இருமலின் வகைகளும், காரணங்களும்

Spread the love

இருமல் ஒரு தன்னிச்சையான செயல். சுவாசக் குழாய்களை, வேண்டாத எரிச்சலூட்டும் பொருட்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு ஏற்படும் செயல் இருமும் போது மூச்சுக்குழாயிலிருந்து அகற்றப்பட வேண்டிய சளி, வெளியேற்றப்படுகிறது. ஜலதோஷமும் இருமலும் ஒன்றுக்கொன்று கை கோர்த்துக் செல்லும் சகோதரர்களைப் போல் இணை பிரியாதவை.

இருமலை இரு விதமாக சொல்லலாம். ஒன்று பயனுள்ள இருமல் (Productive cough) மற்றொன்று பயனிலா இருமல் (Un –  productive cough). பயனுள்ள இருமல் ஏற்படும் போது சுவாச மண்டலத்தின் மேல் பாகத்தை அடைத்துக் கொண்டிருக்கும் சளி நீக்கப்படுகிறது. இதனால் சுவாசிப்பது சுலபமாகும். பயனில்லா இருமல் சளியில்லாத இருமல். இந்த இருமலால் தொண்டையில் வலி, எரிச்சல் தோன்றும். இதை ‘வறட்டு இருமல்’ (Dry cough) என்பார்கள்.

இருமலை மேலும் 3 விதமாக சொல்லலாம். கபத்தை வெளியேற்றும் திறமை இல்லாத இருமல் (Cough without expectoration), கபத்தை நீக்கும் சக்தியுள்ள இருமல் (Cough with expectoration), இருமலுடன் ரத்தம் வருவது. சளி, கோழையுடன் வரும் இருமலில் ரத்தமும் வந்தால் டாக்டரை உடனே அணுகவும்.

இருமலுக்கு பல காரணங்கள் உண்டு. முன்பு சொன்னபடி சுவாசக்காற்று பாதையில் ஏற்படும் தும்பு தூசிகள், துகள்கள், இறந்த செல்கள் முதலியவற்றை வெளியேற்ற இருமல் உண்டாகிறது. ப்ளூ, ஜலதோஷம், ப்ராங்கைடீஸ், ஆஸ்துமா, மூச்சிரைப்பு போன்றவைகளும் காரணமாகலாம். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் ஏற்படும் சுவாச நாள ‘எரிச்சல்’ பெரும்பாலான இருமல்களுக்கு காரணம். புகைபிடிப்பது மற்றொரு முக்கிய காரணம். ஒவ்வாமையாலும் இருமல் உண்டாகும்.

அறிகுறிகள்

காலை வேளையில் பொதுவாக இருமல் தொடங்கும். மஞ்சள் (அ) பச்சை நிற கபம் வெளிப்படும், தொண்டையில் எரிச்சல் ஏற்படும்.

ஆயுர்வேதம்

சுவாச மண்டல கோளாறுகளை ஆயுர்வேதம் “காச ரோகா” என்ற ஒரே தலைப்பில் விவரிக்கிறது. ஐந்து காரணங்களை சொல்கிறது. வாத, பித்த, கப கோளாறுகள், மார்பில் அடிபடுதல், உடல் உருகிப் போதல், முதல் அறிகுறிகள் தொண்டையில் கரகரப்பு, உணவை முழுங்குவதில் சிரமம். வாதம் (வாயு) உடலின் கீழே இறங்கும் போது தடை ஏற்பட்டால், அது திரும்பி மேலேறி விடும். தலையின் வெற்றிடங்களை ஆக்ரமித்து கொள்கிறது. வலி, உடல் நடுக்கம், தாடையில் வலி, மரத்துப் போதல், கண், கழுத்து, முதுகு, விலா பாகங்கள் முதலியவை இருமல் தாக்குதலுடன் ஏற்படலாம். இருமல் வறண்ட இருமலாகவும் இருக்கலாம். அல்லது சளியை நீக்கப் பயனுள்ள இருமலாகவும் இருக்கலாம். வாத கோளாறு இருமலை தூண்டி விடும் காரணங்கள் – பட்டினியிருப்பது, அதீத உடலுறவு, இயற்கை வேகங்களை அடக்குதல்.

அறிகுறிகள்

தலை, மார்பு, விலா பாகங்களில் வலி, குரல் பேதம், தொண்டையும் வாயும் உலர்ந்து போதல், சத்தமான வறண்ட இருமல், ஆயாசம், மன பரபரப்பு முதலியன. பித்த தோஷத்தால் ஏற்படும் இருமல் கார சாரமான உணவு, புளிப்பு சுவை அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும், வெய்யிலில் அலைவதாலும், கோபப்படுவதாலும் ஏற்படலாம். இருமலுடன் வரும் சளி மஞ்சள் நிறமாக இருக்கும்.

கபதோஷ இருமல் எண்ணெய் பசை அதிகமுள்ள உணவுகள், இனிப்புகள் உண்பதாலும், அதிகம் தூங்குவதாலும் வரும் நான்காவது டைப் இருமல் மார்பில் அடிபடுவதால் ஏற்படும் வாத சீர்கேட்டால் ஏற்படும். எடை தூக்கும் போது, குதிரை சவாரியின் போது அல்லது அளவில்லாமல் அதிகமாக பாலியல் கலவியில் ஈடுபட்டாலும், இருமல் ஏற்படும்.

ஐந்தாவது டைப் க்ஷயரோகம் போன்ற உடலை உருக்கும் நோய்களால் வரும் இருமல். இதற்கும் தவறான உணவு முறைகள், அதிக உடலுறவு, இயற்கை உத்வேகங்களை அடக்குவது முதலிய காரணங்களை ஆயுர்வேதம் சொல்கிறது.

வீட்டு வைத்தியம்

1.    கபம், சளி இல்லாத வறட்டு இருமலுக்கு, தொண்டையை முதலில் வழவழப்பாக செய்ய வேண்டும். இதற்கு ஆயுர்வேத பண்டிதர்கள் பசும் பால் மற்றும் பசு நெய்யை உபயோகிப்பதை சிபாரிசு செய்கிறார்கள்.

2.    அதிமதுர வேர் கஷாயம் தயார் செய்து தேனுடன் குடிக்க இருமல் குறையும்.

3.    கரு மிளகு 250 லிருந்து 750 மி.கி. எடுத்து நெய், சர்க்கரை, தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

4.    துரித நிவாரணத்திற்கு கறுப்பு, உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், கரு மிளகு, வாயு விளங்கம், வால் மிளகு, தேன் இவற்றில் சம அளவு எடுத்து குழைத்து சாப்பிடலாம்.

5.    மஞ்சள் பொடி கலந்து சூடான பால் தொண்டைக்கு இதமானது. மஞ்சள் ஒரு கிருமி நாசினி. இந்த மஞ்சள் பொடி கலந்த பாலை 15 நாளாவது குடிக்க வேண்டும்.

6.    துளசி சாறு 5 மி.லி. எடுத்து, 10 மி.லி. தேனில் கலந்து தினம் இரு வேளை குடித்து வந்தால் இருமல் நிற்கும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

7.    ஒரு டம்ளர் பாலில் இரண்டு பூண்டு ‘பல்’ களை நசுக்கிப் போட்டு காய்ச்சவும். பாலின் அளவு பாதியாகும் வரை காய்ச்சவும். வடிகட்டி, இரண்டு பாகங்களாக பிரித்து, ஒரு பாகத்தை காலையிலும், மற்றொரு பாகத்தை மாலையிலும், 1 வாரம் குடிக்கவும். அதிக அமில பாதிப்பு உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்.

8.    வெங்காயச் சாறு (5 மி.லி.) + தேன் (10 மி.லி.) கலந்து 10 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளை எடுத்துக் கொள்ளவும். தேனுக்கு பதில் வெல்லத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

9.    “ஆவி பிடித்தல்” சளிக்கு மட்டுமல்ல, இருமலுக்கும் நல்லது. ஆவி பிடிக்கும் நீரில் மஞ்சள் பொடி சேர்த்தால் இன்னும் நல்லது. கிராம்பு தைலம் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய்யையும் ஆவி பிடிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம்.

10.   கற்பூர வல்லி சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும். கற்பூர வல்லி மற்றும் இதர ஆயுர்வேத மூலிகைகள் தனியே விவரிக்கப்படுகின்றன.

இதர குறிப்புகள்

இரவில் இருமல் தொல்லை (அதுவும் வறண்ட இருமல்) அதிகமாகும். இன்னொரு தலையணை வைத்து, தலையை தூக்கி படுத்துக் கொள்ளவும்.

நிறைய நீர் (சிறிது சூடான) அல்லது திரவ உணவுகளை (8 (அ) 10 டம்ளர்) குடிக்கவும்.

புகைப்பதை உடனே நிறுத்தவும்.

இரைப்பு / இழுப்பு

இதை இரைப்பு என்பதற்கு பதில் “வீசிங்” (Wheezing) என்றால் தான் பலருக்கு புரியும்! குழந்தைகளை பெரும்பாலும் பாதிக்கும் காற்றுக்குழாய்களின் அடைப்பினால் ஏற்படும் “விசில்” போன்ற சப்தம், நாதத்துடன் தொண்டையிலிருந்து எழும்பும்.

சுவாசக்குழாய்களின் அடைப்பு அல்லது ஆஸ்த்துமாவில் ஏற்படுவது போல் சுவாசக்குழாய்கள் சுருங்குவது வீசிங் ஏற்பட காரணங்கள். இரைப்பு அடிக்கடி ஏற்பட்டால் அதன் காரணம் ஆஸ்துமா தான். வீசிங் ஏற்பட்டால், மூச்சு விடுவது சிரமமாகும். ஆஸ்துமா இல்லாமலும் வீசிங் ஏற்படலாம். வீசிங் தாக்குதலின் போது ஒரு கிராம்பை நாக்குக்கு அடியில் வைத்து கொண்டால் சிறிதாவது நிவாரணம் கிடைக்கும். புதினா இலையுடன் கருமிளகுப்பொடியை கலந்து வாயில் போட்டு சிறிது மென்று சாப்பிடலாம். மஞ்சள் பொடி, தேனை குழைத்து நாக்கில் தடவலாம்.

ஜலதோஷம், இருமல், இரைப்பு, ஆஸ்த்துமா இவையெல்லாம் ஒன்றுக்கொன்று நெருங்கிய நோய்கள். ஆஸ்த்துமாவைப் பற்றி விவரமாக பிறகு பார்க்கப் போகிறோம்.

இருமல், இரைப்பு / இழுப்புக்கான ஆயுர்வேத மருந்துகள் பல உள்ளன. ஆயுர்வேத டாக்டரை அணுகவும்.

கக்குவான் (Whooping cough)

பாக்டீரியா தொற்றால் வரும் கக்குவான் இருமல், ஒரு காலத்தில் உயிர் கொல்லி வியாதியாக இருந்தது. பெரும்பாலும் 5 வது குழந்தைகளை தாக்கும். இதை வராமல் தடுக்க தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. டிப்தீரியா, டெடானஸ், கக்குவான் இந்த 3 நோய்களுக்கும் DPT தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் கக்குவான் தாக்கும் அபாயம் கணிசமாக குறைந்து விட்டது.

கக்குவான் மிக வேகமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தொற்றுநோய். காற்றில் பரவும் Bordella pertussis எனும் பேக்டீரியா கக்குவானை உண்டாக்குகிறது.

குழந்தைகளுக்கு வந்தால், முதலில் ஜலதோஷ அறிகுறிகள் தென்படும். இருமல் ஆரம்பிக்கும். இரைச்சலுடன் ஏற்படும். இருமல் ஒரு நாளில் 30 (அ) 40 தடவை ஏற்படும். இருமல் கொடூரமாக, கடுமையாக இருக்கும். மூச்சடைப்பு ஏற்படும். வாந்தி உண்டாகும். கபத்தை வெளியே துப்ப முடியாத குழந்தைகளுக்கு ஆபத்து.

வீட்டு வைத்தியம்

1.    5 மி.லி. துளசி சாறுடன் 10 மி.லி. தேன் சேர்த்து தினம் 3 லிருந்து 4 வேளை கொடுக்கவும். இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

2.    பூண்டு சாறையும் இவ்வாறே தேனில் கலந்து குடிக்கலாம்.

தாளி சாதி சூரணம், கபாரதிகா பஸ்மம் போன்ற நல்ல ஆயுர்வேத மருந்துகள் உள்ளன.


Spread the love
error: Content is protected !!