காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை கறிவேப்பிலை…!

Spread the love

உணவில் கறிவேப்பிலையை பார்த்தாலே ஏதோ ஆகாத பொருளை காண்பதுபோல் தூக்கிக் கீழே போட்டுவிடுகிறோம். ஆனால், கறிவேப்பிலையில் இருக்கும் மருத்துவக் குணங்களையும் அதன் சத்துக்களையும் பற்றி நாம் தெரிந்துகொண்டால் நிச்சயம் கீழே போடமாட்டோம்.

கறிவேப்பிலை, கறிவேம்பு என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் கரிலீப்ஸ் (Curry Leaf) என்பர். தாவரவியல் பெயர் முராயா கோயனிகி. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. கறிவேப்பிலை இந்தியா, அந்தமான் தீவுப்பகுதிகளை பிறப்பிடமாகக் கொண்டது. ஆனால், இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உணவு மற்றும் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.

கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு. அவை நாட்டுக் கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலையின் இலை சிறியதாகவும் துவர்ப்பும் இனிப்பும் கலந்த ருசியோடு இருக்கும். காட்டுக் கறிவேப்பிலை சற்று தடித்தும் கசப்பு சுவையுடையதாக இருக்கும். இலை மட்டுமல்லாமல் இதனுடைய ஈர்க்கு பட்டை, வேர் முதலிய அனைத்துமே உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

கறிவேப்பிலை, கீரை வகையை சேர்ந்ததில்லை என்றாலும் கீரைக்குரிய சத்துக்கள் இதில் ஏராளம் உண்டு. கறிவேப்பிலையைத் தனிப்பட்ட முறையில் சமைத்த சாப்பிடுவதில்லை. குழம்பு, கூட்டு, பொரியல், ரசம் இவற்றில் கறிவேப்பிலையை சேர்த்துவிட்டால் மணமுள்ளவையாக இருக்கும். தினசரி சமையலுக்கு கறிவேப்பிலை ஒரு இன்றியமையாத பொருளாக இருந்து வருகிறது.

கறிவேப்பிலையில் நிறையசத்துக்கள் உள்ளன. குறிப்பாக பீட்டா கரேட்டின் என்னும் சத்துப்பொருள் அபரிமிதமாக உள்ளது. கறிவேப்பிலையை வேக வைக்காமலோ பொரிக்காமலோ சாப்பிடும்போது தான் நமக்கு ‘பீட்டா கரோட்டின்’ சத்து முழுமையாக கிடைக்கிறது. பீட்டா கரோட்டின்தான் ‘ஏ’ சத்து. இது கண்கள், பற்கள், எலும்புகள், தோல் ஆகியவற்றுக்கு ஊட்டசத்தாக அமைகிறது. இதில் அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்களும் நிறைய இருக்கின்றன.

100 கிராம் கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்
நீர்70%
புரதம்6.1%
மாவுப்பொருள்18.7%
கொழுப்பு1.0%
நார்ப்பொருள்6.4%
பாஸ்பரஸ்0.57%
இரும்புத்தாது7 யூனிட்
வைட்டமின் ஏ12600 யூனிட்
வைட்டமின் பி4 யூனிட்

மற்றும் தயாமின், ரைபோபிளேவின், தயாசின், போலிக் அமிலம் போன்றவையும் உள்ளன.

கறிவேப்பிலையின் மருத்துவக் குணங்களைப் பற்றி கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டி டியூட் ஆப் கெமிக்கல் பயாலஜி மற்றும் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கழகத்தைச் சோந்த ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் பல்வேறு உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் மணத்தை தருவதோடு சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாகவும் செயல்படுகிறது. இது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதால், ஆரம்பகால புற்றுநோய் குணமாகும். இதயநோய் வரும் வாய்ப்பு குறையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

அதுமட்டுமல்லாமல், வாயுத்தொல்லை பித்தம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை சரிசெய்து வயிற்றில் நோய் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுத்து வயிற்றை சுத்தமாக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கறிவேப்பிலையைப் பற்றி அகத்தியர் குணபாடம் –

வாயினருசி வயிற்றுளைச்ச வீடுசுரம்

பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்கான்-தூய

மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்

கருவேப்பிலையருந்திக் காண்!

என்று சொல்கிறது.

அதாவது கறிவேப்பிலையை உண்பதால் வாய் ருசியின்மை, வயிற்று உபாதைகள், நீண்ட நாட்கள் விடாது வாட்டுகிற காய்ச்சல், பித்தமயக்கம் ஆகியன குணமாகும்.

சமையலில் கறிவேப்பிலையை போட்டு சமைத்த பின்னர் அதை உண்ணும்போது மேற்கண்ட பலன்களை நாம் பெறலாம்.

ஆனால், கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாய சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? ஒரு பட்டியலே போடலாம்.

இரத்தசோகையை குணமாக்கும்

கறிவேப்பிலையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் இரத்தசோகை உள்ளவர்கள், காலையில் தினமும் ஒரு பேரீச்சம்பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வரும்போது, உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து அனீமியா எனப்படும் இரத்தசோகை நீங்கும்.

கொழுப்புகள் கரையும்

காலையில் வெறும் வயிற்றில் அடிக்கடி சிறிது கறிவேப்பியை மென்று அதன் சாற்றை விழுங்கி வந்தால், வயிற்றை சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அழகாக திகழலாம்.

நீரிழிவு கட்டுக்குள் வரும்

நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பச்சையாக வாயில் போட்டுமென்று சாப்பிட்டு சாற்றை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். இதனால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும். மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்துக் கொள்ளலாம்.

இதயநோய் வராது

கறிவேப்பிலை உடல் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதால், இரத்த ஓட்டம் தங்குதடையின்றி சீராக ஓடும். இதனால் இதயநோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகள் வராது.

கண் ஆரோக்கியம் காக்கும்

கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ‘ஏ’, கரோட்டினாய்டுகள் (carotenoids) கார்னீயா என்ற பாதிப்பைக் கட்டுப்படுத்தும். பார்வை இழப்பு, மாலைக்கண் நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பார்வைத்திறனை கூட மேம்படுத்தும்.

செரிமான பிரச்சினைகள் தீரும்

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சினை உள்ளவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினைகள் முழுவதுமாக தீர்ந்துவிடும்.

கல்லீரலை பாதுகாக்கும்

கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஜஏ’  மற்றும் ‘சி’ சத்துக்கள் கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றிவிடும். மேலிலும் கலில்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டும்.

மூளை சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்

மூளைத் திசுக்கள் செயல்குன்றாமல் இருக்க மூளையைப் பயன்படுத்தி வேலை செயல்பவர்கள் அன்றாடம் கறிவேப்பிலையை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இனி கறிவேப்பிலையின் மருத்துவப் பயன்களை பார்க்கலாம்.

கறிவேப்பிலை துவையல்

கறிவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து, இதற்கு தேவையான உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சிவக்க வறுத்து எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். இதுதான் கறிவேப்பிலை துவையல்.

இந்தக் கறிவேப்பிலை துவையலை சாப்பிடும்போது பல நோய்கள் குணமடையும். குறிப்பாக, சிலருக்கு எப்போது பார்த்தாலும் எந்த விஷயத்திலும் குழப்பமாகவே இருக்கும். எந்தக் காரியத்தை முதலில் செய்வது, இரண்டாவதாக எதை பார்ப்பது என திகைப்பார்கள். குழம்பிப் போய் தடுமாறுவார்கள். இவர்களுக்கு சாதாரண கறிவேப்பிலை உதவுகிறது. கறிவேப்பிலையை துவையலாக செய்து சாதத்தோடு சேர்த்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் அறிவில் தெளிவு ஏற்படும். குழப்பமான மனநிலை மாறும்.

சிலருக்கு நாக்கில் ருசி அறியும் தன்மையே இருக்காது. இப்படிப்பட்ட ருசியறியாதவர்களுக்கு கறிவேப்பிலை நன்கு உதவுகிறது. இவர்கள் கறிவேப்பிலை துவையலை ஒருவாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் அதன்பின் நாக்கில் நீர் வழியும். ஆம் ருசியறியும் தன்மை நாக்கிற்கு வந்துவிடும். அதுமட்டுமல்லாமல் நல்ல பசியைத் தூண்டி உணவை அதிகம் உட்கொள்ள வைக்கும். பித்தம், அஜீரணம், புளியேப்பம் இவைகளை போக்கும்.

இப்படிப்பட்ட சிறப்பும் பெருமையும் வாய்ந்த இக்கறிவேப்பிலையைப் பற்றி தமிழக நாட்டுப்பாடல் ஒன்று அழகாக கூறுகிறது.

“கறிவேப்பிலையோ வேப்பிலை

காய்கறிக் கெல்லாம் தாய்ப்பிள்ளை.”

ஆம், இவ்வளவு நன்மைகளை அள்ளித்தரும் கறிவேப்பிலையை இனிமேல் தூக்கி எறியமாட்டீர்கள் தானே?


Spread the love