்க்கரை நோய் வந்துவிட்டால் மக்கள் பயம்கொள்ள நேரிடுகிறது.
சர்க்கரை நோய் குணப்படுத்த இயலுமா? முற்றிலும் குணப்படுத்த முடியாது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உடல் கட்டுபாடு, உணவுக்கட்டுப்பாடு, வாழ்க்கைச் சூழலில் நடந்துகொள்ளும் முறைகள் மூலம் சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமாக, நிறைவான வாழ்க்கை வாழ இயலும்.
சர்க்கரை நோய் என்றால் என்ன? எதன் காரணமாக எற்படுகிறது? எப்படி அதனை அறிந்து கொள்வது? கட்டுப்படுதுதுவதற்குரிய வழி முறைகள் என்ன?
அதிக பசி எடுத்தல், அதிக தாகம் எடுததல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் அசதி, சோர்வு, கால் மரத்துப்போதல், ஆறாத காயம், புண்கள், தொடர் தசைப்பிடிப்பு ஆகியவை சர்க்கரை நோய்க்கான பாதிப்பு தரும் அறிகுறிகளாக இருக்கலாம். ஒரு சில சமயங்களில் அறிகுறிகள் ஏதுமின்றியும், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக காணப்படலாம். தாய் தந்தை இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தாலோ, தந்தைக்கோ அல்லது தாய்க்கோ மட்டும் சர்க்கரை இருந்தாலோ, தாத்தா, பாட்டி, மாமா அத்தை, சித்தப்பா என உறவினர் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தாலோ வாரிசுகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புண்டு.
வயிற்றுப்பாகத்தில் அதிக கொழுப்புச் சத்து சேர்ந்து, உடன்பருமனாக உள்ளவர்கள், அடிக்கடி குழந்தை பெறும் பெண்கள், எப்பொழுதும் பரபரப்புத் தன்மையுடையவர்கள், மன அழுத்தம் உடையவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள் மற்றும் முதுமையும், புகைப்பிடித்தல், மதுப்பழக்கமும் சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள் ஆகும். சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே நாம் கண்டுபிடித்துவிடுவதால் அதை எளிதில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும். சர்க்கரை நோய் என்ற நிலையை எட்டாமல் நோய் வருவதற்குரிய காலத்தையும் தள்ளிப்போட முடியும். உங்கள் எடை அதிகமாக இருக்கறதா? அதனைக் குறைக்க முயற்சிக்கலாம். உணவுப் பிரியரா? கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்ளலாம். உடல் உழைப்பு இல்லாதவரா? தினமும் வாக்கிங் உட்பட உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். எப்பொழுதும் பரபரப்பாக, டென்ஷனாக இருப்பதைக் குறைக்க யோகா, பிரணாயாமம் போன்றவை மேற்கொள்ளலாம். இத்தகைய நிலையில் நீங்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை இரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்துகொள்வதை அவசியமாக செய்துவிடவும்.
உணவுக் கட்டுப்பாடுகளை எவ்விதம் ஏற்படுத்திக்கொள்ளலாம்?
உடற்பயிற்சியானது ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த எவ்வளவு உதவுகிறதோ அதுபோல உணவுக் கட்டுப்பாடும் உதவுகிறது. இதற்கு நாம் என்ன வகையான உணவுகளை உட்கொள்ளலாம்? எவ்வகையான உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பதனை அறிந்துகொள்ள வேண்டும். திட்டமிட்ட உணவுக்கட்டுப்பாடு நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைத்துவிடுகிறது. சர்க்கரை நோய் வந்தபின்பு காபி, டீ, பானங்கள் அனைத்திலும் சர்க்கரையை தவிர்த்துவிடுதல் முக்கியம். அனைத்துவித ஊட்டச் சத்துக் கொண்ட ஆரோக்கியமான உணவு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தினசரி தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இட்லி, எண்ணெய்க் குறைவான தோசை, அளவுடன் கூடிய சாதம், சப்பாத்தி, சுண்டல் உள்ளிட்ட தானியவகைகள், நார்ச்சத்து மிகுந்த பச்சைக் காய்கறிகள் என்று உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும். ஒரு மணி நேரம் தொடர்ந்து 5 கி.மீ. தொலைவுக்கு நடக்கலாம். வெறும் வயிற்றிலோ, அல்லது அதிகம் சாப்பிடாமலோ நடைப்பயிற்சி செய்யக்கூடாது. காபி, டீ அல்லது பாலுடன் சர்க்கரை சேர்க்காமல் இரண்டு மூன்று பிஸ்கட்டுகள் எடுத்துக் கொண்ட பின்பு நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம். இவ்வாறு வாரத்திற்கு ஆறு நாட்களாவது குறையாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி செய்வதனால், கணையத்தில் உள்ள இன்சுலின் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும். உடலுக்கு நல்ல கொழுப்புச் சத்துக்கள் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், மெது ஓட்டம், கயிறு தாண்டுதல் போன்றவைகளும் சிறந்த உடற்பயிற்சிகள் தான்.
சர்க்கரை நோயின் விளைவுகளைத் தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டிய பரிசோதனைகள்
சர்க்கரை நோயாளிகளை அவர்களின் சிறுநீரகங்கள், இதயம், கண்கள், கால் நரம்புகள் ஆகியவற்றை பாதிக்க வாய்ப்புண்டு. இதன் காரணமாக, அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை முழுமையான சர்க்கரை நோய்ப் பரிசோதனையை செய்துகொள்வது அவசியமாகிறது. சர்க்கரை நோய் காரணமாக மேற்சொன்ன முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட உறுப்புக்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும். மீண்டும் அதே உறுப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும், மற்ற முக்கிய உறுப்புக்களை பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளவும் நமது வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அவசியமாகிறது.
இரத்தச் சர்க்கரை அளவை நாமே பரிசோதித்துத் தெரிந்துகொள்ளலாம். கையடக்க குளுக்கோஸ் மீட்டர் மூலம் ரத்தச் சர்க்கரை அளவை வாரத்திற்கு இரு முறை நமது வீட்டிலேயே பரிசோதித்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை அளவு கூடியிருக்குமெனில் அதற்கு காரணம் என்ன (நாம் சாப்பிட்ட உணவு, மாத்திரை சாப்பிடாமல் அலட்சியப் படுத்தியிருத்தல் மற்றும் பிற காரணங்களை) குறித்து புரிந்துகொள்வதுடன் அதனை சரிசெய்துகொள்ள இயலும். தாழ்நிலை சர்க்கரை அளவு காணப்படின், பழ ஜீஸ், மூன்று, நான்கு பிஸ்கெட் போன்றவற்றைச் சாப்பிட்டு இரத்தச் சர்க்கரை அளவை சரி செய்துகொள்ள வேண்டும். அடுத்த வேளை உணவைத் தள்ளிப்போடாமல் உடனடியாக சாப்பிட்டுவிடுங்கள்.
ஆயுர்வேதம்.காம்