நீரிழிவுடன் தினசரி வாழ்வது எப்படி?

Spread the love

வரக் கூடாத வியாதிகளில், நீரிழிவும் ஒன்று என்பார்கள். ஆனால் தற்போதைய முன்னேறிய சிகிச்சை முறைகளாலும், விழிப்புணர்வாலும், நீரிழிவுடன் வாழலாம். எப்படி என்ற உங்களின் கேள்விக்கு, இதோ பதில்

தினசரி செய்ய வேண்டியவை

 1. உணவுக் கட்டுபாடுகளை கடைப்பிடிப்பது
 2. உடற்பயிற்சி, போதிய உடலுழைப்பு இவற்றால் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது
 3. நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்வது
 4. இரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ளுதல்

இதற்கான சுலப வழி முறைகள்

 1. உணவு நீரிழிவு நோய்க்கு கட்டுப்பாடான சமச்சீர் உணவின் அவசியம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஒரு நோயாளிக்கு ஒத்து வரும் உணவு, மற்றொரு நோயாளிக்கு ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எனவே உங்களுக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய உணவை நீங்கள் டாக்டர் மற்றும் டயட்டீசியனுடன் கலந்தாலோசித்து தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். உணவு, நீரிழிவு உண்டாக்கும் பல சிக்கல்களை ஓரளவு தடுக்கும் படி அமைய வேண்டும். முக்கியமாக இதயத்திற்கு இதமான உணவாக இருக்க வேண்டும். ரொட்டி, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மாமிசம், பால் – பால் சார்ந்த உணவுகள், கொழுப்புகள் போன்ற உங்களுக்கு பழக்கமான பொது உணவுகளிலிருந்தே உங்களின் தினசரி உணவு திட்டத்தை வரையறுத்துக் கொள்ளலாம். இது உங்கள் குடும்பத்தினருக்கும் ஒத்துப் போகும் படி இருப்பதால், உங்களுக்கு என தனி உணவுகளை தயாரிக்கும் அவசியம் இல்லை. இந்த பொது உணவுகளிலிருந்து உங்களுக்கேற்ற உணவை, புத்திசாலித்தனமாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

·     உங்களுக்கு அதிக உடல் பருமனை உண்டாக்காத உணவை தேர்ந்தெடுங்கள்

·     உணவில் அளவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

·     உணவால் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் அதிகம் ஆகாமல் check  செய்து கொள்ளுங்கள்.

உணவைப் பற்றிய சில யோசனைகள்

 1. உணவுகளை திட்டமிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்
 2. சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். வேளை தப்பி உண்பதை தவிர்க்கவும்.
 3. உட்கொள்ளும் உணவு பாகங்களை தராசில் நிறுத்து சரியான அளவுகளை தெரிந்து கொண்டு உண்ணவும்.
 4. கார்போஹைடிரேட், கொழுப்பு சேர்ந்த உணவுகளை அளவாக உட்கொள்ளவும்
 5. உணவு நேரங்களின் நடுவே பசியெடுத்தால், தண்ணீர் குடிக்கவும்.
 6. வயிறு முட்ட உண்ண வேண்டாம்
 7. மதுகுடிப்பது கூடாது.
 8. டைனிங் டேபிளில்‘ (மேஜையில்) சாப்பிடவும்
 9. காய்கறிகள், தானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்
 10. உணவை மென்று சாப்பிடவும்
 11. எப்போதும் கைவசம் சிறிது சர்க்கரை, சாக்லெட் போன்றவற்றை வைத்துக் கொள்ளவும். தாழ்நிலை சர்க்கரை ஏற்பட்டால் உடனே உட்கொள்ளவும்.
 12. சமச்சீர் உணவுக் கலவையை உட்கொள்வது நன்மை பயக்கும் – கார்போஹைடிரேட்ஸ் (அளவாக) புரதம், கொழுப்பு (அளவாக) விட்டமின், தாதுப்பொருட்கள் – இவைகள் உணவில் தேவையான அளவு இருக்க வேண்டும்
 13. உணவு மாற்றங்களை (தேவையானால்) தீடிரென்று கொண்டுவராதீர்கள். படிப்படியாக செய்யவும்
 14. காய்கறி, பழங்களை (சிபாரிசு செய்யப்பட்ட), 5 தடவை கூட ஒரு நாளில் உட்கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.
 15. உப்பு, உப்புள்ள பதார்த்தங்கள் இவற்றை குறைக்கவும்.

அதிக உடல் பருமன், பல நோய்கள், குறிப்பாக டயாபடீஸ், உண்டாக காரணமாகிறது. உடல் பருமனை சரியான அளவில் வைக்க

1.     சிறு தட்டுக்களில் உண்ணவும். உணவின் அளவை குறைக்கவும்

2.     காலை உணவை தவிர்க்க வேண்டாம்.

3.     மெதுவாக உண்ணவும்

4.     வேகவைத்த உணவுகள் நல்லது. பொறித்து, வறுத்த உணவுகள் வேண்டாம்.

5.     காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

6.     மசாலா, உணவுக்கு வாசனை, சுவையூட்டும் பொருட்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்லது என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி. இது பற்றி மேலும் ஆய்வுகள் தேவை.

சுறுசுறுப்பாக இருங்கள்:

சோம்பித்திரியேல்என்கிறது ஆத்திசூடி. உடலை, உள்ளத்தை வேலையின்றி வைக்காதீர்கள். “சோம்பர் எம்பவர் தேம்பித்திரிவர்” என்கிறது கொன்றை வேந்தன். யாதொரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக அலைபவர்கள் அல்லல் படுவார்கள். உடலுழைப்பும், உடற்பயிற்சியும் தினசரி இருக்க வேண்டும். ஆயுர்வேத மேதை சுஸ்ருதர் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, நீரிழிவு நோயாளிகள் 4 மைல் நடக்க வேண்டும், கிணறு வெட்டுவது போன்ற உடலுழைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். நடப்பது, நீச்சல், நடனம், சைக்கிள் ஓட்டுவது, விளையாட்டு இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை செயல்படுத்துங்கள். வீட்டு வேலைகள் தோட்ட வேலைகளை தினசரி செய்யவும்.

இதனால் விளையும் நன்மைகள்:-

·     சரியான உணவும், உடற்பயிற்சியும் சேர்ந்தால், நீரிழிவை (டைப் 2) தடுக்கும்       வாய்ப்புகள் 58%.

·     உடற்பயிற்சி உங்கள் எடையை சரியான அளவில் வைக்க உதவும்.

·     இதயம், நுரையீரலுக்கு வலிமை கூட்டும்.

·     இன்சுலீனின் வேலையை ஊக்குவிக்கும்.

·     உடலுழைப்பு / வேலைகளால் சக்தி பெருகும்.

·     மன அழுத்தத்தை குறைக்கும்

உடற்பயிற்சி ஆரம்பிக்கும் முன், உங்களின் டாக்டருடன் கலந்து ஆலோசியுங்கள். நீரிழிவு நோயாளிகள், சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம், கண்பாதிப்புகள் இவை உள்ளவர்கள் எடை தூக்குதல் போன்ற கனரக உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். யோகாவில் நீரிழிவு நோய்க்கென பிரத்யேக ஆசனங்கள் உள்ளன.

ஒரு நாளில் 30 நிமிடமாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, (ஏதாவது ஒரு வேலையில்) இவற்றில் உடலை ஈடுபடுத்துங்கள். இது வரை உடலை பயிற்சியின்றி வைத்திருந்தால், முதலில் 5-10 நிமிடங்களிலிருந்து ஆரம்பிக்கவும். போகப் போக நேரத்தை அதிகரிக்கவும். ரத்த சர்க்கரை 100 அல்லது 120க்கு குறைவாக இருந்தால், உடற்பயிற்சிக்கு முன் சிற்றுண்டியை உட்கொள்ளவும். பயிற்சியின் போது தாழ் நிலை சர்க்கரை நிலை ஏற்பட்டால், குளூக்கோஸ் மாத்திரைகள், இனிப்பு, பழரசம் போன்றவைகளை உடனே உண்ணவும்.

உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே பலன்களை எதிர் பார்க்காதீர்கள், ஒரு தடவை அரசமரத்தை சுற்றி வந்து அடிவயிற்றை தொட்டுக் கொண்ட பெண் போல. உடனேயே பலன்கள் புலப்படாது. சில வாரங்கள் போக வேண்டும். ஒரே மாதிரி உடற்பயிற்சிகள் “போரடித்தால்” மாற்றிக் கொள்ளவும். உடற்பயிற்ச்சியால் எலும்புகள், தசைகள், மூட்டுக்கள் இவை வலிவடையும். ஆனால் உடலை வருத்தி, உடல் பாதிப்புகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும், இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது.

உடற்பயிற்சி என்றவுடன் ஒரு பெரிய “ஜிம் மும்”, ட்ரெட்மில் போன்ற பெரிய பயிற்சி உபகரணங்களும் உங்கள் மனதில் தோன்றும். இதெல்லாம் தேவையில்லை. உடற்பயிற்சி என்றால் active வாக இருப்பது. அதாவது திட்டமிட்ட உடல் இயக்கம். நடப்பதே போதும். ஒரு நாளைக்கு 30-45 நிமிடங்கள், வாரத்தில் ஜந்து முறை பயிற்சிகள் செய்தாலே போதுமானது.

நீரிழிவு மருந்துகள்

டாக்டர் உங்களுக்கு கொடுத்த மருந்துகளை தினமும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இந்த மருந்துகள் / மாத்திரைகளால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் டாக்டரிடம் சொல்லவும். உடல் எடை, பயிற்சிகள் மூலம் அல்லது வேறுகாரணங்களால் 5-10 கிலோ குறைந்தால் டாக்டரிடம் தெரிவிக்கவும். ஒரு வேளை மருந்துகள் குறைக்கப்படலாம். டைப் – 2 நோயாளிகள் ரத்த க்ளூகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகள் / மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

இன்சுலீன் உபயோகம்: டைப் 1 நோயாளிகளுக்கு இன்சுலீன் மிக அவசியம். சில சந்தர்ப்பங்களில் டைப் 2 நோயாளிகளுக்கும் இன்சுலீன் தேவைப்படலாம். கணைய பாதிப்புகளால் இன்சுலீனை உடலால் உற்பத்தி செய்ய முடியாத போது, அல்லது போதுமான அளவு சுரக்காத போது, அல்லது குறைபாடுள்ள இன்சுலீன் சுரக்கையில், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இன்சுலீன் தான் உயிரைக் காப்பாற்றி நீரிழிவு நோயாளிகளை வாழ வைக்கிறது.

நான்கு வழிகளில் இன்சுலீனை எடுத்துக் கொள்ளலாம்.

 1. ஊசி மூலமாக. சிரிஞ்ச், ப்ளஞ்சர், ஊசி இவைகளை உபயோகித்து, இன்சுலீன் உடலுள் செலுத்தப்படும். மிக மெல்லிய ஊசியை பயன்படுத்தவும். சிலர் இன்சுலீன் பேனாவை பயன்படுத்துகிறார்கள். இது பேனா போல, ஊசி இன்சுலீன் மருந்து நிரம்பிய மருந்துக்குழலுடன் (Cartridge) கிடைக்கிறது.
 • இன்சுலீன் பம்ப்‘ (Pump) – இந்த சிறிய கருவியை சட்டைப் பையில் அல்லது இடுப்பு “பெல்ட்டில்” வைத்துக் கொள்ளலாம். இத்துடன் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் ட்யூபும், மிகச் சிறிய ஊசியும் இணைந்திருக்கும். சிறிய ஊசி தோலுக்குள் சொருகப்பட்டு, அதே நிலையில் பல நாட்கள் இருக்கும்.
 • இன்சுலீன் ஜெட் இஞ்ஜெக்டர் – இது ஊசியில்லாதது. இந்த கருவி Sprayer போல இன்சுலீனை, அதிக அழுத்தத்தில், தோலில் தெளிக்கும் (Spray).
 • இன்சுலீன் இன்ஃபூஸர் (Insulin Infuser) – சிறிய ட்யூப் ஒன்று சர்மத்தின் அடியில் பொருத்தப்படும். இது பல நாள் பொருந்திய இடத்தில் இருக்கும். இதன் வழியே இன்சுலீன் செலுத்தப்படும்.

சில நீரிழிவு நோயாளிகள் வேறு சில மருந்துகளை ஊசி மூலம் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கும் இன்சுலினுக்கும் சம்மந்தமில்லை. டைப் 2 நோயாளிகள், உணவு முறைகள், உடற்பயிற்சி இவற்றை சரிவர கடைப்பிடித்தாலே, மருந்துகளை தவிர்க்க முடியும்.

டைப் – 2 நீரிழிவு மருந்துகள் பல வகைகளில் கிடைக்கின்றன. சில வாய்வழியே உட்கொள்பவை. சில ஊசிமூலம் கொடுக்கப்படுபவை. இந்த மருந்துகள்:- (டைப் – 2 விற்கு)

 1. அல்ஃபா க்ளுகோஸிடேஸ் தடுப்பிகள் (Alpha Glucosidase inhibitors)
 • அமீலின் மிமெடிக்ஸ் (Amylin mimetics)
 • பிகுனாய்ட்ஸ் (Biguanides)
 • டி.பி.பி. – 4 தடுப்பிகள் (DPP4 Inhibitors)
 • இன்க்ரிடின் மிமெடிக்ஸ் (Incretin mimetics)
 • மெக்லிடைனிடிஸ் (Meglitinides)
 • ஸல்ஃபோநைலூரியாஸ் (Sulfonylureas)
 • தியாஸோலிடினெடியோன்ஸ் (Thiazolidinediones)

ஒவ்வொரு மருந்தும் சில தனி செயல்பாடுகளை உடையவை.

உதாரணமாக சில மருந்துகள் கணையத்தை மேலும் அதிக இன்சுலீனை சுரக்க வைக்கின்றன. சில மருந்துகள், கல்லீரல், க்ளுகோஸ் தயாரிப்பதை தடுக்கின்றன. இதனால் உடல் செல்களுக்கு சர்க்கரை சக்தி சேர குறைந்த இன்சுலீன் போதும். மற்றும் சில மருந்துகள் வயிற்றின் என்சைம்களின் செயல்முறைகளை கட்டுப்படுத்துகின்றன.

மருந்துகளின் வரலாறு

பல வருடங்களாக ஸல்ஃபோநைலூரியாஸ் வகை மருந்துகள் தான் டைப் 2 நீரிழிவிற்கு, வாய் வழி மருந்தாக பயன்பட்டு வந்தன. இந்த மருந்துகள் கணையத்தை தூண்டி, அதிக இன்சுலீனை சுரக்க வைத்து, இரத்த சர்க்கரை அளவை குறைய வைத்தன. இந்த வகையில் தற்போது பயன்படுத்தப்படும் மருந்துகள் – கிளிப்ஸைட் (Glipizide) மற்றும் க்ளைப்புரைட் (Glyburide), வருடம்

1990 ல், மெட்ஃபார்மின் (Metformin) அமெரிக்க தேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு அபார கண்டுபிடிப்பாக பாராட்டப்பட்ட மெட்ஃபார்மின், இரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை உடையது. டைப் – 2 நீரிழிவு வியாதிக்கு ஏற்ற மருந்து. இன்றும் டைப் – 2 நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் முதன்மையானது. மெட்ஃபார்மின், ஸல்ஃபோநைலூரியாஸ் மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கலாம். பழைய கால மருந்துகளும் (மெட்ஃபார்மின், கிளிப்சைட் போன்றவை) புதிய மருந்துகளின் செயல்பாடுகளுக்கு சிறிதும் குறைந்தவைகளல்ல. இவற்றின் ஒப்பீடு கீழே கொடுக்கப்படுகிறது.

BOX மருந்து

1. கிளிப் ஸைட் (Glipizide)                                  

2. மெட்ஃபார்மின் (Metformin)                            

3. க்ளைமி பிரைட் (Glimepiride)                                 

4. ரோஸிக்ளிடாஸோன் (Rosiglitazone)                                   

5. பியோக்ளிட்டஸோன் (Pioglitazone)

6. ப்ராம்லின்டைட்    (Pramlintide)                                  

7. எக்ஸினாடைட்                              

8. சிடாக்ளிப்டின் பாஸ்பேட் (Sitagliptin phosphate)                   

பயன்கள்

 1. வாய்வழி மருந்து. விலைகுறைவு.

2.  வாய்வழி, உடல் எடை கூடாது. கெட்டகொலஸ்ட்ராலை (LDL) யும்,    ட்ரைகிளைசிரைட்ஸ்ஸை    குறைக்கும். விலை மலிவு.

3.வாய்வழி, விலை மலிவு.

4.வாய்வழி நல்ல கொலஸ்ட்ராலை (HDL) சிறிதளவு அதிகரிக்கலாம்.

 • வாய்வழி ட்ரைகிளைசிரைட்ஸ்ஸை குறைக்கலாம்.
 • உடல் எடை குறைய உதவும்

.

 • வாய்வழி, உடல் எடை கூடாது.

குறைகள்

 1. தாழ் சர்க்கரை நிலையை உண்டாக்கலாம். உடல் எடை கூடலாம்.
 • பிரட்டல், பேதி ஆகலாம். அபூர்வமாக, கெடுதலான லாக்டிக் அமிலம் கூடி விடும்.
 • ரத்த சர்க்கரை அளவை தாழ்நிலைக்கு கொண்டு போகலாம். உடல் எடை கூடும்.
 • உடல் வீக்கம், எடை கூடலாம். இதய பாதிப்பு உண்டாகலாம். கெட்ட  கொலஸ்ட்ரால், டிரைகிளைசிரைட்ஸ் அதிகப்படுத்தலாம். கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். அதிக விலை.
 • ஊசி மூலம் கொடுக்க வேண்டும். வாய்வழி மாத்திரைகள்/ இன்சுலின் இவற்றுடன் சேர்த்து கொடுக்கக் கூடாது. பிரட்டல் வரலாம். அதிக விலை.
 • உசி மருந்து. பிரட்டல் அபூர்வமாக கணைய பாதிப்பு வரலாம் ஏற்படலாம். விலை அதிகம்.
 • சுவாச மண்டல தொற்று, தொண்டை புண் உண்டாகலாம் விலை அதிகம்.
 • உசி மருந்து. பிரட்டல் அபூர்வமாக கணைய பாதிப்பு வரலாம் ஏற்படலாம். விலை அதிகம்.

9.     சுவாச மண்டல தொற்று, தொண்டை புண் உண்டாகலாம் விலை அதிகம்.

தினசரி பரிசோதனைகள்

நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிக்கிறீர்கள். உடற்பயிற்சி செய்வதையும் தவறாமல் செய்கிரீர்கள். மருந்துகளை மறக்காமல் சாப்பிடுகிறீர்கள். உங்களின் இந்த கட்டுப்பாட்டுக்கு பலன் என்ன என்று தெரிய, பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். ஏதாவது மாற்றங்கள் (அதிக க்ளுகோஸ் / தாழ்நிலை க்ளுகோஸ்) இருந்தால், சிகிச்சை முறைகளும் மாறும்.

சிலர் தினசரி ஒரு தடவை ரத்த சர்க்கரை அளவை செக்செய்து கொள்வார்கள். சிலர், 3-4 தடவை செய்து கொள்வார்கள். பொதுவாக உணவுக்கு முன்னும், பின்னும், படுப்பதற்கு முன், மற்றும் நள்ளிரவிலும் பரிசோதித்துக் கொள்ளலாம். இதற்கான இரத்த க்ளுகோஸ் மீட்டர் கருவிகள் கிடைக்கின்றன வீட்டிலேயே இவைகளால் பரிசோதித்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஏற்ற உபகரணத்தை டாக்டர் சொல்லுவார்.

இரத்த சர்க்கரை அளவைத் தவிர, சிறுநீர், பரிசோதனைகளும் தேவைப்படலாம். தினசரி செய்ய தேவையில்லாவிட்டாலும், சில அறிகுறிகள் ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். வாந்தி, வேகமாக மூச்சுவிடல், மூச்சில் ஒரு வித இனிமையான வாசனை (Nail Polisher போல) – இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து. இது கேடோஅசிடோசிஸ் எனும் அபாய நிலை. சிகிச்சை செய்யாவிட்டால், உயிர் பறிபோகலாம். இது கேடோன் (Ketone) எனும் அசிடோன் பொருட்கள் ரத்தத்தில் அதிகமாகிவிட்டால் ஏற்படும் பாதிப்பு. இன்சுலீன் போதாதால், கேடோன் அதிகரித்துவிடும். கேடோன் உங்களை அபாயத்தில் ஆழ்த்தி விடும். உடனே டாக்டரிடம் / ஆஸ்பத்திரி செல்ல வேண்டும்.

கேடோன் டெஸ்ட் செய்ய சிறு நீர் டெஸ்ட் ஸ்ட்ரிப்புகள் (Strips) கிடைக்கின்றன. இவற்றை கைவசம் வைத்திருங்கள்.

Box தினசரி பரிசோதனைகள் தவிர

1 C (கி1சி) என்ற சோதனையை வருடம் இருமுறை செய்துகொள்ளவும். இதை ஹேமோகுளோபின் ஏ 1 சி டெஸ்ட் என்றும் சொல்வார்கள். இந்த நல்ல பரிசோதனை, ரத்த சிவப்பணுக்களை ஒட்டிக் கொண்டு எவ்வளவு குளுக்கோஸ் இருக்கிறது என்பதை காட்டும். கடந்த 3 மாதங்களில், குளுக்கோஸ் லெவலை (Level) தெரிவிக்கும். இது 7 க்குள் இருந்தால், உங்கள் டயாபடீஸ் கட்டுக்குள் இருக்கிறது என்ற அர்த்தம். 8 க்கு மேல் இருந்தால் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது – சிகிச்சை முறையில் மாற்றங்கள் தேவை. இல்லாவிடில் சிறு நீரகம் பாதிப்படையும்

நீரிழிவால் ஏற்படும் 10 நன்மைகள்:

என்ன? நீரிழிவால் நன்மைகள் ஏற்படுமா? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. தீமைகளிலும் சில நன்மைகள் உண்டு. நீரிழிவு போன்ற ஒரு நாள்பட்ட வியாதி ஏற்பட்டால் தினசரி கவனிக்க வேண்டும். இந்த கவனிப்பால் ஆயுள் அதிகமாகும். “நித்திய கண்டம் – பூரணாயுசு” என்பார்கள்!

நீரிழிவின் நன்மைகள்

 1. தன்னைத்தானே அறிந்து கொள்ள உதவும். நீரிழிவு வந்துவிட்டால் அதை சவாலாக ஏற்று சமாளிக்கும் திறனை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் ஏற்படுகிறது.
 • நீரிழிவு நோய்க்காகவும், அது ஏற்படுத்தும் சிக்கல்களுக்காகவும், அடிக்கடி டாக்டரிடம் செல்ல வேண்டும். தவிர இதயம், கண், டயடிசியன் போன்ற மருத்துவ நிபுணர்களிடமும் போக வேண்டிவரும். இந்த தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பால், உங்கள் உடல் நிலை நன்கு பராமரிக்கப்படுகிறது.
 • நீரிழிவு உங்களை உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள, உடற்பயிற்சி செய்ய, உடல் எடையை குறைக்க உசுப்பிவிடுகிறது. இதனால் ஆரோக்கியம் நிலைக்கிறது.
 • வாழ்க்கை முறையில் மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும். க்ளுக்கோஸ் மீட்டர் போன்ற நவீன சாதனங்களை பயன்படுத்துவதால், உணவு, உடற்பயிற்சி, உடல் எடை இவற்றின் மாறுதல்களை க்ளுகோஸ் மீட்டர் காட்டி விடும்.
 • உடற்பயிற்சி நீரிழிவை மட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல், இதர ஆரோக்கிய பயன்களையும் தரும்.
 • உங்களை சுற்றி ஒரு பெரிய பட்டாளமே துணை நிற்கிறது. அதாவது நீரிழிவு நோயாளிகளின் சங்கம்! உங்களுக்கு உதவ, ஆதரவளிக்க, லட்சக்கணக்கான நீரிழிவு நோயாளிகளின் கூட்டமே நிற்கிறது!
 • உணவு, சத்துணவு, உடலைப்பற்றிய அறிவியல் விவரங்கள் எல்லாம் உங்களுக்கு அத்துப்படியாகின்றன. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களை விட அதிக மருத்துவ அறிவை, தெளிவை அடைகிறார்கள்.
 • பல கருவிகளை (க்ளுகோ மீட்டர், இன்சுலீன் பம்புகள்) இயக்குவதால், பொறியியல் அறிவு வளர்கிறது.
 • உங்களின் படைக்கும் திறன், கற்பனைத்திறன் அதிகமாகிறது. நீரிழிவு வியாதி உங்களை சிந்திக்க வைக்கிறது. உணவு, உடற்பயிற்சி, க்ளுகோஸ் பரிசோதனைகள் போன்ற திறமையை அமைக்கும் சிந்தனைகள்/ செயல்பாடுகள் புது வழிகளை உண்டாக்கும்.
 1. உங்களின் கணிதத்திறமை கூர்மையாகிறது. நீங்கள் பல எண்களை – தினசரி க்ளுக்கோஸ் அளவு, உணவுகளின் கலோரி, அளவுகள், கார்போஹைடிரேட் கொழுப்பு, புரத அளவுகள் – ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கணித மேதை ஆகலாம்!

குழந்தைகளும், நீரிழிவு நோயும்

ஒரு குழந்தை கூட நீரிழிவால் இறக்கக் கூடாது.

.

உலக நீரிழிவு தினம் நவம்பர் 14 ந் தேதி, 2008 ல், உலகெங்கும் கொண்டாடப்பட போகிறது. அகில உலக நீரிழிவு ஸ்தாபனம், இந்த நாளில், வளரும் தேசங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு பலியாவதை தடுக்க எடுக்க வேண்டிய முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளது.

அகில உலக நீரிழிவு ஸ்தாபனம், வளரும் தேசங்களின் சுகாதாரத் துறை மந்திரிகள், மருந்து கம்பெனி அதிபர்கள், கொடையாளிகள், நீரிழிவு சங்கங்கள், மருத்துவ நிபுணர்கள் இவர்கள் எல்லாம் நிறைந்துள்ள அமைப்பு.

இதன் அதிபர் டாக்டர் மார்ட்டின் சிலிங்க் (Dr. Martin silink),”நாங்கள் நீரிழிவு வியாதியுள்ள குழந்தைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்ச்சிகளை எடுக்க எல்லா தரப்பு மக்களையும், குழுமங்களையும் ஈடுபடுத்தப் போகிறோம்” என்கிறார்.

உலகில் தினந்தோறும் 200 குழந்தைகள் டைப் – 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு தினசரி இன்சுலின் ஊசி மூலம் செலுத்துவதும் இரத்த குளுகோஸ் அளவை கண்காணிப்பதும் கட்டாயமாகிறது. இந்த எண்ணிக்கை வருடா வருடம் 3% அதிகமாகிறது. பள்ளி செல்லும் வயது வராத குழந்தைகளிடையே இந்த எண்ணிக்கை இன்றும் அதிகமாக, 5% ஆக இருக்கிறது. தற்போது 5,00,000 க்கு மேல், 15 வயதுக்கு குறைவான சிறுவர்கள் / சிறுமிகள், நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர்.

வளரும் தேசங்களில், டைப் – 1 நீரிழிவு உள்ள சிறுபிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு காணப்படுகிறது. குறைந்த வருமானம் மற்றும் மத்திய தரவர்க்க மக்களிடையே 75,000 குழந்தைகள் நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டு, கஷ்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு உயிர் காக்கும் இன்சுலீன் தேவை. வைத்திய வசதிகள் தேவை. இந்த அடிப்படை தேவைகள் இந்த குழந்தைகளின் அடிப்படை உரிமை. சலுகையல்ல.

அகில உலக நீரிழிவு ஸ்தாபனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் டாக்டர் ஜான் க்ளாட் எம்பண்யா (Dr. Jean Claude Mbanya) “நிதரிசன உண்மை என்னவென்றால், வளரும் தேசங்களில் பல சிறு பிள்ளைகள், நீரிழிவு நோய் வந்து விட்டது என்று தெரிந்த பின் இறந்து விடுகின்றனர். இன்சுலீன் கண்டுபிடிக்கப்பட்டு 87 வருடங்கள் ஆகியும், உலகின் எளிய, சுலபமாக பாதிக்கப்படக் கூடிய மக்கள், (சிறார்களையும் சேர்த்து) இன்சுலீன் கிடைக்காமல் இறக்கிறார்கள். இது உலகுக்கே அவமானம். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார்.

பல வளரும் தேசங்களில், குறிப்பாக ஆப்ரிக்காவிலும், சில ஆசிய தேசங்களும், உயிர்காக்கும் மருந்துகளும், கண்டறியும் உபகரணங்களும் இல்லாமல், குறைந்த வாழ்கைத் தரம், ஏழ்மையால் பல குழந்தைகள் நீரிழிவு நோயால் உயிரிழக்கின்றனர்.

இதனால் 2001 லிருந்து, அகில உலக நீரிழிவு ஸ்தாபனம், பல பின் தங்கிய தேசங்களின் 1000 சிறு பிள்ளைகளை, நீரிழிவு உள்ள குழந்தைகளை தத்துஎடுத்து பராமரித்து வருகிறது. “இது போதாது. ஏன், மிகக் குறைவு என்றே சொல்லலாம்” என்கிறார் டாக்டர் சிலிங்க்.

இந்த வருடம் நவம்பர் 14-ந் தேதி நடைபெறவிருக்கும் உலக நீரிழிவு தினத்தின், “நீரிழிவுள்ள குழந்தைகளும், இளம் பருவத்தினரும்” என்பது தான் “தீம்” – விவாதிக்கப்பட இருக்கும் விஷயம். இதில் பல நல்ல முடிவுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று நம்புவோம்.

நீரிழிவின் புதிய முன்னேற்றங்களால் பயன் பெறுகிறீர்களா?.

உலகம் பலதுறைகளில் வேகமாக முன்னேறி வருகிறது. நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு இன்னும் காணப்படவில்லை யென்றாலும், சிகிச்சை முறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது நீரிழிவை சமாளிப்பது சிறிது சுலபமாகி வருகிறது.

 1. உணவு கட்டுப்பாடு:- நீரிழிவுக்கு பத்தியஉணவு அவசியம் என்பது தொன்று தொற்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம். தற்போது நீரிழிவுக்கென்று தனிப்பட்ட பிரத்யேக உணவு தேவையில்லை என்ற நிலை வந்துவிட்டது. வழக்கமான 1800 கலோரி உணவுப் பட்டியலில் பல மாற்று உணவுகள் இடம் பெறுகின்றன. உணவின் அளவு‘ (அதாவது ஒவ்வொரு பங்கின் அளவு) கண்காணிக்கப்பட்டால் போதும்.
 • புதிய மருந்துகள்:- கடந்த வருடத்தில் மூன்று புதிய வகை இன்சுலீன்கள் அறிமுகமானியுள்ளன. அவை அபிட்ரா (Apidra) லேவெமிர் (Levemri), ஹீமலாக் மிக்ஸ் 50/50 (Humalog mix 50/50) என்பவை. எக்ஸீபரா (Exubera) எனும் நுகரும் இன்சுலீன் (Inhaled Insulin) முதல் முறையாக விற்பனைக்கு வந்திருக்கிறது. தற்போது மொத்தம் 10 வகை இன்சுலீன்கள் கிடைக்கின்றன. 5 வகை வாய்வழி மற்றும் 17 வகை வித்தியாசமான மருந்துக்கலவைகள் கிடைக்கின்றன. இரண்டு வகை இன்சுலீன் இல்லாத, ஊசி வழி மருந்துகள் – இன்க்ரெடின் மிமெடிக்ஸ் மற்றும் அமிலின் அனலாக் (Incretin mimetics and amylin analogues) என்ற புதிய மருந்துகள் வந்திருக்கின்றன. தற்போது மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் இன்சுலின் வகைகள், ஹியூமன் மற்றும் அனலாகுகள் ஆகும். அனாலகுகள் நவீன இன்சுலின்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தான் தற்போது மருந்துகடைகளில் கிடைக்கக்கூடிய சமீபத்திய இன்சுலின் வகையாகும். டாக்டருக்களுக்கோ புதிது புதிதாக வரும் மருந்துகளைப் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள பயிற்சி தேவை. நீரிழிவு நிபுணர்களின் அறிவு விசாலமாகி வருகிறது.
 • கருவிகள்:- வீட்டிலேயே இரத்தச் சர்க்கரையை பரிசோதிக்க பயன்படும் மீட்டர்கள் புதிய “டிஜிடல்” நுட்பத்துடன் இப்போது தயாரிக்கப் படுகின்றன. இவற்றால் 10 வினாடிகளில், மிக்சிறிய அளவு இரத்தத்தை பரிசோதித்து, சர்க்கரை அளவை காட்ட முடியும்! உடலின் எந்த பாகத்திலிருந்தும், (கைவிரல்கள் மட்டுமின்றி) ரத்தத்தை எடுத்து பரிசோதிக்கலாம். முடிவுகளை கம்ப்யூடரின் உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் தற்போது வைத்திருக்கும் மீட்டர் ஜந்து வருடங்களுக்கு முன் வாங்கினதாக இருந்தால், அதை மாற்றவும்.
 • இன்சுலீனை “போட்டுக்கொள்ள” உபகரணங்கள்:- இன்சுலீன் “பேனாக்கள்” இருந்தாலும், இன்னும் ஊசி போட்டுக் கொள்ளும் முறையே அதிகம் காணப்படுகிறது. இப்போது இன்சுலீன் பேனாக்கள் கையடக்க சைஸில், சுலபமாக எங்கும் கொண்டு செல்லும்படி தயாரிக்கப்படுகின்றன. இன்சுலீன் அளவை பெலிபோனில் டயல் செய்வது போல, சுலபமாக டயல் செய்து கொள்ளலாம்.

1980 ல் தயாரிக்கப்பட்ட பெரிய சைஸ் இன்சுலீன் பம்புகள்

(Insulin Pumps) தற்போது மறைந்து, சிறிய, Pager சைஸில் கிடைக்கின்றன. இவை ஒரு நாள் தேவைக்கேற்ப இன்சுலீனை ரத்தத்தில் சேர்ப்பதால், க்ளூக்கோஸ் கன்ட்ரோல் சரியாக செய்யமுடிகிறது. இந்த கருவிகளில் அவ்வப்போது இரத்த க்ளுகோஸ் அளவுகள், இதர தகவல்கள் இவற்றை பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். ஆடோமாடிக்காக உணவுக்கு முன் எவ்வளவு அளவு இன்சுலீன் தேவையென்று கணிக்க முடியும். இதை உபயோகிக்க வயது ஒரு தடையில்லை. இந்த பம்புகளை பற்றி மேலும். அறிய, நீரிழிவுக்கென உள்ள பெரிய “சூப்பர்” மருந்துக்கடைகளை அணுகவும்.

காலம் மாறி விட்டது. இது நல்லது தான். பெருகிவரும் முன்னேற்றங்களால் பயனடைவது புத்திசாலித்தனம்.

தினந்தோறும் குறித்து வைக்கவும்

ஒரு டயரி அல்லது நோட் புஸ்தகத்தில், இரத்த சர்க்கரை அளவு போன்ற விவரங்களை குறித்து வருவது அவசியம். என்ன உணவு உட்கொண்டீர்கள், பாதிப்புகள், செய்த பயிற்சிகள் போன்றவற்றை எழுதி வைக்கலாம். இந்த குறிப்பு உங்கள் சிகிச்சைக்கும், டாக்டருக்கும் மிக உதவியாக இருக்கும். நீங்கள் குறிப்பிட வேண்டிய விவரங்கள்.

·     இரத்த க்ளுக்கோஸ் பரிசோதனையின் முடிவுகள்.

·     நீரிழிவு மருந்துகள்:- எடுத்துக் கொண்ட அளவுகள், வேளைகள்

·     இரத்த சர்க்கரை குறைந்திருந்ததா?

·     உட்கொண்ட உணவின் அளவு, வேளைகள்

·     உடல் நிலை பாதிப்புகள், இருந்தால்

·     உங்கள் சிறுநீரில் கேடோன் இருந்ததா?

நீரிழிவு உங்கள் வாயை பாதிக்கும்

உங்களுக்கு நீரிழிவு நோயிருந்தால், வாயை கவனித்துக் கொள்ளுங்கள். நீரிழிவால் ஈறுகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். பெரியே டொன்டல் (Periodontal) என்ற ஈறு நோய் உண்டாகும். இதனால் பற்கள் பலவீனமடைந்து விழுந்துவிடலாம். இந்த வியாதி வந்தால், இரத்தக்ளுகோஸ் அளவை கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும். நீரிழிவு உண்டாக்கும் இதர பாதிப்புகள் – வாய் உலர்ந்து போதல், மற்றும் த்ரஷ் (Thrush) என்ற ஃபங்கஸ் (Fungus) நோய். உமிழ்நீரின் சர்க்கரை அளவும் அதிகரித்துவிடும். இதனால், த்ரஷ் பாதிப்பால், வலியுடன் வெண்மை நிற Patches எனப்படும்.

இவற்றை தடுக்க, இரத்த சர்க்கரை அளவை நிலைக்கு கொண்டு வர வேண்டும். பற்களை சுத்தமாக வைக்க வேண்டும். அடிக்கடி பல் டாக்டரிடம் செல்ல வேண்டும்.

கீழ்கண்டவற்றை பின்பற்றவும்

·     ரத்த குளுக்கோஸ் அளவை கன்ட்ரோல்செய்யவும்.

·     தினமும் பற்களை தேய்க்கவும். Floss முறையால் சுத்தம் செய்யவும்.

·     உங்கள் பல் டாக்டரிடம் நீங்கள் நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கவும். அடிக்கடி பற்களை செக் (Check) செய்து கொள்ளவும்.

·     நீங்கள் செயற்கை பற்களை பொருத்தியிருந்தால், அவை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளவும்.

·     புகைப்பதை விடுங்கள். புகை பற்களை, வாயை, பாதிக்கும்.

நீரிழிவு – கால்களை கவனியுங்கள்

நீரிழிவின் கொடூர தாக்கம் கண்கள், கால்கள், இவற்றின் மீது தீவிரமாக இருக்கும். நரம்புகளை நீரிழிவு சிதைந்து விடுவதால், காலில் காயம்பட்டாலோ, இல்லை கொப்புளம் வந்தாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு தெரிவதில்லை.

கால்களை பாதுகாக்க சில யோசனைகள்

·     வெதுவெதுப்பான நீரில் கால்களை கழுவவும். சுடுநீர். வேண்டாம். நீருக்குள் கால்களை ஊறவைக்க வேண்டாம். சருமம் உலர்ந்து விடும். காலை கழுவினால் போதும்.

·     நன்றாக, ஈரம் போக கால்களை துடைக்கவும். விரல்களின் நடுவே ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். கால் விரல்களின் நடுவே டால்கம் பவுடரை உபயோகிக்கவும்.

·     கால் ஆணி, காய்ப்பு, இவற்றை வெட்டாதீர்கள். ப்ளேட், ரேசர், ஆணி எடுப்பானிகள் முதலியவற்றை உபயோகிக்க வேண்டாம். இவை உங்கள் தோலை பாதிக்கும்.

·     கால்களை கழுவி, துடைத்ததும், கால் நகங்களை வெட்டவும். நகமூலைகளை வெட்டாமல் கவனமாக இருக்கவும்.

·     காலணி இல்லாமல் – வீட்டுக்குள் கூட நடக்க வேண்டாம். நல்ல ஸாக்ஸையும், ஸ்சுவையும் அணியவும். ஸ்சு மிருதுவாக, சரியான அளவுடன் இருக்க வேண்டும். இறுக்கமான காலணிகளை தவிர்க்கவும். இதனால் ரத்த ஒட்டம் பாதிக்கப்படும். உட்காரும் போது கால்களை தூக்கிவைத்துக் கொள்ளவும்.

·     தினமும், இரண்டு, மூன்று முறை கால் விரல்களை, 5 நிமிடம் முன்னும் பின்னும் ஆட்டவும். கணுக்காலையும் தூக்கி இறக்கி பயிற்சி செய்யவும். ரத்த ஒட்டம் சீராகும்.

நீரிழிவை தடுக்க எளிய வழிகள்

‘சோம்பித்திரியேல்’ என்கிறது ஆத்திசூடி. “சோம்பர் எம்பவர் தேம்பித்திரிவர்” என்கிறது கொன்றை வேந்தன். ‘நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள், தானும் கெட்டதுடன் நாட்டையும் கெடுத்தார்’ என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளை பாடி, நடித்து விழிப்புணர்வை ஊட்டினார் மறைந்த எம்ஜிஆர். இவ்வளவும் சொல்வது எதற்காகத் தெரியுமா? உடலை, உள்ளத்தை வேலையின்றி வைக்காதீர்கள். எந்தவொரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக அலைபவர்கள் அல்லல் படுவார்கள் என்பதை உணர்த்தத்தான். உடலுழைப்பும், உடற்பயிற்சியும் தினசரி இருக்க வேண்டும். ஆயுர்வேத ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, ‘நீரிழிவு நோயாளிகள் 4 மைல் நடக்க வேண்டும், கிணறு வெட்டுவது போன்ற உடலுழைப்புகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றார். நடப்பது, நீச்சல், நடனம், சைக்கிள் ஓட்டுவது, விளையாட்டு இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை செயல்படுத்துங்கள். வீட்டு வேலைகள் தோட்ட வேலைகளை தினசரி செய்யவும். உடலும் உள்ளமும், ஆரோக்கியமாக இருக்கும்.

உடற்பயிற்சியில் விளையும் நன்மைகள்:-

சரியான உணவும், உடற்பயிற்சியும் சேர்ந்தால், நீரிழிவை (டைப் 2) தடுக்கும் வாய்ப்புகள் 58 சதவீதம் ஆகும்.

•உடற்பயிற்சி உங்கள் எடையை சரியான அளவில் வைக்க உதவும்.

இதயம், நுரையீரலுக்கு வலிமை கூட்டும்.

இன்சுலினின் வேலையை ஊக்குவிக்கும்.

உடலுழைப்பு / வேலைகளால் சக்தி பெருகும்.

மன அழுத்தத்தை குறைக்கும்

உடற்பயிற்சியின் போது நீரிழிவு நோயாளிகள், சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம், கண்பாதிப்புகள் இவை உள்ளவர்கள் எடை தூக்குதல் போன்ற கனரக உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். யோகாவில் நீரிழிவு நோய்க்கென பிரத்யேக ஆசனங்கள் உள்ளன.

ஒரு நாளில் 30 நிமிடமாவது காலை மாலை என ஏதாவது ஒரு வேளையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இவற்றில் உடலை ஈடுபடுத்துங்கள். உடம்புக்கும் உள்ளத்துக்கும் மிகவும் நல்லது. இது வரை உடலை பயிற்சியின்றி வைத்திருந்தால், முதலில் 10 நிமிடங்களிலிருந்து ஆரம்பிக்கவும். போகப் போக நேரத்தை அதிகரிக்கவும். ரத்த சர்க்கரை 100 அல்லது 120க்கு குறைவாக இருந்தால், உடற்பயிற்சிக்கு முன் சிற்றுண்டியை உட்கொள்ளவும். பயிற்சியின் போது தாழ் நிலை சர்க்கரை நிலை ஏற்பட்டால், குளூக்கோஸ் மாத்திரைகள், சாக்லெட், பழரசம் போன்றவைகளை உடனே உண்ணவும்.

‘தம்பல்ஸ்’ அடித்த உடன், தசைகள் புடைப்பது போல், உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே பலன்களை எதிர் பார்க்காதீர்கள். சில வாரங்கள் போக வேண்டும். ஒரே மாதிரி உடற்பயிற்சிகள் போரடித்தால் மாற்றிக் கொள்ளவும். நடைபயிற்சி செய்பவர், சைக்கிள் பயிற்சி செய்யலாம். ‘வாக்கிங்’ செல்பவர்கள் ‘ஜாகிங்’ போகலாம். உடற்பயிற்சியால் எலும்புகள், தசைகள், மூட்டுக்கள் இவை வலிவடையும். உடற்பயிற்சி செய்கிறேன் என்று தயவு செய்து உடலை வருத்திக் கொள்ள வேண்டாம். அதனால், பாதிப்புகள்தான் உண்டாகும். விதையைப் போல தூவுங்கள். மரமாக உங்களுக்குள்ளேயே வளரும். உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும், இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது.

உடற்பயிற்சி என்றவுடன் பெரிய ஜிம்முக்கு போக வேண்டும். ‘ட்ரெட்மில்’ வாங்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இதெல்லாம் தேவையில்லை. உடற்பயிற்சி என்றால் active வாக இருப்பது. அதாவது திட்டமிட்ட உடல் இயக்கம். நடப்பதே போதும். ஒரு நாளைக்கு 30 முதல் -45 நிமிடங்கள், வாரத்தில் ஜந்து முறை பயிற்சிகள் செய்தாலே போதுமானது. உடலும், உள்ளமும் நலம் பெறும்.

     ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love