வெள்ளரிக்காய் சமாச்சாரம்

Spread the love

வெள்ளரிக்காய் குளிர்ச்சித் தன்மை உடையதாகும். இது குறைந்த அளவில் கலோரிகளை கொண்டுள்ளது. கேரட் போன்று வெள்ளரிக்காயின் தோல் பகுதியில் அதிகளவு தாது உப்புக்கள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளதால் இதனை தோல் சீவாமல் அப்படியே சாப்பிடலாம். இது மலைப்பகுதிகளில் நன்கு வளரக் கூடியதாகும். இமயமலைப் பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உடையதாகும்.

கிழக்கிந்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிரிடப்படுகின்றன. பண்டைய கால எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் வெள்ளரிக்காயை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர்.  இன்றைய காலத்தில் இந்தியாவிலும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

கோடை காலங்களில் அதிக அளவில் கிடைக்கும் வெள்ளரிக்காய் பல நோய்களை தீர்க்க கூடியதாகும். இது வெயில் காலங்களில் நம் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை சமநிலைப்படுத்த பெரிதும் உதவுகிறது.

வெள்ளரிக்காய் உண்ணும் முறை

வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடுவதால் அதிலுள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிகின்றன, எனவே இதனை அப்படியே உண்ணலாம் அல்லது மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்தும் அருந்தலாம்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து இதனை குடித்து வர நல்ல பலனைக் காணலாம். வெள்ளரிக்காயை சாலட் செய்தும் சாப்பிடலாம்.

சாலட் செய்முறை

தயிரில் வெள்ளரிக்காய், கேரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி போன்ற காய்கறிகளை  சிறு துண்டுகளாக நறுக்கி ஒன்றாக கலந்து  தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சுவையான சத்து நிறைந்த சாலட் தயார்.

வெள்ளரிக்காயை இரவில் தூங்குவதற்கு இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிடவும். இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, தூக்கமின்மை ஏற்படும்.

மருத்துவ பயன்கள்

முடி மற்றும் நக அழகு மேம்பட

வெள்ளரிக்காயில் உள்ள சிலிக்கா என்ற கனிமம் நகங்கள் மற்றும் தலை முடியை பளபளப்பாக வைக்க உதவுகிறது. இதில் உள்ள சல்பர் எனும் சத்து முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதனை தினமும் கூட உண்டு வரலாம்.   

குடல் சுத்தமாக

வெள்ளரிக்காய் எளிதில் செரிமானமாகக் கூடியதாகும். இது சிறுநீர் பிரிவைத் தூண்டுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.

மலச்சிக்கல் பிரச்சனைக்காக ஏதேனும் ஒரு பழத்தை தினமும் உண்பவர்கள்  அதற்கு பதிலாக, தினமும் இரண்டு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வரலாம். இது குடலை நன்கு சுத்தமாக்குகிறது.

நீரிழப்பு

வெள்ளரிக்காய் விதையில் வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இதில் குக்கர் பிட்டின் என்ற மூலப்பொருள் உள்ளது. இதில் டையூரிடிக் பண்பு இருப்பதால் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடல் சமநிலை பாதிக்கப்பட்டு, நீரிழப்பிற்கு வழிவகுக்கிறது.

எலும்புகள் வலுபெற

நமது உடலில் உள்ள உப்புத்தன்மை, நச்சுகள் போன்றவை யூரிக் அமிலமாக மாறி எலும்பு மூட்டுகளில் தங்குவதால் எலும்பு பகுதியில் பலவீனங்கள் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க வெள்ளரிக்காயை தினமும் உண்டு வரலாம். இது உடலிலுள்ள கழிவுகளை யூரிக் அமிலமாக வெளியேற்றுகிறது. இதனால் எலும்பும் பாதுகாக்கப்படுகிறது.

முடி வளர்ச்சி அடைய

வெள்ளரிக்காயில் உயர்தரமான சிலிகான், சல்ஃபர் நிறைந்துள்ளது.  இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிகிறது. இதற்கு வெள்ளரி சாறு,  பசலைக்கீரை சாறு, கேரட் சாறு, பச்சடி கீரைச் சாறு  போன்றவற்றை இரண்டு தேக்கரண்டி அளவு என சமஅளவில் கலந்து  அருந்தவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முடி நன்கு வளர்ச்சி அடைந்து, முடி கொட்டுதல் தடுக்கப்படும்.

சரும பாதுகாப்பிற்கு

வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள செல்களை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றினை முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவி வர சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் முகக்கருமையும்  நீங்கும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love