வானவில் வண்ண தாவிர உணவுகள்

Spread the love

எல்லாவித வைத்தியர்களும், உணவு நிபுணர்களும் கொடுக்கும் அறிவுரை – உணவில் அதிக காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது. ஒரு நாளுக்கு 5 தடவை இவைகளை உண்ணுவது நல்லது. எல்லோரும் காய்கறிகளையும், பழங்களையும் வாங்கும் பணவசதி உடையவர்களாக இருப்பதில்லை. ஆனால் பெருகி வரும் டயாபடீஸ், இதய நோய்கள், கொலஸ்ட்ரால் பாதிப்புகள், உயர் இரத்த அழுத்தம் இவை வராமல் தடுக்க வேண்டுமானால் காய்கறி, பழங்களை உண்பது அவசியம். அதுவும் வானவில்லின் வண்ணங்களுடையவற்றை உண்பது மேலும் நல்லது.

அமெரிக்காவில் 1992ம் ஆண்டு, சத்துணவு நிபுணர் டாக்டர் கேப்ரியல் கஸின்ஸ் என்பவரால் “வானவில் உணவுத்திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வானவில் உணவுத்திட்டத்தில் எல்லாவித நிறங்களிலும் உள்ள பழங்களும், காய்கறிகளும் உண்டு.

உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் சக்தியுடன் வாழவும் இந்த உணவுத்திட்டம் உதவும். இதன் மூலம் 1000 லிருந்து 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமைத்துடிப்போடு வாழலாம். வண்ண உணவு திட்டம் எளிமையாக, சுலபமாக, நாம் பல வண்ண உணவுகளை தேர்ந்தெடுத்து, உண்பதற்கும், அதனால் அதிகபட்ச ஊட்டச்சத்துகளை அடைவதற்கும் உதவுகிறது. ஒரு காய்கறியின் (அ) பழத்தின் வண்ணத்தைப் பார்த்தே அதில் உள்ள விட்டமின்கள், தாதுப்பொருட்கள் முதலியவற்றை ஓரளவு நமக்கு உடனே புரிபடும். பல நிற காய்கறிகளையும், பழங்களையும் உண்பதால் நம் உடலுக்கு தேவையான சத்துகளை அடைவது நிச்சயம்.

காலையில் சிவப்பு நிற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தக்காளி, சிவப்பு முள்ளங்கி, சிவப்பு குடமிளகாய், இவற்றில் Lycopene, Ellagic acid, Quercetin மற்றும் Hesperidin உள்ளன. இந்த பொருட்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. ப்ரோஸ்டேட் புற்று நோய், கொலஸ்ட்ரால் பாதிப்பு, free radicals – இவற்றை தவிர்க்கின்றன. ஏனைய சிவப்பு உணவுகளான கேரட், பப்பாளி, இதர ஆரஞ்ச், மஞ்சள் வர்ண காய்கறிகள் மற்றும் பழங்களில் பீடா காரோடோன், Zea Xanthin, flavonoids, லிகோமீன், பொட்டாசியம் மற்றும் விட்டமின் ‘C ‘ உள்ளன. இவை வயதானால் வரும் அவயச் சிதைவுகள், ப்ராஸ்டேட் கான்சர், உயர் ரத்த அழுத்தம். கொலஸ்ட்ரால் முதலியவற்றை குறைத்து, மூட்டுக்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. எலும்புகள் பலமடைகின்றன.

காலையில் சிவப்பு நிற தக்காளி (அ) ஆரஞ்சு ஜுஸ், (1 கப்) மலச்சிக்கலை போக்கும். இல்லாவிட்டால் ஆப்பிள், வாழைப்பழம், அன்னாசி பழங்களில் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.

மதியம் ‘பச்சை’ நிற உணவுகள் சிறந்தவை. பச்சை என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது பச்சைப்பசேல் என்ற கீரைகள் தான். பலவித கீரைகள் அதிக விலையின்றி தாராளமாக கிடைக்கின்றன. இவற்றிலிருந்து கால்சியம், அயச்சத்து, விட்டமின் ‘C ‘ , பீடா காரோடீன், ரிபோஃப்ளாவின் மற்றும் ஃபோலிக் அமிலம் முதலியன கிடைக்கின்றன. எனவே தினசரி 50 கிராமாவது கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வது. ஆரோக்கியத்திற்கு அவசியம்.

கீரைகள் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றவை. இதர “பச்சை” காய்கறிகளான முட்டைக்கோஸ், வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, புடலை முதலிய பல நன்மைகளை தருகின்றன. குளோரேஃபில் (பச்சயம்), நார்ச்சத்து, லுடின் (lutein), கால்சியம், விட்டமின் ‘ C ‘, பீடாகாரோடின் இவை உள்ள கீரைகள் மற்றும் பச்சைகாய்கறிகள் மதிய உணவில் இடம் பெற வேண்டும். இவற்றை தவறாமல் உண்பதால் புற்று நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு – இவை ஏற்படுவதை தவிர்க்கலாம். உடலின் நோய் தடுக்கும் திறன் அதிகமாகும். இவற்றில் உள்ள தாதுப் பொருட்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும். இதயம், பிட்யூடரி சுரப்பி முதலியன சீராக செயல்படும். காய்கறிகள் ஜீரண சக்தியை தூண்டி விடுகின்றன. கண்களை காக்கின்றன.

இரவில் நீல நிற (அ) கருஞ்சிவப்பு உணவை உட்கொள்ளுங்கள். வெள்ளை நிற உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். பழங்களில் மாதுளம், போன்றவை, காய்கறிகளில் கத்திரிக்காய், மற்றும், இட்லி, பால், தயிர் போன்ற வெள்ளை உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவுகள் மேற்சொன்ன சத்துக்களுடன், உங்களை அமைதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். தூங்க வைக்க வேண்டும். எனவே நீல நிற / வெள்ளை நிற உணவுகள் இரவில் சிறந்தவை.

கூடிய மட்டும் காய்கறிகளை சமைக்கும் போது, நீராவியில் வேக வைக்கவும். இதனால் சத்துக்களின் இழப்பு குறைவாகிறது.

வானவில் உணவுத்திட்டம் உங்களை, சத்துக்குறைவில்லாமல் இளைக்க வைக்கும். முயன்று பாருங்களேன்!


Spread the love