கொரோனா வைரஸ்

Spread the love

சீனாவில் ஒரு புது வகையான வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டதால் மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இதுவரை மனித இனம் காணதது. இந்த வைரஸ் தொற்றானது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவக் கூடியது. இதை குணப்படுத்துவதற்கான மருந்து கிடையாது. சீனாவில் மட்டுமே இந்த புது வைரஸ் இருப்பது கண்டுபிக்கப்பட்டதால் இதை சீன வைரஸ் என்றும் அழைக்கின்றனர். இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. சீனாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்திவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

கொரோனா   வைரஸ் (Corona Virus) என்பது மனிதர்கள், பறவைகள் மற்றும் பாலூட்டிகளுக்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். கொரோனா வைரஸ் என்கிறப் பெயர் லத்தீன் மொழியில் கொரோனா மற்றும் கிரேக்க மொழியில் கொரினா என்பதிலிருந்து உருவானது. எலக்ட்ரான் நுண்ணோக்கியில் இந்த வைரஸைப் பார்க்கும் போது இது ஒரு கிரீடம் போலவும், மலர் மாலை போலவும் காட்சியளிக்கிறது. இதன் உருவ அமைப்பானது அரச கிரீடம் அல்லது சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டம் (Solar Corona) போல் தெரிகிறது.

கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் 1960 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸின் மூதாதையானது சுமார் 10,000 ஆம் ஆண்டுக்கு முன் தோன்றியது என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வைரஸ் பரவுவதற்கும், பரிணாமம் அடைவதற்கும் பறவைகள் மற்றும் வௌவால்கள் பெரும் பங்கு வகித்தன. இந்த வைரஸ் தொற்றானது விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்குப் பரவியது. பிறகு விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவியது. எப்போது மனிதனுக்குப் பரவத் தொடங்கியதோ அப்போதே மனிதனிடமிருந்து மனிதனுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது என்பதை உலக சுகாதார நிறுவனமும் (கீபிளி) உறுதி செய்தது.

மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இந்த வைரஸ் தொற்றுப் பரவுவதால் இதை மனித கொரோனா வைரஸ்கள் (Human Corona Viruses) என அழைக்கப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சளியை ஏற்படுத்துவது இதன் முக்கிய அறிகுறியாகும். கொரோனா வைரஸ் குடும்பத்தில் 7 வைரஸ் தொற்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதன் முதலாக மனித நேயாளியின் நாசி குழியில் இரண்டு வைரஸ்கள் இருப்பதைக் கண்டனர். அதற்கு மனித கொரோனா வைரஸ் 229ணி (HCoV-229E) மற்றும் மனித கொரோனா வைரஸ் ளிசி43 (HCoV-OC43) எனப் பெயரிட்டனர். 2002 ஆம் ஆண்டில் சார்ஸ் (SARS-Co‚S), 2004 ஆம் ஆண்டில்  நியூஹேவன் கொரோனா வைரஸ்  (HCoV-NL63), 2005 இல் பிரிஹிமி, 2012 இல் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS – CoV) என்கிற வைரசும் கண்டுபிடிக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டில் நாவல் கொரோனா வைரஸ்  (2019 – nCoV) கண்டுபிடிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நாவல் கொரோனா வைரஸ் என அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியது. நாவல் என்பதற்கு புதியதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்லது புதியதாக உருவானது எனப் பொருள். சீனாவில் வுகான் மாநிலத்தில் ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றார். அவருக்கு அதிகப்படியான காய்ச்சல் மற்றும் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து உடல் பலவீனம் அடைந்தார். இதே அறிகுறியுடன் பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தனர். தீவிர ஆய்வு மேற்கொண்ட போது ஒரு புதிய வைரஸ் தொற்று பரவி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

நோய்

கொரோனா வைரஸ் தொற்று தாக்குதல் என்பது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் பிற்பகுதியில் தெரிய வந்தது. இது ஒரு ஆட்கொல்லி வைரஸாகும். சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றுக்குக் காரணம் வுகான் மாநிலத்தில் இருக்கும் மீன் மார்கெட், மிகப்பெரிய இறைச்சி கடைகள் மற்றும் கடல் உணவுகள் கொண்ட சந்தை பகுதி எனக் கண்டறியப்பட்டது.

இந்த சந்தைப் பகுதியில் இருந்துதான் இறைச்சிகளை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இறைச்சி விற்பனை செய்யும் இடங்களுக்கு இந்த வைரஸ் பரவியது. இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், பிறகு மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவி இருக்கிறது.

அறிகுறிகள்

கொரோனா வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. முதலில் காய்ச்சலில் தொடங்கும். பிறகு காய்ச்சல் அதிகரிக்கும். வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல், தொண்டை வலி, நுரையீரல் அரிப்பு மேலும் சுவாசக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை படிப்படியாக அதிகரித்து கடைசியாக இறப்பில் முடியும்.

இது ஜலதோசம் ஏற்படுத்தும் வைரஸ்களைப் போலவே பரவுகிறது. இருமல், தும்மல், சளி மூலமும் மற்றவர்களுக்குப் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களை தொடுவதன் மூலமும் அல்லது அவர்கள் தொட்ட இடத்தை தொடுவதன் மூலமும் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த வைரஸ், காற்றில் பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்த வைரஸ் காற்றில் கலந்து விடுகிறது. இதை சுவாசிக்கும் போது வைரஸ் தொற்றிக் கொள்கிறது. சிறு குழந்தைகள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கொடூரமான வைரஸ்

கொரோனா வைரஸ் மிகவும் கொடூரமானது. இதை தாக்கியவருக்கு நோய் அறிகுறிகள் தோன்றும் முன்பே பரவும் தன்மை கொண்டிருக்கிறது. நோய் அறிகுறிகள் தென்படாமல் கூட இரண்டு வாரம் வரை கூட அடுத்தவருக்கு நோய் தொற்றை பரப்ப முடியும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர் சாதாரணமாக மூச்சு விடும்போது அதன் வழியாக வைரஸ் அடுத்தவருக்குப் பரவும் தன்மை கொண்டது. தும்மல், இருமல் அறிகுறிகள் இல்லாமலும் இது பரவி விடும் ஆபத்து உள்ளது. சுவாசப்பாதை வழியாக பரவி சுவாச மண்டலத்தைப் பாதிக்கும். பிறகு இரு பக்க நுரையீரலையும் தாக்கி நிமோனியாவை உண்டாக்கும்.

பாதிப்பு

சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை பலர் உயிர் இழந்துள்ளனர். ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஆகவே உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. அவசர நிலை பிரகடனப் படுத்தியுள்ளது.

சீனா நடவடிக்கை

நோய் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க நோய் பாதிக்கப்பட்ட நகரங்களை மூடியுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. விலங்கு வர்த்தகத்துக்கும் தடை விதித்துள்ளது. ராணுவத்தைச் சேர்ந்த 450 மருத்துவர்களை பணியில் அமர்த்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சீன விஞ்ஞானிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

நோயாளிகளை ஒரே இடத்தில் வைத்து சிகிச்சை அளிப்பதற்காக 1,000 மற்றும் 1,300 படுக்கையுடன் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு புதிய மருத்துவமனைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டன. 15 நாட்களில் இந்த மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டன. இது மருத்துவ உலகில் ஒரு புதிய மைல் கல்லாகும். மேலும் 25 பொது மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தற்காலிக மருத்துமனைகளாக மாற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கை

இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனாவில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸை அடையாளம் காண்பது சற்று கடினம். ஆகவே இருமல், சளி மற்றும் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இறைச்சியை நன்கு சமைத்தப் பின்னரே உண்ண வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் பராமரிக்கப்டும் விலங்குகளுடன் உண்டான தொடர்பை தவிர்குமாறு உலக சுகாதார அமைப்பு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகமூடி அணிந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்குகின்றனர். நோய்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை உடனே அணுக வேண்டும். கைகளைச் சுத்தமாக சோப்பு போட்டு கழுவுதல் அவசியம். கைகளை முகத்திற்கு அருகில் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். இது போன்று பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆயுவேதம்.காம்


Spread the love