நாட்டில் விற்கப்படுகின்ற பெரும்பான்மையான அழகு சாதனப் பொருள்கள் தாவர அடிப்படையில் தயாரிக்கப்படுபவை உட்பட, உடல் நலத்திற்கு ஊறுவிளைவிக்கக் கூடிய உலோகங்களான மெர்குரி (பாதரசம்) நிக்கல் மற்றும் குரோமியம் போன்றவைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்று அறியப்படுகிறது. அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம், சருமத்தை வெளுப்பாக்கும் கிரீமில் பாதரசமும் உதட்டுச் சாயங்களில் நிக்கல் மற்றும் குரோமியம் போன்ற உலோகப் பொருள்களும் கண்டறியப்பட்ட செய்தி வெளி வந்துள்ளது.
அழகு சாதனப் பொருள்களில் பாதரசம் பயன்படுத்தப்படுவது சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டிருக்கிறது. சி.இ.எஸ். மையம் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட, நான்கு பிரிவுகளைச் சேர்ந்த, 73 வகை அழகு சாதனப் பொருள்களுள் சரும வெளுப்பான்கள் 32 ம் உதட்டுச் சாயங்கள் 30 ம் அடங்கும். சோதனைக்கு எடுத்துக் கொண்ட மாதிரி பொருள்களில் உதட்டுத் தைலங்களும், முதுமையை மறைக்கும் கிரீம்களும் இருந்தன. இவை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தயாரிக்கப்பட்டவைகளாகும்.
சரும வெளுப்பான்களில் பரிசோதனை செய்யப்பட்ட 32 ல் 14 தயாரிப்புகளில் மெர்க்குரி இருப்பது கண்டறியப்பட்டது. சோதனை செய்யப்பட்ட 30 உதட்டுச் சாயங்களில் 13 தயாரிப்புகளில் நிக்கல் இருந்தது கண்டறியப்பட்டது. மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கான சட்ட விதிகளில் இவற்றின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வுலோகங்களின் பயன்பாடு ஓரளவு அவசியம் என்று தயாரிப்பாளர்கள் சிலர் கூறினாலும், ஆய்வு செய்யப்பட்டவற்றில் பாதி தயாரிப்புகளில் உலோகக் கலப்பு இல்லை. எனவே, தயாரிப்பாளர்கள் முயன்றால் இவற்றின் பயன்பாட்டைத் தடுக்க முடியும். தயாரிப்புகளைப் பாதுகாப்பான முறையில் தயாரிக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.