கலர்ஃபுல் விஷங்கள் ‘வாங்குபவனே விழித்திரு’

Spread the love

வர்ணம் சேர்க்கப்பட்ட சில உணவு வகைகள் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் சாப்பிடத் தூண்டுவதாக இருந்தாலும், அவை பல விதமான நஞ்சு வர்ணங்கள் சேர்க்கப்பட்டவையாக இருக்கின்றன. இதனால் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும்.

பொதுவாக விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் 40 உதாரணங்களில் ஆபத்தை விளைவிக்கும் நஞ்சு வர்ணங்கள் உள்ளதா இல்லையா என்பது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் 40 உதாரணங்களுமே உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் நஞ்சுள்ள வர்ணம் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த அனைத்து உணவு வகைகளிலும் தடை செய்யப்பட்ட ரோடாமின் பி யைச் சேர்த்து, மொத்தம் 7 விதமான வர்ணங்கள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ரோடாமின் பி யைத் தவிர்த்து, கார்மோய்சின், பிரில்லியன்ட் ப்லூ, தார்த்ராசைன், சன்செட், யெல்லோவ், போன்கியாவ், 4 ஆர் மற்றும் எரிஸ்த்ரோசின் போன்ற நஞ்சு வர்ணங்களும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார்மோய்சின் மற்றும் போன்கியாவ் 4 ஆர் போன்ற நஞ்சு வர்ணங்கள் புற்றுநோயை வரவழைப்பதாகும். இந்த வர்ணங்கள் கனடாவிலும், அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

பிரில்லியன்ட் ப்லூ, தார்த்ராசைன், சன்செட் யெல்லோவ் மற்றும் எரிஸ்த்ரோசின் கூட புற்றுநோயை வரவழைக்கும் இராசயன வகைகளாகும். அமெரிக்காவில் உணவு வகைகளில் தார்த்ராசைன் உபயோகிக்கப்பட்டிருக்குமானால் அவை லேபலில் குறிப்பிட்டிருக்கப்பட வேண்டும். பிரில்லியன்ட் ப்லூ, சன்செட் யெல்லோவ், எரிஸ்த்ரோசின் போன்ற வர்ணங்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டவையாகும். இருப்பினும் இந்த 6 வகை வர்ணங்களும் நம் நாட்டுச் சட்டத்தால் உபயோகத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

சோதனையின் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளது.

தார்த்ராசைன்:

ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும் இந்த இராசயனம் பலருக்கு அலர்ஜியைக் கொடுக்கக் கூடியது. இது சோதனை செய்யப்பட்ட 28 உணவு வகைகளில் காணப்பட்டுள்ளது. இவைகளில் பலகாரங்கள் (பஜ்ஜி, காராசேவு சேமியா சாச்சா, காய்ந்த மிளகாய்) மாங்காய் மற்றும் இஞ்சி ஊறுகாய், மிட்டாய் வகைகள், தேங்காய்ப்பால் ஆக்கரக்கா, பிரியாணி, சாகோ பார்லி (நோன்பு திறப்பதற்கு உபயோகிக்கப்படும் பானம்) போன்றவை ஆகும்.

சன்செட் யெல்லோவ்

சோதனை செய்யப்பட்ட 17 உணவு வகைகளில் இவ்வர்ணம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வுணவு வகைகள் வருமாறு: கேசரி, ஜிலேபி (2 விதமான இந்திய உணவு வகைகள்), ஐஸ் கிரீம் மலேசியா(பழ ஊறுகாய்கள், பிரியாணி மற்றும் சாகோ பார்லி).

பிரில்லியன்ட் ப்லூ

குழந்தைகளின் மிதமிஞ்சிய சுறுசுறுப்புக்கு இந்த வர்ணம் காரணமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இவ்வர்ணம் க்ரோமோசோம் பாதிப்பையும், அலர்ஜியையும் ஏற்படுத்தும். இந்த வர்ணம் சோதனை செய்யப்பட்ட 16 உணவு வகைகளில் காணப்பட்டுள்ளது. அவைகளில் கோய், கெதாயாப், கொய் செரி ஆயு. புபோர் சாச்சா மற்றும் பிரியாணியும் அடங்கும்.

கார்மோசின்

உணவுகளுக்கு சிவப்பு வர்ணத்தை கொடுக்கும் இந்த இராசயனம் அலர்ஜியையும், மற்றும் உணவுக்கு நஞ்சுத்தன்மையையும் உண்டாக்கும். எங்கள் சோதனையின் மூலம், 14 உணவு வகைகளில் இவ்வர்ணம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவைகளில் ஊடான் மற்றும் கோழி சாப் உள்ள ரோஸ் பான வகைகள், புபோர், சாச்சா, தேங்காய் கேன்டி, ஜிலேபி, லட்டு மற்றும் கோய் பிரிங் போன்றவைகளும் அடங்கும்.

போன்சியாவ் 4 ஆர்

புற்றுநோயை வரவழைப்பதோடல்லாமல், இவ்வர்ணம் அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் உடம்பு திசுக்கள் வீங்கிப் போதல் போன்ற உபாதைகளையும் உண்டாக்கும். சோதனை செய்யப்பட்ட 11 உணவு வகைகளில் இவ்வர்ணம் காணப்பட்டுள்ளது. இவ்வுணவு வகைகளில் சாப் ஆயாம் ஆரஞ்சு பானம், ஊடான் கிரேக்கர், பழ ஊறுகாய்கள் வகைகள் மற்றும் சாக்லெட்டுகளும் அடங்கும்.

எரிஸ்த்ரோசின்:

சிவப்பு எண். 3 என்றழைக்கப்படும் இவ்வர்ணம் பிராணிகளின் மேல் சோதனை செய்யப்பட்ட பொழுது தைரோய்ட் தியுமரை வரவழைப்பதாக அறியப்பட்டுள்ளது. இது கோய், இனிப்பு தோசை (அப்பம்) மற்றும் பீச் ஊறுகாயிலும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மிகமோசமான உதாரணங்கள்:

மேற்கொள்ளப்பட்ட 40 உணவுச் சோதனைகளில், 19 (சுமார் 47%) உதாரணங்களில் இரண்டு அல்லது அதற்கும் மேலான இரசாயன வர்ணங்கள் அடங்கியிருக்கின்றன.

இதில் மிக மோசமானது புபோர் சாச்சா உதாரணமாகும். ஒரு புபோர் சாச்சாவில் 5 விதமான வர்ணங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சாக்லெட் வகைகளில் 4 விதமான வர்ணங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பிரியாணியில் 3 விதமான வர்ணங்கள் இருப்பதாக சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உணவு பொருட்களில் கண்டறியப்பட்ட 6 வர்ணங்களும் (ரோடாமின் பி யைச் சேர்க்காமல்) பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வர்ணங்களை உபயோகிக்க நம் நாட்டில் இன்னும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனை விட மோசமான நிலைமை என்ன வென்றால் இவ்வர்ணங்கள் உபயோகிக்கப்படும் அளவுகள் நிர்ணயிக்கப்படவில்லை. அதனால் உணவு உற்பத்தியாளர்கள் எவ்வளவு வர்ணம் வேண்டுமானாலும் உபயோகிக்கும் சுதந்திரம் பெற்றுள்ளனர். இவ்வர்ணங்கள் இயற்கை வர்ணங்களை விட விலை குறைவாக உள்ளதால் எவ்வளவு வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்கின்றனர்.

1994 ல் மேற்கொண்ட சோதனையில் மீ ரெபுசில் போன்கியாவ் 4 ஆரும் சன்செட் யெல்லோவும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

1993ல் செய்த சோதனையில், தேயிலை தயாரித்த மீதக் கலவை, மிளகாய் மற்றும் மஞ்சள் துகள்களில் தடைசெய்யப்பட்ட வர்ணங்கள் அடங்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1986ல் நடத்தப்பட்ட சோதனையில் தார்த்ராசைன் மற்றும் சன்செட் யெல்லோவ் வர்ணங்கள் ஆரஞ்சு ஜுஸ் மற்றும் இதர பான வகைகளில் இருப்பதாக கண்டறியப்பட்டது.

1983ல் நடத்தப்பட்ட சோதனையில் 17 பான வகைகளில் இவ்வர்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான காயவைக்கப்பட்ட உணவு வகைகளான உப்பு, மீன், வகைகள், காய்ந்த ஊடான் போன்றவற்றிலும் வர்ணம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராசாயன வர்ணங்கள் ஆபத்தை விளைவிப்பதோடல்லாமல் அவைகளில் சத்துகளும் இல்லாததால் அவை உடலுக்கு தேவையற்ற ஒன்றாகும். எனவே உணவுச் சட்டம் 1985ஐ முழுமையாக அமல் படுத்த வேண்டும்.

தடை செய்யப்பட்ட வர்ணங்கள் உபயோகிக்கும் உற்பத்தியாளர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு உற்பத்தியாளர்கள் இவ்வாறான வர்ணங்களை உபயோகிக்காமல் தடுக்கும் பொருட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லாவிதமான உணவு வகைகளிலும் நாளுக்கு நாள் முறையான சோதனைகள் செய்ய வேண்டும். இதன் மூலம் வர்ணங்கள் மற்றும் நஞ்சு, இரசாயனங்கள் உள்ளனவா என்பதை கண்டறிய முடியும்.

‘வாங்குபவனே விழித்திரு’ என்பார்கள். நுகர்வோராகிய நாம் வர்ணம் சேர்க்கப்பட்டுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைக்கப்படும் உணவுகளில் செயற்கை வர்ணத்திற்குப் பதிலாக இயற்கையான வர்ணங்களை பயன்படுத்த வேண்டும்.


Spread the love