வெங்காயக் கோஸ் – 1
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2
நாட்டுத் தக்காளி – 2
உருளைக்கிழங்கு – 1
உப்பு – தேவையான அளவு
அரைக்க
தேங்காய் – 1/4 மூடி
சோம்பு – 11/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 6
தாளிக்க
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
செய்முறை
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை மிகவும் சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுக்கவும்.
இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளியைக் கொட்டி வதக்கவும். சிறிது வதங்கியதும் உருளைக்கிழங்கையும் கொட்டி நன்கு வதக்கவும்.
எல்லாம் சேர்த்து நன்கு வதங்கியதும், அரைத்து வைத்திருக்கும் கலவையைக் கரைத்து ஊற்றி இரண்டு கொதி கொதித்ததும் கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும்.
சின்ன வெங்காயக் கோஸ்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
தக்காளி – 1
அரைக்க
பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 6
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
தாளிக்க
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
செய்முறை
வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கவும். எண்ணெயைக் காய வைத்து வெங்காயத்தைக் கொட்டி நன்கு சுருள வதக்கி, தக்காளியையும் சேர்த்து வதக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு விழுதாக அரைத்து, தேவையான தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றவும்.
இந்த சின்ன வெங்காய கோஸ், இட்லி, தோசைக்கு எடுப்பான ஜோடி!
திரக்கல்
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 2
பிஞ்சு முருங்கைக்காய் – 1
உருளைக்கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 2
உப்பு – ருசிக்கேற்ப
அரைக்க
தேங்காய் – 1 மூடி
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் (அ) பச்சை மிளகாய் – 5
தாளிக்க
மிளகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு இருப்புச் சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ‘ஸிம்‘மில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் முதலில் கசகசா, சோம்பு, சீரகத்தைப் பொரியவிட்டு, பிறகு தேங்காய், பொட்டுக் கடலையைக் கொட்டி வதக்கி, மிளகாயையும் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
காய்கறிகளை நீளமான துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும். சட்டியில் மீண்டும் எண்ணெய் காயவிட்டு, மிளகு போட்டு வெடிக்கவிட்டு, கறிவேப்பிலை போட்டு நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கி கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும். கடைசியாக முருங்கைக்காயையும் போட்டு வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். காய் வெந்ததும், அரைத்ததைக் கரைத்து ஊற்றி, இரண்டு கொதி வந்ததும், உப்பு சேர்த்து இறக்கவும்.
குறிப்பு
உப்பை முதலிலேயே போட்டுவிட்டால் கடுத்து விடும். குக்கரில் வைப்பதென்றால் காய்களை வதக்கிவிட்டு, அரைத்த மசாலாவை தேவையான தண்ணீரில் கரைத்து ஊற்றி, 2 விசில் வரும் வரை வைத்து எடுங்கள்.
இதே திரக்கலை, கேரட், பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பட்டர்பீன்ஸ் ஆகியவற்றை வதக்கியும் செய்யலாம். சப்பாத்தி, இட்லி, தோசைக்கு சரியான காம்பினேஷன் இது.
சும்மா குழம்பு (அல்லது) தண்ணீக் குழம்பு
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 15 (அ) பெரிய வெங்காயம் – 2
நாட்டுத் தக்காளி – 2
தண்ணியாகக் கரைத்த புளி
(ரசத்துக்குக் கரைப்பது போல) – ஒரு கப்
குழம்பு மிளகாய்தூள் – 11/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 5 பல்
தாளிக்க
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு, வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – இரு ஆர்க்கு
செய்முறை
வெங்காயம், தக்காளி சன்னமாக நீளமாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் சாமான்களைப் போட்டுத் தாளித்து, கறிவேப்பிலை போட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளிக்கரைசலை விட்டு, மிளகாய்தூள் போட்டு, உப்பு சேர்த்து மூடவும். புளி, மிளகாய்தூளின் பச்சை வாசனை போன பிறகு, பூண்டுப்பற்களைத் தட்டிப் போட்டு, பச்சையாகக் கொஞ்சம் கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைத்து, அடுப்பை அணைத்து விடவும். சில நிமிடங்கள் கழித்துத் திறந்தால் வாசம், சும்மா ஊரைத் தூக்கும். செட்டிநாட்டின் மிக எளிமையான குழம்பு இது.
குறிப்பு
இந்தக் குழம்பு தண்ணியாகத்தான் இருக்க வேண்டும். இட்லி, தோசைக்கு நல்ல ஜோடி என்றாலும், தாளித்த இட்லிக்கும், அரிசி உப்புமாவுக்கும் பிரமாதமான சுவை கொடுக்கும்.
டாங்கர்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் (உரித்துப் பொடியாக நறுக்கியது) – 2 கப்
வரமிளகாய் – 10
கெட்டியாகக் கரைத்த புளி – 1/4 கப்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1/4 கப்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – வாசனைக்கு
செய்முறை
வரமிளகாயை சிறு துண்டுகளாகக் கிள்ளி வைத்துக் கொள்ளவும். இருப்புச் சட்டியில் எண்ணெயை நன்கு காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டுத் தாளித்து, கறிவேப்பிலை போட்டுப் ‘படபட‘வெனப் பொரிய விடவும். பிறகு, தீயை ‘ஸிம்‘மில் வைத்து, வரமிளகாய் துண்டுகளைக் கொட்டிக் கிளறவும்.
மிளகாய் வறுபட்டு நல்ல வாசம் வரும் போது, வெங்காயத்தைக் கொட்டி நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், மிளகாய்தூளையும் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசலைச் சேர்த்து, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வற்றி, தொக்கு போல வரும் போது இறக்கி விடவும்.
செட்டிநாட்டுக் கல்யாணப் பந்தியில் தவறாமல் இடம்பெறும் அயிட்டம் இது. சூடான இட்லியும் டாங்கரும் இருந்தால் போதும். வேறு எதுவுமே தேவையில்லை என்பீர்கள்!
குறிப்பு
டாங்கர் கெட்டியாக இல்லாமல் தண்ணியாக இருந்தால், அரை டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவைக் கரைத்துச் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். விருப்பப்பட்டால், 10 பல் பூண்டை உரித்து, மெல்லிசாக வட்டவட்டமாக நறுக்கி, வெங்காயத்துடன் சேர்த்து வதக்கலாம். சுவை கூடும்.
ரோசாப்பூ துவையல்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 1 கப்
புது வரமிளகாய் – 10
புதுப் புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – 1 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு, உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய் – 1/4 கப்
செய்முறை
உரித்த வெங்காயம், மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் கெட்டியாக தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும். இருப்புச் சட்டியில் நல்லெண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு கருகாமல் பொரித்துத் துவையலில் சூட்டோடு கொட்டிக் கிளறிவிடவும்.
குறிப்பு
துவையல் ரோஜா நிறத்தில் வரும் என்பதால் இந்தப் பெயர். ஆனால், புது மிளகாய், புதுப் புளி உபயோகித்தால் தான் அந்த நிறம் வரும். இல்லையெனில் துவையல் நிறம் மாறிவிடும்.
காரம் குறைவாக சாப்பிடுபவர்கள், 2 மிளகாயைக் குறைத்து விடலாம்.
வரமிளகாய் துவையல்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 1 கப்
புது மிளகாய் – 10
நாட்டுத் தக்காளி – 3
உப்பு – 1 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு, உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய் – 1/4 கப்
செய்முறை
வெங்காயத்தை உரித்து, தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும். மிளகாயையும் கொட்டி வதக்கவும். (வெங்காயம் போட்டு வதக்கிய பின், மிளகாயைச் சேர்த்தால் தான் துவையல் நல்ல நிறமாக இருக்கும்). பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
ரோசாப்பூ துவையலுக்கு சொன்னது போலவே எண்ணெயில் பொரித்துக் கொட்டிக் கிளறி விடவும்.
வற்றல் மண்டி
தேவையான பொருட்கள்
மாவற்றல் – 1 கைப்பிடி
கத்தரி வற்றல் – 1 கைப்பிடி
அவரை வற்றல் – 1 கைப்பிடி
கொத்தவரை வற்றல் – 1 கைப்பிடி
தட்டைப்பயறு – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 7
புளி – சிறிய எலுமிச்சம்பழம் அளவு
உப்பு – தேவையான அளவு
கெட்டியான அரிசி கழுவிய தண்ணீர் – 11/2 கப்
தாளிக்க
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – இரு ஆர்க்கு
வரமிளகாய் – 4
செய்முறை
வற்றல்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிது நேரம் ஊறிய பிறகு குக்கர் அல்லது பாத்திரத்தில் வேகவைத்தெடுக்கவும். தட்டைப்பயறையும் வேக வைத்துக் கொள்ளவும். அரிசி கழுவிய நீரில் புளியை ஊற வைக்கவும். பச்சை மிளகாய் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் உரித்து வைக்கவும்.
ஒரு இருப்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வரமிளகாயைப் பிய்த்துப் போட்டு வதக்கவும். அதிலேயே வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேக வைத்து தண்ணீர் வடித்த வற்றல்களையும் தட்டைப்பயறையும் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின், புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். நன்கு கொதித்து வற்றி, வற்றல்களில் சார்ந்த பிறகு இறக்கவும். இட்லிக்குத் தொட்டுக் கொள்ள பிரமாதமாக இருக்கும்.
குறிப்பு
செட்டிநாட்டு வீடுகளில், மாங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் சீஸனில் நிறைய வாங்கி வற்றல்களைப் போட்டுக் காய வைத்து ‘ஸ்டாக்‘ வைத்துக் கொள்பவார்கள். கல்யாண வீடுகளில் இந்த வற்றல் மண்டி (அரிசி கழுவிய நீரைத் தான் ‘மண்டி‘ எனக் குறிப்பிடுவார்கள்) செய்தால், அன்றைய தினம், உறவினர்கள் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று குறிப்பாக உணர்த்துவதாகும்.
பச்சடி
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 1/4 கப்
கத்தரிக்காய் – 4
உருளைக்கிழங்கு – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 6
சின்ன வெங்காயம் – 10
புளி – ஒரு கோலிக்குண்டு அளவு
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் (விருப்பப்பட்டால்) – 1 சிட்டிகை
தாளிக்க
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
செய்முறை
பாசிப்பருப்பை வேகவைத்தெடுக்கவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கைப் பொடியாக நறுக்கவும். தக்காளி, சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
ஒரு இருப்புச் சட்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, பிறகு கத்தரிக்காயையும், உருளைக்கிழங்கையும், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போக வதங்கியதும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். இது நன்கு கொதித்து, பச்சை வாசனை போனதும் இறக்கவும்.
ஒரு வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயம் போட்டுப் பொரியவிடவும். பிறகு, வரமிளகாய் பிய்த்துப் போட்டு, கருகிவிடாமல், இறக்கி வைத்திருக்கும் பச்சடியைத் தூக்கி ஊற்ற வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்த சைட்-டிஷ் இது.
குறிப்பு
குக்கரில் வைப்பதென்றால், பாசிப்பருப்புடன் நறுக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து 2 விசிலுக்கு வைத்தெடுக்கவும். பிறகு, முன்பு சொன்னது போல புளி கரைத்து ஊற்றி, உப்புப் போட்டுக் கொதிக்க விட்டுத் தாளிக்கவும்.
கோஸ்மல்லி
தேவையான பொருட்கள்
விதையுள்ள குண்டு கத்தரிக்காய் – 5
உருளைக்கிழங்கு – 1
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 6
புளி – ஒரு நெல்லிக்காயளவு
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
செய்முறை
கத்தரிக்காய்களை காம்பை மட்டும் நுனியில் நறுக்கி விட்டு, இரண்டாக வகுந்து குக்கரில் போடவும். அதோடு உருளைக்கிழங்கையும் போட்டு, 2 விசிலுக்கு வேக விடவும். புளியை உப்புச் சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். காய் வெந்ததும் குக்கரை இறக்கி, ஆறியதும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு துண்டுகளின் தோலை நீக்கவும். பிறகு இரண்டையும் கையால் நன்கு பிசைந்து விட்டு, புளித்தண்ணீரில் போட்டுக் கலக்கவும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வரமிளகாய் பிய்த்துப் போட்டு வறுத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, கரைத்து வைத்திருக்கும் கோஸ்மல்லியைத் தூக்கி ஊற்றி, நன்கு பச்சை வாசனை போகக் கொதித்ததும் இறக்கவும்.
உணவு நலம் ஜுலை 2010
வெங்காயக் கோஸ், செய்முறை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு,
சின்ன, வெங்காயக் கோஸ், செய்முறை, வெங்காயம், தக்காளி, எண்ணெய்,
திரக்கல், செய்முறை, கசகசா, சோம்பு, சீரகம், தேங்காய்,
சும்மா குழம்பு, தண்ணீக் குழம்பு, செய்முறை, வெங்காயம், தக்காளி புளி,
டாங்கர், செய்முறை, வரமிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு,
ரோசாப்பூ, துவையல், செய்முறை, வெங்காயம், மிளகாய், உளுத்தம்பருப்பு,
வரமிளகாய், துவையல், செய்முறை, வெங்காயம், தக்காளி, மிளகாய்,
வற்றல், மண்டி, செய்முறை, தட்டைப்பயறு, புளி, பச்சை மிளகாய்,
பச்சடி, செய்முறை, பாசிப்பருப்பு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய்,
கோஸ்மல்லி, செய்முறை, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம்,