கருவளையம் காணாமல் போகும்

Spread the love

கண்களின் கீழ் வரும் கருவளையங்கள்:

என்ன தான் மேக்அப் செய்து கொண்டாலும், முகத்தின் கருப்பு பிரதேசங்கள் கண்களின் கீழ் காணப்படும் கருவளையங்கள், முகத்தின் அழகை கெடுக்கின்றன. உங்களின் இயற்கையான, பிறவிக் கலரை மாற்ற முடியுமா? என்று கேட்டால் இயலாது என்பது தான் பதிலாகும். அழகு நிலையங்களில் ப்ளீச்சிங் (Bleaching) செய்து கொண்டால்? என்று கேட்கலாம். முகத்தின் கருமையை ஒரளவு ப்ளீச்சிங் நீக்கும். ஆனால் தற்காலிகமாகத்தான்.

சருமத்திற்கு வண்ணத்தினை தருவது நிறமூட்டியான (Pigment) பழுப்பு நிற மெலானின் (Melanin) தான். சில பிரத்யேக செல்களினால் மெலானின் தயாரிக்கப்படுகிறது. இது தோலில், முடியில், கண் விழிகளில் காணப்படுகிறது. தோலில் மேல் பகுதியான எபிடெர்மிஸ் (Epidermis) மெலானோசைட்ஸ் (Melanocytes) செல்களால் மெலானின் தயாரிக்கப்பட்டு, இதர சரும செல்களுக்கு பரவுகிறது. சூரிய ஒளி, மெலானோசைட்ஸ்களை தூண்டி, அதிக மெலானினை சுரக்க வைப்பதால் தான் வெயிலில் உடல் கருத்து விடுகிறது. இந்த பாதிப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.

கண்களின் கருவளையங்களுக்கு காரணங்கள்:

1. சூரிய வெப்பம் ( வெயிலில் அலைவது )

2. அலர்ஜிகள்.

3. பரம்பரை

4. வயது

5. சத்துக் குறைவுள்ள உணவுகள்

6. களைப்பு, தூக்கமின்மை மற்றும் உடலில் நச்சுப் பொருட்கள் சேர்ந்திருப்பது.

உடலில் நச்சுப் பொருட்கள் சேர்ந்திருப்பதால் கருவளையங்களை குணப்படுத்த, ஆயுர்வேத சிகிச்சை முறையில் உடலின் கழிவுப் பொருட்கள் முதலில் முழுமையாக நீக்கப்பட்டு, பின்னர் மூலிகை தைல மசாஜ் போன்றவற்றால் சருமம் புதுப்பிக்கப்படுகிறது.

கருவளையங்களைப் போக்க சில டிப்ஸ்கள்:

1. அநேகமாக எல்லோருக்கும் தெரிந்தது வெள்ளரிக்காயை உபயோகிப்பது தான். வெள்ளரிக்காயை மெல்லிய வட்டங்களாக் நறுக்கி, டைரக்டாக கண்களின் மேல் 15 நிமிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இதை செய்து வரவும். அழுத்தத்தால் ஏற்படும் கருவளையங்களுக்கு வெள்ளரிக்காய் நல்லது.

2. ஜாதிக்காயை அரைத்துப் பூசலாம். பாதாம் பருப்பை பாலில் அரைத்தும் கண்களைச் சுற்றி போடலாம்.

3. பஞ்சுத் துண்டுகளை பன்னீரில் நனைத்து கண்களின் மேல் போடலாம்.

4. எலுமிச்சம் சாற்றை கண்களைச் சுற்றி கருவளையங்கள் மேல் தடவ அவை மறையும். முழங்கை, முழங்கால்களில் தோன்றும் கருமையை போக்கவும் எலுமிச்சம் சாற்றை உபயோகிக்கலாம்.

5. ரோஜா இதழ்கள் 100 கிராம் எடுத்து உலர வைத்து நன்றாக அரைத்துப் பொடியாக்கி, தேங்காயெண்ணெய் 100 மி.லி அளவு சேர்த்துக் கொண்டு மிதமான சூட்டில் 30 நிமிடங்கள் வரை காய்ச்சி எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். மேற்கூறிய எண்ணெயினை தினமும் படுக்கச் செல்லும் முன்பு இரண்டு சொட்டுக்கள் கண் இமைகளில் தடவிக் கொள்ளவும்.


Spread the love