மனத்தொய்வு

Spread the love

மனத்தொய்வு (Depression) எதிர் கொள்ள எளிய வழிகள்

நீலாவுக்குப் இருபது வயது ஆனதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தை ஒட்டி ஒரு இனந் தெரியாத, ஆழ்ந்த சோகம். மனச் சோர்வு அவளைக் கவ்விக் கொள்ளும். ஏறக்குறைய மூன்று மாதங்களிலிருந்து விட்டுதான் அது விலகும்.

மோகராஜனுக்கு வயது நாற்பது. ஒரு பள்ளி ஆசிரியர். எந்த நேரமும் மனத் தொய்விற்கும், மனத் தளர்ச்சிக்கும் ஆட்பட்ட இவர் பெரும்பாலும் ஒளி இன்றி, மகிழ்ச்சி குன்றி, களைத்துப் போய் இருப்பார். இது போன்றதொரு மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை வாழ்வதை விட இறந்து போவது மேல் என்று கூடப் பல நேரங்களில் எண்ணுவதுண்டு, பேசுவதும் உண்டு.

சாரதா, ஒரு மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றுகிறாள். சென்ற ஆறு ஆண்டுகளாக இடைவிடாத மனத் தொய்வினால் மன நலமும் உடல் நலமும் இழந்து தவிக்கிறாள். ஓரிரு முறை தன் வாழ்வை முடித்துக் கொள்ளக் கூடத் தீவிரமாக முயன்றிருக்கிறாள். இது தொடர்பாகத் தான் வேலை செய்யும் மருத்துவமனையிலுள்ள மன நோய் மருத்துவர்களை மட்டுமின்றி வேறு சில மருத்துவர்களையும் கண்டு தன் மனநோயை மாற்றும்படி வேண்டிக் கொண்டிருக்கிறாள். இது போன்றதொரு நிலையையே மனத்தொய்வு (Depression) என்று மன நோய் மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

நாகரீக மிக்க, வளர்ந்த நாடுகளிலுள்ள மக்களிடையே மட்டும் அதிகமாகக் காணப்பட்ட இந்நோய் தற்போது இந்தியர்களிடையேயும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஏறத்தாழ 50 முதல் 60 சதவிகிதம் மக்கள் எப்பொழுதாவது தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு இந்நோயின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர்.

ஜலதோஷம் என்பது எப்படி உடலுக்கு ஏற்படும் சாதாரண உடல் நலக் குறைவோ அதே போன்று மனதில் ஏற்படும் ஒரு வகை மனநலக் குறைவே இம் மனத்தொய்வு. இது இயல்பானது. எவருக்கும் வரக்கூடியது. என்பதை பெரும்பாலோர் உணரத் தலைப்பட்டுள்ளனர். மனத் தொய்வினால் தாங்கள் மகிழ்ச்சி குன்றி இருப்பதைத் தற்போது வெளியில் சொல்லவோ, மருத்துவம் செய்து கொள்ளவோ எவரும் வெட்கப்படுவதில்லை.

பொதுவாக இம்மனநோய் எவரையும் தாக்கக் கூடியது என்றாலும் இதனால் பாதிக்கப்படுபவர்களில், மூன்றில் இரண்டு பங்கினர் 25 க்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே. பள்ளி மாணவர்களையும் சிறுவர்களையும் கூட இது பாதிப்பதுண்டு. சிலர் இதன் தீவிரமான பாதிப்பிற்கு ஆளாகி அல்லல் படுவதையும் காண முடியும்.

அடிக்கடி உடற்சோர்வு, உற்சாகமின்மை, பசியின்மை, ஆழ்ந்த உறக்கமின்மை, தாம் வாழ்வதில் பயனோ பொருளோ இல்லை என்பது போன்றதொரு உணர்வு, வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டுமென்ற உந்துதல் போன்றவைகளே இம்மன நோயின் உணர்குறிகள். பாலுறவு உட்பட உலக சுகங்களில் பற்றில்லாது போகின்ற நிலையும் இவர்களிடம் காணப்படும்.

மனமகிழ்ச்சி குன்றிய இவ்வகை நோயாளிகளிடையே மலச்சிக்கல், தலைவலி, கைகால் வலி, தலைசுற்றல், குமட்டல் போன்ற உடல் தொடர்புடைய குறைபாடுகளும் தோன்றக்கூடும்.

இது போன்ற எளிய மனநோய் பற்றி அண்மைக் காலமாகப் பல ஆய்வுகள் நடத்தப்பெற்றுள்ளன. இந்நோயை எவரும் வேண்டுமென்று விரும்பிப் பெறுவதில்லை. மாறாக மக்கள் பின்பற்றுகின்ற வாழ்க்கை முறைகளையும், அவர்கள் வாழுகின்ற வாழ்க்கைச் சூழலையும் (Environment) பொறுத்தே இது ஏற்படுகிறது என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வருந்தத் தக்க செய்தி என்னவென்றால் மனத்தொய்வினால் பாதிக்கப்படுகின்றவர்களில் 80 சதவிகிதத்தினர் இதன் பிடியிலிருந்து எளிதாக மீள முடியும் என்றாலும் பெரும் பகுதியினர் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவதில்லை என்பது தான்.

வாழ்க்கைத் துணை இழப்பு, மனமுறிவு, தம்பதிகளிடையே மனக்கசப்பு, வேலையின்மை, வேலையிழப்பு, பொருள் இழப்பு, நம்பிக்கைத் துரோகம் போன்ற காரணங்களால் மனத் தொய்வு ஏற்படக்கூடும் என்றாலும் பெரும்பாலோருக்கு இது நடைமுறை வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்றது.

பொதுவாக அட்ரீனல் சுரப்பியின் சுரப்புக் குறைவதே இவ்வகை மனத்தொய்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அடுத்து ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களும், முறை கேடான உணவுப் பொருள்களும் இந்நோயைத் தோற்றுவிக்கலாம்.

நவீன மருத்துவமுறையில் மனத்தொய்வுக்கு திறன் மிக்க பல மருந்துகள் உள்ளன. எனினும் இவைகளினால் சில விரும்பத் தகாத பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதுடன் அவைகளால் நிரந்தரமான தீர்வும் ஏற்படாது போகலாம். என்பது தான் நிதர்சனமான உண்மை.

அண்மைக்காலமாக உணவு முறை மாற்றங்களாலும் வாழ்க்கை முறை மாற்றங்களாலும் மனத்தொய்வை எளிதில் மாற்ற முடியும் என்பது உணரப்பட்டு வருகிறது. செரடோனின் மற்றும் நார்எபி நெப்ரின் எனப்படும் மூளை வேதிகளின் சுரப்பை அதிகரிக்கின்ற தானியங்கள், கீரைவகைகள், பச்சைக் காய்கறிகள், முட்டை, மீன் வகைகள் போன்றவற்றால் மனத்தொய்வை மாற்ற இயலும் என்பதை டாக்டர். ஜீன் பேக்கர் மில்லர் என்னும் அமெரிக்க மருத்துவர் நிரூபித்துள்ளார்.

வெளிச்சம் இல்லாத இருள் சூழ்ந்த அறைகளில், வீடுகளில், அலுவலகங்களில் வாழ்கின்றவர்களை மனத்தொய்வு எளிதாகப் பாதிக்கிறது. இதை மாற்றுவதற்காக மன நோய் மருத்துவர்கள் இவ்வகை நோயாளிகளை ஒளி மிகுந்த விளக்குகள் சிலவற்றை வரிசையாக வைத்து அவற்றின் முன்னர் தினமும் ஒரிரு மணி நேரம் உட்கார்ந்து இருக்கச் செய்கிறார்கள்.

மனத்தொய்வை நீக்குவதில் உடற்பயிற்சி முக்கிய இடம் பெறுகிறது. அது உடலை நல்ல இயக்கத்தில் துடிப்புடன் வைப்பதுடன் மனதிற்கு உற்சாகத்தையும், அமைதியையும் தருகிறது. உடற்பயிற்சி இரத்தத்திலுள்ள ஹார்மோன்களின் அளவினை உயர்த்துவதுடன் பீட்டா எண்டார்பின் (Beta – Endorphinsஎனப்படும் மனநிலை மாற்றும் மூளை வேதிகளை அதிகரிக்கச் செய்கிறது. விரைந்த நடைப்பயிற்சி, மெல்லோட்டம், டென்னிஸ், பூப்பந்தாட்டம் போன்றவைகளில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும்.

தவிர, புஜங்காசனம், ஹாலாசனம், சலபாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நரம்புகளும், தசைகளும் வலுப்படுத்தப்பட்டு உடலும் மனமும் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. அத்துடன் ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கின்றது.

மனத்தொய்விற்கு ஆழ்நிலை தியானம் சிறந்ததொரு மருந்தாக அமைகிறது. மனதை அலைய விடாமல் ஒரு நிலைப்படுத்துகின்ற போது மனதைச் சூழ்ந்திருக்கின்ற அச்சமும், குழப்பமும் நீங்கி மனம் அமைதியடைகின்றது. இதனால் தசைகள், களைப்பு நீங்கி இயல்பாக இயங்கத் தொடங்குகின்றன. இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. தியானம் மட்டுமின்றி சவாசனமும் இந்நிலையை அடைய உடலில் சுரப்பிகளின் இயக்கமும் சீராக்கப்படுகிறது. தினமும் இச்சவாசனத்தை 10 முதல் 15 நிமிடங்கள் செய்யலாம்.

மனத்தொய்வை மாற்றுவதில் வெதுவெதுப்பான வெந்நீர் குளியலும் பெரிதும் உதவுகிறது. குளியல் தொட்டியில் 92 டிகிரி தி முதல் 98 டிகிரி தி வரையிலான வெப்பமுடைய நீரை நிரப்பி அதில் அமிழ்ந்து நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது குளித்து, மனத் தொய்வை மாற்ற முயலலாம்.

மனத் தொய்விற்கான பிற வேதிப்பொருட்கள் அடங்கிய மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட்டொழித்து இயற்கையான முறையில் எதிர்கொள்ள வேண்டும். ஆயுர்வேத மருத்துவ முறையில் மனத்தொய்வை எதிர்கொள்ள வாத தோஷங்களைக் கண்டறிந்து அவற்றை தேவைக்கேற்ப மாற்றி அமைப்பதால் மனத் தொய்வு விலகி மனம் சீராகின்றது. இதற்கு ஏலக்காய், மிளகு போன்றவற்றை கஷாயமாக எடுத்து பயன்படுத்தப்படுகின்றது. இவை தவிர சுக்கு, மல்லி, சீரகம், பாதாம் போன்ற பிற மூலிகைகளும் ஆயுர்வேதத்தில் பயன்தருகின்றன. முறையான சிகிச்சைக்கு மருத்துவரை அணுகுவது நல்லது.


Spread the love