ஆங்கிலமொழியும், கிராமப்புற மாணவர்களும்

Spread the love

இந்தியா சுதந்தரம் அடைந்தபின் ஆங்கிலம் எதற்குயென்று பலர் வாதாடினர். ஆங்கில மோகம் பிடித்து மக்கள் அலைகின்றனர்யென்று குற்றம் சாட்டப்பட்டது. 1967 க்குப் பின் வட இந்தியாவில் பல மாநில அரசுகள் இந்திவெறி கொண்டு ஆங்கிலமொழியின் முக்யத்துவத்தை குறைத்தன. பட்டப் படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்கலாம். பட்டப் படிப்புத் தேர்வில் வெற்றிபெற ‘பாஸ்மார்க்’ தேவையில்லையென்றன. தென்னிந்தியா இந்த மொழி வெறிக்கு ஆளாகவில்லை. அதனால், ஏற்பட்ட விளைவுகள்யென்ன? சென்னை, ஹைதராபாத், பங்களுரூ போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிந்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். வட மாநிலத்தவர் தென்புலன்களுக்கு வேலை தேடி வர வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. காரணம் ஆங்கிலத்திலுள்ள புலமைதான். ஏன் ஆங்கில மொழியை கற்க வேண்டுமென கேள்வியை நாம் எழுப்பலாம். உலக முழுவதும் ஆங்கிலம் தான் பரவலாக பேசப்படுகின்றது. உலகமயமாதல் அதாவது குளோபலைசேஷன்யென்று எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டவுடன் தொழில் செறிவு, வியாபாரப் பெருக்கம், இடம் பெயர்தல், நாடுவிட்டு நாடு செல்லுதல், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி போன்ற காரணங்கள் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்திவிட்டன.

இதன்பயன் யாரைச் சேர்ந்தடைந்துள்ளதுயென்று நாம் ஆராய்ந்து பார்த்தால், பெரு நகரத்தில் படித்த மாணவர்கள் மட்டும் தான் நன்கு பலன் பெற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்கள் படித்துப் பட்டம் பெற்றாலும், தகுந்த வேலையில் அமர முடியாத சூழ்நிலை. காரணம் அவர்கள் ஆங்கிலத்தில் அதிகம் புலமை பெறவில்லை. அதைப் பெற முயற்சிக்கவுமில்லை. அவர்கள் ஆங்கிலத்தைக் கற்க வேண்டிய அவசியத்தை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இன்று தொழில் வளர்ச்சியில், தொழில் நுட்பத்தில் எந்த நாடு சிறந்து விளங்குகிறதோ அந்த நாடு தான் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். இந்த வளர்ச்சி எவ்வாறு சாத்தியப்படும். ஆங்கில அறிவு இருந்தால்தான் முடியும். மருத்துவம், இன்ஜினியரிங், கல்வி, ஆகிய முக்கியமான துறைகளில் ஆங்கிலம் முக்கிய அங்கம் வகிக்கிறது. வளரும் நாடுகளில் இவை வளர்ச்சியடைய ஆங்கிலம் தேவை. இந்தத் துறைகளில் நன்கு பயின்று அறிவைப் பெருக்க ஆங்கிலப் புலமை மிகவும் அவசியமானது. படிப்பு முடித்ததும் நல்ல வேலையில், வருமானம் ஈட்டக் கூடிய தொழிலில் அமர வேண்டுமா? அதற்கும் ஆங்கில அறிவு தேவை. உலகம் மிகவும் குறுகிவிட்டது. இன்டர்நெட், சாடிலைட் தொடர்புகளென்று மக்கள் ஒருவரோடு ஒருவர் பேச, தொடர்பு கொள்வது எளிதாகிவிட்டது. மாணவர்கள், பணிபுரிபவர்கள் யாவரும் இச் சாதனங்களையும் பயன்படுத்தும்பொழுது ஆங்கிலத்தில் பேச, எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏதாவது வெப் சைட் சென்று விஞ்ஞான ரீதியான தகவல்களைப் பெற ஆங்கிலம் தெரிந்தால் தான் முடியும். வியாபாரிகள் பன்னாட்டு தொடர்பு கொள்ள ஆங்கிலத்தில் பேச வேண்டும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, வியாபாரத்தைப் பெருக்க நன்றாக ஆங்கிலத்தில் பேசத் திறமை வேண்டும். ‘டேடா’ பரிமாற்றம் செய்ய ஆங்கிலம் தேவை.

ஆங்கிலம் நுழையாதயிடமேயில்லையெனலாம். ஆங்கிலம் ஆங்கிலேயர்களுக்கான மொழியென்று இருந்த காலம் போய் உலக மொழி, அனைவருக்குமான மொழியென்று மாறிவிட்டது. இத்தகைய உலகத் தரம் வாய்ந்த மொழியைக் கற்று, பேச, எழுத திறமை குறைந்தவர்களாக கிராமப்புற இளைஞர்கள் இருக்கக் காரணமென்ன?

பெரும்பாலான பெற்றோர்கள் அதிகம் படிப்பறிவுயில்லாதவர்களாகவோ,படிப்பேயில்லாதவர்களாகவோ இருக்கின்றனர். எனவே அவர்களின் குழந்தைகள் தமிழ்க் கல்வி பயிலுவதே கஷ்டம், ஆங்கிலத்தில் புலமை பெறுவது அரிதானது. இரண்டாவது, கிராமப்புறப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள், ஆங்கிலத்தில் திறமையற்றவர்களாக உள்ளனர். அவர்கள் தங்களின் தொழிலில் அக்கறை, ஆர்வம் கொள்ளாமல் பணியாற்றுகின்றனர். ஆங்கில அறிவை மேம்படுத்தவும் ஆசையற்றவர்களாக உள்ளனர். எனவே அவர்களின் மாணாக்கர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது கடினம் தான்.

கிராமப்புறத்தில் நல்ல நூலகங்கள் இருப்பதில்லை. பள்ளிகளிலும் தரமான நூலகங்கள் கிடையாது. ஆங்கிலப் புத்தகங்களை அதிக அளவில் தருவித்து வளரும் குழந்தைகளைப் படிக்கச் செய்ய முடியாத சூழ்நிலை.

தமிழ் செய்தித் தாள்கள் தான் கிராமப்புறத்தில் அதிகம் படிக்கப்படுகின்றன. மாணவர்கள் ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படித்தால்தான் ஆங்கில அறிவு வளரும். டெலிவிஷனில் ஆங்கிலம் சார்ந்த நிகழ்ச்சிகள் நிறைய ஒளிப்பரப்பப்பட்டு வளரும் குழந்தைகள் பார்க்க வேண்டும். அதற்கான வழிகள் கிராமப்புறத்தைச் சென்றடையும் தொலைக்காட்சிகளில் இடம் பெறவில்லை.

ஒருவரோடு ஒருவர் ஆங்கிலத்தில் உரையாடி பேசும் திறமையை வளர்த்துக் கொள்ள நகரங்களில்தான் முடியும். கிராமப்புறங்களில் வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆங்கில மொழிப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கிராமப்புறத்தில் திரையிடப்படுகின்றன. அதனால் நேரடி ஆங்கிலப் படங்களைக் கூட பார்க்க முடியாத நிலை நிலவுகிறது.

“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” & பாரதி பாடினார். இன்று நாம் உணவு பெற உழைக்க வேண்டும். உழைத்து உன்னத நிலையடைய ஆங்கிலம் தேவை. ஜகமே ஆங்கிலத்தில்தான் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. எனவே கிராமப்புற மக்கள் ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகள் யாவை?

மதம், இனம், நேசம் பாராட்டாமல் தகுதிபெற்ற, ஆங்கிலத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

ரேடியோ, தொலைக் காட்சிகளில் வரக்கூடிய ஆங்கில நிகழ்ச்சிகளை, ஆங்கிலச் செய்தி அறிக்கைகளைப் பார்த்து கேட்க வேண்டும்.

எளிய நடையில் எழுதப்பட்ட ஆங்கிலக் கதைப் புத்தகங்கள், அறிவு நூல்கள் பள்ளி நூலகங்களில் வரவழைக்கப்பெற்று மாணவர்களை அவற்றைப் படித்து, படித்துப்புரிந்துகொண்டதை ஆங்கிலத்தில் ஒரு பக்கம் எழுதிக் காட்டச் சொல்ல வேண்டும்.

ஆங்கில வகுப்புகளில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். “கற்றலின் கேட்டலே நன்று” யென்ற பழமொழி இதற்குச் சான்று.

ஆங்கிலக் கல்வி எவ்வாறு அவசியமானதென்று குழந்தைகளுக்கு நன்கு எடுத்துக் கூற வேண்டும். ஆங்கிலம் ஒரு சாளரம், அதன் வழியாக வெளி உலகைப் பார்க்க முடியுமென்ற உணர்வை எல்லாரிடமும் தோற்றுவிக்க வேண்டும்.

ஆங்கிலம் தேவை, அதற்காக தாய்மொழியை புறக்கணிக்கக் கூடாது. புறக்கணித்தால் நம் பண்பாடு அழிந்துவிடும். ஆங்கிலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், இதுவே நம்மை கூர் பார்த்துவிடும்.


Spread the love
error: Content is protected !!