வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமையல் முறை

Spread the love

“மனிதன் அளவுடன் உணவு உண்ண  வேண்டும். உணவின் அளவு சடராக்கினியின் வலிவை  சார்ந்திருக்கிறது. உணவின் எந்த அளவு, உண்பவனின்  உடலுக்கு தீங்கு விளைவிக்காமல், உரிய நேரத்தில் சீரணமடைகிறதோ  அந்த அளவே மனிதனின் உணவில் அளவாகும்  என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சரகசம்ஹிதை

இந்த காலத்தின் உணவு விஞ்ஞானம் பெருமளவில் வளர்ந்திருக்கிறது. வியாதி, வயது, உடல் எடை, வசிக்குமிடம் – இவற்றுக்கேற்ற உணவு முறைகளை சரியாக பரிந்துரைக்க, வைத்தியரை தவிர “ஸ்பலிஸ்ட் டயட்டீசியன்கள்” (Specialist Dieticians) இருக்கிறார்கள்.

ஆயுர்வேதம் உணவுக்கு மிகுந்த முக்கியத்வத்தை மட்டுமல்ல, மரியாதையும் தொன்று தொட்டு கொடுத்து வருகிறது. உணவை வணங்கி உண்ண வேண்டும் என்பது ஆயுர்வேதக் கருத்தாகும். உண்ணும் உணவு பரிசுத்தமாக இருக்க வேண்டும். தூய்மையான உணவு தூய்மையான எண்ணங்களை உருவாக்கும்.

உண்ணும் உணவை தீர்மானிக்க, ஆயுர்வேதம் கீழ்க்கண்ட 8 அம்சங்களை சொல்கிறது.

1.    உண்ணப்போகும் உணவின் இயற்கை குணங்கள்

2.    சமைக்கும் முறைகள்

3.    கலவைப் பொருட்கள் (கூட்டுப் பொருட்கள்)

4.    அளவு

5.    உணவு விளைந்த இடம்

6.    உணவுப் பொருட்களை வாங்கிய சமயம், (சீசன்) உண்ணும் நேரம்

7.    உபயோக முறை

8.    உண்ணும் மனிதனின் தன்மை.

மேற்சொன்ன 8 விஷயங்களை விரிவாக பார்ப்போம்

உணவின் இயற்கை குணங்கள்

ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு தனித்தன்மையுண்டு. இலேசான

உணவுகள், (அரிசி, பழரசங்கள்) கனமான உணவுகள் (கிழங்குகள்), உடலுக்கு சூடேற்றும் உணவுகள் (மிளகாய், மிளகு, சுக்கு போன்றவை) மற்றும் குளிர்ச்சி தரும் உணவுகள் (தயிர் போன்றவை) என்று பலவகை குணங்கள் உணவுக்கு உண்டு. உண்ணும் மனிதரின் உடல் நிலைக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

சமைக்கும் முறை

ஆயுர்வேத சமையல் முறை ஒரு கலை. சமைக்கும் அடுப்பின் சூடு

உணவில் அதிர்வுகளை உண்டாக்கும். சூடும் நீரும் உணவில் பல மாறுதல்களை ஏற்படுத்தும். அதிக (அ) குறைவான சூடு, சமைக்கும் நேரம். சமைக்கும் பாத்திரங்கள் இவைகளை பொருத்து உணவின் தன்மை, ருசி மாறுபடும். தவிர வாத, பித்த, கப பிரக்கிருதிகளுக்கு தகுந்தவாறு உணவு சமைக்கப்பட வேண்டும்.

நீராவியில் வேக வைப்பது, நீரில்  வதக்குவது போன்றவற்றை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஆயுர்வேதத்தை பொருத்த வரை, காய்கறிகளை  சமைக்க சிறந்த முறை அவற்றை மசாலாக்களுடன்  நெய்யில் வதக்குவது தான். முதலில் மசாலா  பொருட்களை நெய்யில் வதக்குவதால் அவற்றின்  நோய் குணப்படுத்தும் தன்மை வெளிப்படுகிறது. சீரகம், தனியா போன்றவை சீரணத்திற்கு உதவுகின்றன. மஞ்சள் ஒரு கிருமி நாசினி. இவை போன்ற வாசனை திரவியங்கள் உணவுக்கு சுவையையும், வாசனையையும்  கூட்டுகின்றன. இன்றும் நமது இல்லங்களில், வாணலியில்  வாசனை / மசாலா பொருட்களை வறுத்து பிறகு  காய்கறிகளை போட்டு வதக்குவது கடைபிடிக்கப்படுகிறது. இது ஆயுர்வேத சமையலே ஆகும்.

தயிர், ஊறுகாய், போன்ற பதார்த்தங்களை உணவுடன் சேர்த்து சூடு செய்வது கூடாது என்கிறது ஆயுர்வேதம்.

கனமான அடியுடைய பாத்திரங்களின் சமைப்பது உத்தமம். இதனால் அடுப்புச் சூடு சரிவர பாத்திரத்தில் பரவும். உணவு கருகுவது தவிர்க்கப்படும். மண் பாண்டங்கள் சமையலுக்கு ஏற்றவை. அலுமினியம் உதவாது. சமைத்த பின் உணவை வேறு பாத்திரங்களுக்கு மாற்ற வேண்டும்.

கூட்டுப் பொருட்கள்

பல பொருட்களை கலந்து தான் சமையல் செய்யப்படுகிறது. சில

உணவுகளுடன் சிலவற்றை சேர்க்கக் கூடாது என்கிறது ஆயுர்வேதம். உதாரணமாக பால் சாதமும், சாம்பார் சாதமும் சேர்த்து உண்பது தவறான கலவை. தேனுடன் நெய்யை சேர்க்கக் கூடாது. ஆனால் பலாப் பழமும், நெய் / தேன் சேர்ப்பது நல்ல கலவை.

ஒன்றுக்கொன்று ஒவ்வாத உணவு கலவைகளை, ஆயுர்வேதம் ‘விருத்த ஆகாரம்‘ என்கிறது.

விருத்த ஆகாரங்களின்  கெடுதிகள்

1.    பால் + பன்றி மாமிசம் +   – காது செவிடாகலாம், கண்கள்

      மாட்டு மாமிசம் + மட்டன்  – பழுதாகலாம், குரல் மாறும்.

2.    பாலும், பழமும்   – சரும நோய்கள் ஏற்படலாம்.

3.    பாலும் மீனும்    – சரும நோய்கள் ஏற்படலாம்.

4.    பால் + முள்ளங்கி + கேரட்  – சரும நோய்கள் ஏற்படலாம்.

5.    பாலும் + ரொட்டி முதலிய  – அதிக அமில சுரப்பு, வீக்கம்,

     உணவுகள்    – ஜலதோஷம், சோகை முதலியன.

6.    பாலும், ஆல்கஹாலும்  – உயர் ரத்த அழுத்தம்

7.    மீனும் ஆல்கஹாலும்  – தோல் வியாதிகள்

8.    கோழி இறைச்சி + தயிர்  – ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை.

மேலும் சில விருத்த ஆகாரங்கள்

 1. பாலுடன் சேர்க்கக் கூடாதவை – உப்பு, மாம்பழம், வாழைப்பழம், மீன், இறைச்சி, தர்பூசணி, தயிர், சாத்துக்குடி, ஆரஞ்சு வகை சிட்ரஸ் பழங்கள், முதலியன. மாம்பழம், வாழைப்பழம் – இவற்றுடன் பால் சேர்ப்பதை ஆயுர்வேதம் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் ஸ்ரோதாக்கள் (நாளங்கள்) அடைபடும், வியாதிகள் தோன்றும் என்கிறது ஆயுர்வேதம்.
 2. தயிருடன் சேர்க்கக் கூடாதவை – பால், புளித்த பழங்கள், சூடான பானங்கள், மீன், சீஸ் முதலியன.
 3. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், மிளகாய், தக்காளி இவற்றுடன் வெள்ளரி, பால், தர்பூசணி, தயிர் இவற்றை சேர்க்கக் கூடாது.
 4. முட்டையுடன் பால், இறைச்சி, தர்பூசணி, சீஸ், வாழைப்பழம், தயிர் சேர்க்கக் கூடாது.
 5. எலுமிச்சையுடன் தயிர், பால், தக்காளி, வெள்ளரி, டீ ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
 6. முள்ளங்கியுடன் பால், வாழைப்பழம், உலர்ந்த திராட்சைகளை சேர்க்கக் கூடாது.

ஆயுர்வேதம் சொல்லும் ஏற்றுக் கொள்ள முடியாத கலவை உணவுகள்

•     வாழைப்பழத்துடன் பால் அருந்தினால் உடலின் “அக்னி” குறையும். நச்சுப் பொருட்கள் தோன்றி, சைனஸ், ஜலதோஷம், இருமல் இவற்றை உண்டாக்கும்.

•     பழங்களுடன் ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவு (உருளைக்கிழங்கு போன்றவைகளை) உண்டால், இரண்டுக்கும் உள்ள ஜீரணிக்கும் நேர வித்யாசத்தால், பாதிப்புகள் உண்டாகும்.

•     தர்ப்பூசணி, முலாம்பழம் போன்றவைகளுடன் தானியங்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஜீரணமாக தாமதாகும் பொருட்களுடன் சுலபமாக ஜீரணிக்கும் பழங்களின் கலவை கூடாது.

•     தேனை சூடுபடுத்தி உண்ணக் கூடாது. இது விஷப் பொருட்களை உண்டாக்கும்.

•     மாமிசத்தையும், பாலையும் சேர்த்து உண்ணக்கூடாது. மாமிசம் சூட்டை அதிகரிக்கும் உணவு. பால் உடலை குளிர்விக்கும். இரண்டும் பொருந்தாதவை. ஜீரண அக்னி பாதிக்கப்படும்.

•     முலாம் பழத்தையும், தானியத்தையும் சேர்க்க முடியாதது போல், முலாம்பழத்தையும் பாலையும் சேர்த்து உண்ணக்கூடாது. இரண்டும் குளிர்ச்சியானவை. ஆனால் பால் மலமிளக்கி. முலாம் பழம் சிறுநீரை பெருக்கும். பால் ஜீரணிக்க நேரமாகும். வயிற்றில் திரிந்து விடும்.

•     மாமிசம், நீர் வாழும் பிராணிகளின் மாமிசம் இவற்றுடன் தேன், எள் எண்ணை, வெல்லம், பால், உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, கொழுப்பு இவற்றை சேர்க்கக்கூடாது.

இதர சேர்க்கக் கூடாத கலவைகள்

1.    சர்க்கரை – மீன்

2.    வாழைப்பழம் – பேரீச்சம்பழம்

3.    வாழப்பழம் – தயிர்

சமைப்பவர்கள் இந்த விருத்தாகார விஷயங்களை தெரிந்துக் கொண்டிருக்க வேண்டும். சில உணவுகள் ஒன்றுக்கொன்று உதவும். உதாரணமாக நெய் ஜீரணமாக மோர் உதவும்.

ஆயுர்வேதம் சமைத்தவுடன் “ஃப்ரெஷ்” (Fresh) ஆக உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறது. அப்போது தான் முழுச்சத்து கிடைக்கவும். பழைய, ஆறிப்போன, உணவுகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய உணவுகள் சக்தியை தராது தவிர சரிவர ஜீரணமாகாது. காய்கறிகளை பொருத்த வரையில் ஆயுர்வேதம் பச்சை காய்கறிகளை விட சமைத்த காய்கறிகளையே பரிந்துரைக்கிறது.

அளவு

அது ஸர்வக்ரஹம், பரிக்ரஹம் என இருவகைப்படும். இவை இரண்டும் அளவு அளவின்மை இவற்றைப் பிரிக்கின்றன. எல்லா உணவுப் பொருட்களையும் ஒன்று சேர்த்து அளத்தல் ஸர்வக்ரகமாகும். உணவுப் பொருட்களைத் தனித்தனியாக அளத்தல் பரிக்ரஹம் எனப்படும்.

அதாவது எல்லாவற்றையும் கூட்டு சேர்த்து ஒரே அளவாகக் கணக்கிடுதல் ஸர்வக்ரகம், எல்லாவற்றையும் தனித்தனியாகப் பிரித்துக் கணக்கிடுதல் பரிக்ரகம்.அளவைப் பற்றி திருக்குறள் கூறுவது.

மருந்தென வேண்டாவாம்  யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்”.

முன்பு தான் உண்டது செரித்தது என உணர்ந்து தக்க அளவினைப் போற்றி உண்டு வந்தால் உடம்புக்கு மருந்து எனத் தனியே வேறு ஒன்றும் தேவை இல்லை.

முன்பு உண்ட உணவு ஜீரணமானதை எப்படி தெரிந்து கொள்வது?

1.    கழிவுப்பொருட்கள் (மல மூத்திரங்கள்) வெளியேறியிருக்கும். பெருங்கடல் பகுதியில் ‘லேசான’ உணர்வு தெரியும்.

2.    உண்டவுடன் ஏற்படும் களைப்பு மறைந்திருக்கும்.

3.    ஏப்பம் வந்தால் புளிப்பு வாடை இன்றி சுத்தமாக வரும்.

4.    பசி சிறிதாக தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.

5.    உடல் லேசாகி விடும்.

உணவு விளைந்த இடம்

உணவுப் பொருட்களின் தன்மை அவை விளைந்த இடத்தின் நிலம், நீர் வசதிகளை பொருத்து அமையும். புஞ்சையில் விளையும் பொருளுக்கும், நஞ்சையில் விளையும் பொருட்களும் தன்மையில் மாறுபட்டு தான் இருக்கும். சில இடங்கள் சில பொருட்களுக்கு புகழ் பெற்றவை – பஞ்சாப் கோதுமை, நெல்லூர் அரிசி, குண்டூர் மிளகாய், ஊட்டி உருளைக்கிழங்கு – இவற்றை உதாரணமாக சொல்லலாம்.

சமயம், நேரம்

இது நித்யகம், ஆவஸ்திகம் என இருவகைப்படும். நித்யகம் என்பது பொதுவான காலத்தைக் குறிப்பதாகும். ஆவஸ்திகம் என்பது நோயின் நிலையை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவது. ஆவஸ்திகம் நோயின் நிலையைப் பொறுத்தது. நித்யகம் பருவங்களின் நிலையைப் பொறுத்தது.

உணவை உண்ணும் காலமும், சாப்பிடும் உணவுக்கு பொருத்தமாக அமைய வேண்டும். சில உணவுகளை மத்தியானத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. உதாரணம் – கீரை. காலம், பருவங்கள், சுற்றுப்புற சூழ்நிலைகளை அனுசரித்தே உணவு அமைய வேண்டும்.

உபயோக முறை

இவற்றை ஆயுர்வேதம் கீழ்க்கண்ட நியமங்களாக சொல்கிறது.

 1. சமைத்த உணவு சூடாக இருக்கும் போது உட்கொள்ள வேண்டும். அப்போது தான் ஜீரணமாவது எளிதாகும். கபம் குறையும்.
 2. நைப்புள்ள உணவு சுவையூட்டுகிறது. தணிந்துள்ள சடராக்னியைத் தூண்டிவிடுகிறது. விரைவில் சீரணமாகிறது. வாதத்தை நேர்முகமாகச் செலுத்துகிறது. உடலை வளர்க்கிறது. புலன்களுக்கு வலிவு உண்டாக்குகிறது. பலத்தை வளர்க்கிறது. நிறத்தைத் தெளிவாக்குகிறது. ஆகையால் நைப்புள்ள உணவுப் பொருட்களை உண்ண வேண்டும்.
 3. அளவோடு உண்ட உணவு வாதம் பித்தம் கபம் இவற்றைத் துன்புறுத்தாமல் ஆயுளை முழுமையாக வளர்க்கிறது. மலத்துவாரத்தை எளிதில் அடைகிறது. சீரண வலிமையைத் தணிக்காது. துன்புறுத்தாமல் சீரணமடைகிறது. ஆகையால் அளவுடன் உணவு உண்ண வேண்டும்.
 4. முன்பு உண்ட உணவு ஜீரணமான பிறகே அடுத்த உணவை நாட வேண்டும். அசீரண நிலையில் உண்டவனுடைய உணவு வகை, முன் உண்ட உணவின் சீரணமாகாத உணவு ரசத்துடன் கலந்து எல்லா தோஷங்களையும் விரைவில் சீற்றமடையச் செய்கிறது. சீரணமானபின் உண்ட உணவு, தோஷங்களை அவற்றின் இடத்தில் இயற்கை நிலையில் இருக்கச் செய்கிறது. சடராக்னியைத் தூண்டி விடுகிறது. பசியைத் தோற்றுவிக்கிறது. உடலில் உள்ள துவாரங்களைச் சுத்தம் செய்கிறது. சுத்தமான ஏப்பத்தை ஏற்படுத்துகிறது. இதயத்தைத் தெளிவாக்குகிறது. வாதத்தை நேர்முகமாகச் செலுத்துகிறது. தவிர கீழ்நோக்கிச் செல்லும் வாதம், சிறுநீர் இவற்றைக் கழித்த பின்பு உண்ட உணவு, உடலில் உள்ள எல்லா தாதுக்களையும் கெடுக்காமல் ஆயுளை வளர்க்கிறது. ஆகையினால் முன்பு உண்ட உணவு சீரணித்த பின் தான் மறுமுறை உண்ண வேண்டும்.
 5. எதிரிடையான வீர்யமுள்ள உணவை உண்பதினால் தோன்றும் நோய்கள், முரண்படாத உணவை உண்பவனுக்கு தோன்றாது.
 6. மனதிற்குப் பிடித்தமான இடத்தில் அமர்ந்து பிடித்தமான பொருட்களுடன் உணவு உண்ண வேண்டும். அதனால் மனதிற்குத் துன்பமளிக்கும் நிலைகளும் மனக் குழுப்பமும் ஏற்படாது. ஆகையால் மேற்கூறியபடி பிடித்தமான இடத்தில் மனதிற்கேற்ற பொருட்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும்.
 7. வேகமாக உண்ணக்கூடாது. அவ்வாறு உண்பவனுக்கு உண்ட உணவு மேல்நோக்கிச் சென்று ஒன்று சேராமல் தகர்ந்துவிடுகிறது. மேலும் அது இரைப்பையில் நேரிடையாகச் செல்வதில்லை. உணவு அருந்துவதனால் ஏற்படும் நன்மைகள் கிட்டுவதில்லை. மிக வேகமாக உணவு உண்ணலாகாது.
 8. மிகத் தாமதமாக உணவு உண்ணக்கூடாது. அதனால் மனதிற்கு போதுமென்ற எண்ணம் ஏற்படுவதில்லை. உணவை அதிகம் உண்டுவிடுகிறோம். உணவுப் பொருட்கள் குளிர்ந்து குறித்த காலத்தில் சீரணமாகாது. ஆகையால் மிகத் தாமதமாக உணவு அருந்தலாகாது.
 9. பேசாமல் சிரிக்காமல் உணவில் மனதைச் செலுத்தி உணவு உட்கொள்ள வேண்டும். பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அல்லது வேறு நினைவுடனும் உண்பதனால் மிக விரைவில் உண்பதால் உண்டாகும் கெடுதல்களே தோன்றுகின்றன. ஆகையால் பேசாமலும் சிரிக்காமலும் அதே நினைவுடனும் உணவு உட்கொள்ள வேண்டும்.

உண்பவனின் தன்மை

நாம் தேர்ந்தெடுக்கும் சமையல் முறை, உணவு, நமது உடல்வாகுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு கூட உடல் வாகு, உணவுப் பழக்கம் பிடித்த உணவு, சமைத்த முறை இவற்றில் வித்தியாசம் இருக்கும். இந்த தனித்துவ சுவைகள் இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய இடையூறு.

தற்காலத்தில் Dietetics என்று சொல்லப்படும் உணவு முறைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு தோன்றிய ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. சரகசம்ஹிதை, சுஸ்ருதசம்ஹிதை, அஷ்டாங்க ஹிருதயம், பவப் பிரகாசம், க்ஷேமக் குதூகலம், போஜன குதூகலம் முதலிய ஆயுர்வேத நூல்கள் ஆரோக்கிய உணவு முறை, மூன்று தோஷங்களுக்கு, பிரகிருதிகளுக்கு ஏற்ற உணவுகள், சுவைகள், சமைக்கும் முறை, சமையலறைகளின் அமைப்பு உணவு நீண்ட காலம் நிலைக்க பக்குவ முறைகள் சமையலுக்கான பாத்திரங்கள், பரிமாறும் முறை இவற்றையெல்லாம் விவரித்துள்ளன. இவற்றை நினைத்து நாம் பெருமைப்படலாம்.


Spread the love