யோகா உலகெங்கும் பரவிய காரணம் அது உடலுக்கு மட்டுமன்றி, மனதுக்கும் ஆரோக்கியத்தையும் அமைதியையும் கொடுக்கிறது என்பதால் தான். ஹதயோகம், தியானம், கர்மயோகம், ஞானயோகம் போன்ற பல அம்சங்களை தன்னிடத்தே கொண்டிருப்பதால் யோகா ஒரு முழு பயிற்சி முறை.
மன அமைதியை பெற, இறைவனை அடைய, கடைப்பிடிக்க வேண்டிய பல வழிகளில் ஒன்று பக்தி யோகம். நமது இதிகாசங்கள், இலக்கிய நூல்கள் இவைஎல்லாவற்றிலும் இறை நெறி வலியுறுத்தப்பட்டு வந்திருப்பதால், பொதுவாகவே பக்தி நெறி நம்மிடையே அதிகம். எனவே பக்தி யோகத்தை கடைப்பிடிப்பது சுலபம்.
இன்றைய உலகம் பரபரப்பான, “டென்ஷன்” நிறைந்த ஓடும் உலகம். பல மன நோய்கள் அதிகமாகி வரும் காலமிது. ஏனென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற போட்டிகள் நிறைந்த காலமிது. சமாளிக்க முடியாதவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு அருமருந்து தியானமும், பக்தியும்.
கடவுள் இருக்கிறார் என்பதை தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியாது. நம்பினோர்க்கு கடவுள். நம்பாதவர்களுக்கு கல். நம்பியவர்களுக்கு கடவுள்தான் எங்கும் நிறைந்தவர். எல்லாம் அறிந்தவர். அவரன்றி ஓர் அணுவும் அசையாது. பிரபஞ்சத்தின் பொருளே கடவுள்தான்.
ராமாநுஜர் பக்தி மார்க்கத்தை கடைப்பிடிக்க 7 வழிகளை சொல்கிறார்.
அவை:
1. விவேகா
2. விமோகா
3. அப்யாசம்
4. க்ரியா
5. கல்யாணா
6. அனுத்தார்சா.
இவற்றை விரிவாக பார்ப்போம்
1. விவேகா: சாத்விக உணவை உட்கொள்வது. உணவு சுத்தமாக, தூய்மையாக தயாரிக்கப்பட வேண்டும்.
2. விமோகா: பக்தர் உலக சுகங்களிலிருந்து விலக வேண்டும். இந்திரியங்களை கட்டுப்படுத்த வேண்டும். உண்மையான உழைப்புக்கேற்ற ஊதியம் பெருவதில் தவறில்லை.
3. அப்யாசம்: அடிக்கடி கடவுளை நினைக்கவும். கடவுளின் பெயரை உச்சரிக்கவும். சிந்தையை கடவுளிடம் வைக்கப்பழகவும்.
4. க்ரியா: உங்களுக்கு விதிக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்தல்.
5. கல்யாணா: எல்லோருடனும் அன்பாக இருத்தல். மற்றவர்க்கு மனதாலும் செயலாலும் தீங்கிழைக்கக் கூடாது. சத்தியத்தை கடைபிடிக்கவும். பேராசையை தவிர்க்க வேண்டும். பிறர்பொருளை நாடக்கூடாது. முடிந்த வரை ‘தர்மம்‘ செய்யவும். மனமும், வாயும் ஒன்றாக செயல்பட வேண்டும்.
6. அனவாசதா: மனதை அமைதியாக சாந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எதற்கும் கவலைப்படாமல் எப்போதும் அமைதி காக்கவும். இதனால் பொறுப்புக்களை கவனிக்காமல், கவலைப்படாமல் இருக்க சொல்லவில்லை. வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை எதிர்நோக்க, அமைதியான அணுகுமுறை தேவை.
7. அனுத்தார்சா: அதீதமாக உணர்ச்சி வசப்படக்கூடாது. நல்ல விஷயங்களுக்கு மிகையாக ஆனந்திப்பது. கஷ்டம் வந்தால் துக்கிப்பது இவற்றை தவிர்க்கவும்.
அஷ்டாங்க யோகம்
மேற்சொன்னவைதவிர, கீழ்க்கண்ட வழிகளும் பக்தி யோகமாகும்.
1. யமா: இவை ஐந்து – அஹிம்சை, சத்யம், பிரமசரியம், ஆஸ்தேயா (திருடாமலிருப்பது) மற்றும் அபரிக்குஹா (பொருட்களின் மேல் ஆசை வைக்காமல் இருப்பது)
2. நியமம்: வேதத்தை (முடிந்தவர்கள்) உச்சரிக்கவும். கடவுளை அடிக்கடி நினைக்கவும். எது நடந்தாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளவும். ஜபம்செய்யவும்.
3. ஆசனா: சரியாக அமர்வது, நிற்பது (குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்)
4. பிராணாயாமா: சுவாச கட்டுப்பாடு (குருவிடம் கற்றுக் கொள்ளவும்)
5. பிரத்தியாஹாரா: ஐம்புலன்களை கட்டுப்படுத்துவது. உடல் இன்பங்களை துறந்து கடவுளை பேரின்பமாக கருதி வழிபடுதல்.
6. தாரணா: மனதை கடவுளின் பெருமைகளில் நிலைப்படுத்துவது.
7. தியான: தியானம் (குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது)
பஞ்சமகாயக்னம் எனப்படும் மேலும் சில வழிகள்
(யக்னம் என்றால் தியாகம், தொழுதல் என்று பொருள்)
1. ப்ரம்ம யக்னம்: வேதத்தை பாராயணம் செய்வது. (இல்லாவிட்டால் உங்களுக்கு தெரிந்த இறைவனின் துதிகளை பாராயணம் செய்யலாம்)
2. தேவயக்னம்: தேவர்களை வணங்குதல்
3. பித்ருயக்னம்: மூதாதையர்களை தொழுதல்
4. பூதயக்னம்: எல்லா ஜீவராசிகளையும் வணங்குதல்
5. மனுஷ்ய யக்னம்: விருந்தோம்பல் – விருந்தாளிகளை கௌரவித்தல்
கர்மயோகமும், ஞனயோகமும் நம்மை பக்தி யோகத்திற்கு கொண்டு செல்லும். பக்தியோகத்தை கடைப்பிடிக்க, சில நடைமுறை யோசனைகள்.
1. தினமும் பூஜை செய்யவும். அடிக்கடி கோயில்களுக்கு செல்லவும். கடவுளை துளசியாலும் மலர்களாலும் அர்ச்சிக்கவும்.
2. ஜபம் செய்யவும்
3. புலன்களை கட்டுப்படுத்தவும். ஒழுக்கமாக இருக்கவும்.
4. உண்மையாக உழைத்து சம்பாதிக்கவும்.
5. புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரைகள் மேற்கொள்ளவும்.
6. வீட்டில் சமைத்த உணவை முதலில் கடவுளுக்கு அர்ப்பணிக்கவும்.
7. முடிந்த அளவு தானதர்மம் செய்யவும்
8. தினமும் பிராணாயாமம் செய்யவும்.
9. ஒரு குருவை ஏற்படுத்திக்கொண்டு, பக்தியோகத்தை கடைப்பிடிக்கவும்.
10. கடவுளிடம் சரணாகதி அடையவும்