நம்மில் பலருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுகிறது. ஆன்மீகத்தில் ஆசைக்கு இடமில்லை. இதனால் உண்மையான பக்தர்கள் ஆசையை வெல்ல முயல்கின்றன. ஆனால் ஆசை திரும்பி திரும்பி ஏற்படும். நீதி நூல்களில் ஒன்றான நீதி வெண்பா கூறுகிறது.
ஆசை விட்டவன் அகிலத்தையே ஆள்வான்
ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே;- ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான்.
ஆசைக்கு அடிமைப்பட்டிருப்பவன் இவ்வண்டத்தில் உள்ள எல்லாப் பொருளுக்கும் சரியான அடிமை ஆவான்; ஆசையை அடக்கி அதனைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டவன் கொஞ்சமும் தப்பாது உலகத்தையெல்லாம் அடிமையாக்கிக் கொண்டவன் ஆவான்.
ஆசை திரும்பி, திரும்பி ஏற்படுவதின் காரணம் ஒரு வைராக்கியம் இல்லாது போதல். இந்த வைராக்கியம் விவேகத்தினால் ஏற்படும். விவேகத்தால் வைராக்கியம் வரும் வைராக்கியத்தினால் ஆசை வெளியேறும். கர்மயோகம், மனதால் பூஜை செய்வது, இறைவனின் சிந்தனை தியானம் இவற்றை செய்து வந்தால் மிகவும் நல்லது. இவற்றால் ஆசையை அடக்க முடியும். ஒரு ஸ்பிரிங் போன்றது ஆசை. ஆசை எனும் ஸ்பிரிங்கை இழுத்து விட்டால் திரும்பவும் தனது பழைய நிலைக்கு வந்து விடும். அரை குறையாக ஆசையை வெல்வது பயனில்லை.
முயன்று பார்த்தும் ஆசைகளை அடக்க முடியாமல் போனால், முழுமையாக ஆன்மீகத்தில் மனம் செலுத்த வேண்டும். அடிக்கடி கோயிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்தால், ஆன்மீக புத்தகங்களை படிப்பது நல்ல நண்பர்கள் இவற்றால் மனதை அடக்கலாம்.
ஆசைகள் தான் உலகிலுள்ள துயரங்களுக்கு காரணம் என்று மகான் கௌதம புத்தர் சொல்லியிருக்கிறார். ஆசையை அடக்காவிட்டால் இறக்கும் வரை துன்பமே என்கிறது கீழ்க்கண்ட “நல்வழி பாடல்”
அமைதி வேண்டின் போதுமென்ற மனம் வேண்டும்
உண்பது நாழி; உடுப்பது நான்குமுழம்;
எண்பது கோடி நினைந்து எண்ணுவன; – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.
ஒருவன் உண்பது நாழி அளவுள்ள அரிசியே; உடுத்திக் கொள்வதோ நான்கு முழத் துணி; ஆனால் மனத்தால் (நினைந்து மாறி மாறி) எண்ணுவதோ எண்பது கோடி.
நல்லறிவு பெற்றிராத மக்கள் வாழும் குடிவாழ்க்கை மண்ணால் செய்யப்பட்ட பாண்டம் போல; இறக்கும் வரை துன்பமே.