தமிழில் மல்லி எனவும் ஆங்கிலத்தில் கொரியான்டர் சீட்ஸ் எனவும் இந்தியில் தனியா எனவும் அழைக்கப்படும் விதைகள் மற்றும் காய்கள் நாம் அன்றாடம் காய்கறிக் கடைகளில் வாங்கி வரும் கொத்தமல்லிச் செடியின் விதைகள் மற்றும் காய்கள் ஆகும். கொத்தமல்லிச் செடிகளை இளசாக இருக்கும் பொழுது பறித்து விட்டால் கொத்தமல்லியாகும். அதனையே பூத்துக் காய்க்க விட்டால் அதன் காய்கள் மற்றும் விதைகள் தான் மல்லி. கொத்தமல்லியின் பூக்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்தச் செடிகள் பூப்பதற்கு முன்பு மட்டுமே இதன் இலைகள் நறுமணத்துடன் இருக்கும். அந்த இலைகளில் தாவர எண்ணெய் அதிகமாகக் காணப்படும் (6.3%). பூத்துக் காய்த்து விட்டால் இலைகளில் உள்ள தாவர எண்ணெய் காய்களுக்கு இடம் பெயர்ந்து விடும். இதனால் தான் இலைகள் நறுமணத்தை இழந்து விடுகின்றன.
நாம் நமது கிச்சன் கிளினிக்கில் அடுத்து கண்டு கொள்ள வேண்டிய பொருள் மல்லி. இதனை சாதாரணமாக மசாலாவுடனும் குழம்பு பொறியல் போன்றவற்றுடன் சேர்த்துக் கொள்வோம் என்று அனைவரும் அறிந்தது. ஆனால் இதற்கென பிரத்யேக மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலருக்கும் வியப்பாக இருக்கலாம். மல்லியை இளம் சூட்டில் வறுத்து பொடியாக்கி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து பயன்படுத்தி வந்தால், இது பல உடல் நலக்கேடுகளை சீராக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மல்லி,- சுக்கு மல்லிக் காபியில் ஒரு மூலப் பொருள். இதனை சுக்குடன் சேர்த்து சிறிது வெந்நீரில் போட்டு காய்ச்சி பருக வாய்வுத் தொல்லை விலகும். மல்லிப் பொடியை சிறிது தண்ணீரில் இட்டுக் காய்ச்சிப் பருக வாய்வு பிரியும்.
சுக்கு, தேன் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் வலி, அசதி நீக்கும்.
ஒரு கரண்டி மல்லிப் பொடியை தண்ணீரில் இட்டு காய்ச்சி இரவு பருக வயிற்று வலி நீங்கும். மலம் எளிதாக வெளியேறும். நல்ல தூக்கம் வரும்.
காலையில் நான்கு கரண்டியளவை தண்ணீரில் ஊற வைத்து இரவு படுக்கும் முன்பு சாப்பிட மன அழுத்தம் நீங்கும். ஆழ்ந்த தூக்கம் வரும். ஒன்றிரண்டு கரண்டி மல்லிப் பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட தீராத கழிச்சல் தீரும். மலம் கழிவது இயல்பாக நடைபெறும்.
தமிழ் சித்தர்கள் மல்லியின் பயனை நன்கு அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் இதனை, சாதாரண உடல் வலி, தலைவலியில் ஆரம்பித்து ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு வரை பயன்படுத்தியுள்ளனர். குழந்தை பெற முடியாத ஆண்கள் பெண்கள் மல்லிப் பொடியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது குழந்தை உண்டாக வழி வகுக்கும்.