தீபாவளி என்றாலே தித்திக்கும் இனிப்புகள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இப்பொழுது நம் வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லோருக்கும் அதிகமாக நோய்கள் வந்துவிட்டன. அதனால் பலகாரம் என்ற உடனே பயந்து ஓடி விடுகின்றனர். இனி கவலை இல்லாமல் அனைவருமே பலகாரம் சாப்பிடலாம்.
வெஜ் கத்லி
தேவையான பொருட்கள்
- கடலைப் பருப்பு – ஒரு கப்
- நாட்டு சர்க்கரை – 2 கப்
- காய்கறி கூழ் – அரை கப்
- (காய்கறிகளை வேகவைத்து அரைத்து கொள்ளவும்)
- வெனிலா எசன்ஸ் – சிறு துளிகள்
- நெய் – 2 டீஸ்பூன்
- முந்திரி – 50 கிராம்
- பாதாம் – 30 கிராம்
- பிஸ்தா – 20 கிராம்
- வெள்ளரி விதை – தே.அளவு
- பால் பவுடர் – 250 கிராம்
செய்முறை
கடலைபருப்பை வேகவைத்து மிக்சியில் நன்கு அரைத்து வைத்து கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கப் தண்ணீர், சர்க்கரை, காய்கறி கூழை சேர்த்து பதம் வரும் வரை கொதிக்க விடவும். பின்பு, அரைத்து வைத்துள்ள கடலைபருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது கெட்டியாக வரும் போது சிறிது நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.
பிறகு பால் பவுடர் சேர்த்து கிளறி அதனுடன் சிறிது வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கிளறி பின் அதனை ஒரு தட்டில் கொட்டி நமக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி கொள்ளவும், பின்பு அதனை அலங்கரித்து பரிமாறிக்கொள்ளவும்.
கோதுமை பாதுஷா
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு – ஒரு கப்
- நெய் – 5 டீஸ்பூன்
- தயிர் – 2 டீஸ்பூன்
- சோள மாவு – 1 டீஸ்பூன்
- சமையல் சோடா – தே.அளவு
- பனங்கற்கண்டு(பொடி) -ஒரு கப்
- தண்ணீர் – அரை கப்
- எண்ணெய் – தே.அளவு
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரையை சேர்த்து பதம் வரும் வரை கொதிக்க விடவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய் ஆகியவற்றை சேர்த்து பிசையவும். தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து அடித்து மாவுடன் கலந்து பிசையவும். பின்பு மாவை உருண்டையாக உருட்டி உள்ளங்கையில் அழுத்தி எண்ணெயில் பொரித்து, சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும். பின்பு அதனை சாப்பிட பரிமாறலாம்.
ராகி அப்பம்
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு – கால் கப்
- கோதுமை மாவு – அரை கப்
- தேங்காய் துருவல் – அரை கப்
- தயிர் – கால் கப்
- பனை வெல்லம் – ஒரு கப்
- நெய் – கால்டீஸ்பூன்
- சமையல் சோடா – சிறிதளவு
- உப்பு – தே.அளவு
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் பனை வெல்லம் மற்றும் தண்ணீரை சேர்த்து பாகு செய்யவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லப்பாகு, தயிர், ஏலக்காய் தூள், எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ளவும். இதனுடன் எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவல், ராகி மாவு, கோதுமை மாவு, சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். குழிபணியாரக் சட்டியில் மாவை ஊற்றி மூடி வைக்க வேண்டும். தீயை குறைத்து வைத்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து திருப்பி விட்டு எடுக்கவும்.
எள்ளு உருண்டை
தேவையான பொருட்கள்
பேரீச்சம் பழம் – 100 கிராம்
எள் – 25 கிராம்
தேன் – ஒரு டீஸ்பூன்
முந்திரி – 3
ஏலக்காய் – தே.அளவு
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து கொண்டு அதில் எள்ளை நன்கு வறுக்கவும். பேரீச்சையை நன்கு பொடியாக நறுக்கி நன்கு மசித்து கொள்ளவும். அதனுடன் எடுத்து வைத்துள்ள ஏலக்காய் தூள், நெய், தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். இதனுடன் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி சேர்த்து பின்பு அதனை உருண்டைகளாக உருட்டி பரிமாறலாம்.
சத்யா