காலைக் கடன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன தினசரிக் கடன். காலைக் கடனை எப்படி நாம் தினமும் கழித்து விடுகிறோமோ அது போல், தினசரி சில கடன்கள் உண்டு.. கடன்கள் அல்ல கடமைகள். அதை தீர்த்து விட வேண்டும். நம் ஆரோக்கியத்துக்காக.. நம் புத்துணர்வுக்காக.. உடற்பயிற்சி மைதானத்துக்கு போவது என்று முடிவெடுத்தால்.. தினசரி போக வேண்டும். கடற்கரைக்கு வாக்கிங் போவது என்று முடிவெடுத்தால் தினசரி போக வேண்டும்.
நம்மில் பலருக்கு திடீரென்று சோம்பல் வந்து விடும். நாளைக்கு போகலாம் என்று நினைத்து விட்டுவிடுவோம். நாளை என்பது மற்றொரு நாள் என்பதை மறந்து விடக்கூடாது. நாளை என்று ‘நாளை’, தள்ளிப்போட ஆரம்பித்தால்.. அது நீண்டு கொண்டே போகும். சில நாள் செய்துவிட்டு, அதன் பிறகு விட்டுவிடும் உடற்பயிற்சியால் ஏதும் பலன் இல்லை. தினமும் பிராக்டிஸ் செய்தால்தான் எந்த விளையாட்டிலும் வெற்றி பெற முடியும். வெற்றி, தோல்வி சகஜம் என்றாலும், விளையாடுவதன் மூலம் கிடைக்கம் தெம்பு, எனர்ஜி நம்மிடம் நிரந்தரமாக இருக்கும். ஆரோக்கியத்துக்கான எந்தவொரு செயலையும் தள்ளிப்போடுவது என்பது, நம் புத்துணர்வுக்கு நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் தடையாகும். எனவே எந்தவொரு செயலாக இருந்தாலும் சரி.. அதை நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப் போட வேண்டாம். அன்றைய செயலை அன்றே முடிப்போம். ஆரோக்கியத்துக்கு வழி வகுப்போம். தொடர்ந்து எந்தவொரு செயலையும் செய்வதுதான் ஒருவரிடம் உள்ள மிகச் சிறந்த நல்ல பழக்கம்.