வாசனை திரவியங்களில் முக்கியமானது கிராம்பு. இதன் நறுமணம் வீரியமானது. சிறிதளவு உபயோகித்தாலே போதும். உணவின் வாசனை தூக்கலாக இருக்கும். அதுவும் பிரியாணிகளின் பிரத்யேக நறுமணம் கிராம்பு சேர்ப்பதால் தான்.
உண்மையில் கிராம்பு ஒரு மலராத பூவின் மொட்டு. கிராம்பின் சமஸ்க்ருதப் பெயர்- லவங்கா, இந்தியில்- லவங்க்,
இதர கிராம்பின் தன்மைகள்
கார சாரமான சுவை, நறுமணம் பாக்டீரியா, வைரஸ் முதலிய நுண்ணுயிர்களை அழிக்கும்.
தாவிர விவரங்கள்
கிராம்பின் தாயகம் பிலிப்பைன்ஸின் மொலூக்கா தீவுகள் மற்றும் இந்தோனேஷியா. தென்னிந்தியாவில் விளைகிறது. கிராம்பு மரம், பச்சை வண்ண, பெரிய இலைகளுடன் கூடியது. 40 அடி உயரம் வளரும். இலைகளை சிறிது கீறினால் போதும், வாசனை தூக்கும்! கிராம்பு மரப்பட்டை பழுப்பு நிறமாக இருக்கும். மழைக்கால ஆரம்பத்தில் நீண்ட, பச்சை நிற மொட்டுக்கள் தோன்றுகின்றன. தனி (அ) கூட்டு இதழ்கள் உள்ள மகுடம் (கரோலா) அழகான ‘பீச்‘ வண்ணத்தில் தோன்றி மறையும் போது ‘புல்லி வட்டம்‘ (காம்பு போன்ற) மஞ்சள் நிறமாகி பிறகு சிவப்பு நிறமாகிறது. இவை கரு விதைகளுடன் கூடியவை. இவை பாதிக்கப்பட்டு உலர வைக்கப்பட்டு ‘கிராம்பு‘ களாகின்றன. ஓரு சதைக்கனியில் ஒரு விதை தான் இருக்கும்.
கிராம்பு மரம், விதைகள் நடப்பட்டு உருவாகின்றன. நட்ட 8 (அ) 9 வருடங்களில் பலன் தரும். 60 வருடம் இருக்கும். மரம் முழுவதும் வாசனை உடையது. முதலில் ஐரோப்பாவில் 4 லிருந்து 6 ஆம் நூற்றாண்டில் கிராம்பு பயிரிடுவது அறிமுகப்படுத்தப்பட்டது. டச்சு தேசத்தவர்கள் தான் கிராம்பு ஏற்றுமதி வியாபாரத்தை ஆக்ரமித்து கொண்டிருந்தனர். 18 ஆம் நூற்றாண்டில் இதர உஷ்ண பிரதேசங்களுக்கு கிராம்புப் பயிரிடுவது பரவியது. 19 ஆம் நூற்றாண்டில் ஜான்சிபார் முக்கிய கிராம்பு பயிரிடும் தேசமாக இருந்து அதற்கு அடுத்தபடி மடகாஸ்கர் கிராம்பு மரம் ஈரப்பசையை உறிஞ்சும் தன்மையுடையது. நீர் நிலைகளின் அருகாமையில் இருந்தால் மரத்தின் எடை ஏறிவிடும்! இதை சில மோசடி வியாபாரிகள் பயன்படுத்தி கிராம்பு தண்டுகளை கிராம்பு என்று ஏமாற்றி விற்று வந்தனர்.
100 கிராம் உலர்ந்த கிராம்பில் உள்ளவை
ஈரப்பசை-25.2 கி, புரம்-2 கி, கொழுப்பு-8.9 கி, நார்ச்சத்து-9.5 கி, கார்போஹைடிரேட்-46 கி, கால்சியம்-240 மி.கி., பாஸ்பரஸ்-100 மி.கி., அயச்சத்து-11.7 மி.கி., மக்னீசியம்-130 மி.கி., செம்பு-1.01 மி.கி., மங்கனீஸ்-4.75 மி.கி., துத்தநாகம்-1.47 மி.கி., குரோமியம்-0.056 மி.கி., பீடாகரோடின்-253 மைக்ரோ கிராம், தியாமைன் (விட்டமின் பி1)-0.08 மி.கி., ரிபோஃபிளாவின் (பி12)-0.13 மி.கி., கிராம்பு இந்தியாவிலும், சீனாவிலும் தொன்று தொட்டு உபயோகப்பட்டு வந்தது.
கிராம்பின் காரத்திற்கும், நறுமணத்திற்கும் காரணம் அதில் உள்ள “யூஜீனால்” என்ற வேதிப்பொருள் நிறைந்த எண்ணெய் தான். நல்ல தரமான கிராம்பை நகத்தால் நசுக்கினாலே எண்ண இருப்பது புலப்படும்.
கிராம்பின் மருத்துவ குணங்கள்
வயிற்றின் வாயுக் கோளாறுகளை கண்டிப்பதில் கிராம்புக்கு இணையான வாசனை திரவியம் இல்லை. பிரட்டல், வாந்தி, வாய்வுக்கோளாறு இவற்றுக்கு சிறந்த மருந்து. வயிற்றில் அதிக அமிலம் சுரப்பால் அவதிப்படுபவர்கள், உணவுக்கு பின் ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால், அமிலச் சுரப்பு குறையும்.
கிராம்பின் முக்கிய பயன் பல் வலிக்கு நிவாரணம் அளிப்பதென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இரண்டு கிராம்புகளை வாயிலிட்டு மென்றால் அதன் காரமான சாறு பாதிக்கப்பட்ட பற்களுக்கு பரவி தீய பாக்டீரியாக்களை அழிக்கும். கிராம்பு தைலத்தை, பஞ்சில் தோய்த்து வலிக்கும் சொத்தையான பற்குழிகளில் அழுத்தி வைத்தால் உடனே வலி குறையும். பல பற்பசைகளில், வாயை, பற்களை சுத்தீகரிக்கும் மருந்துகள் கிராம்பு தைலம் சேர்க்கப்படுகிறது.
வாய் துர்நாற்றத்தை போக்கவும் கிராம்பு பயன்படும்.
கிராம்பு ஒரு ஆன்டி – செப்டிக் கிருமிகளை அழிக்க வல்லது. சிறிய புண்கள், காயங்கள், பூச்சிகடிகளுக்கு நீர்த்த கிராம்பு தைலம் மருந்தாகும். கிராம்பு தைலம் வீரியம் மிகுந்தது. எனவே அதை தண்ணீர் சேர்த்து நீர்த்து உபயோகிக்க வேண்டும்.
தலைவலிக்கு கிராம்பு தைலத்துடன் உப்பு சேர்த்து நெற்றியில் தடவலாம். நான்கு கிராம்புகளை பாலில் அரைத்து விழுதை நெற்றியில் தடவலாம்.
வயிற்று வலியுடன் கூடிய பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு, கிராம்பை பொடித்து கால் தேக்கரண்டி அளவில் எடுத்து அதே அளவு பனைவெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் வரும் நாட்களில் காலை மாலை இரு வேளைகளில் கொடுத்து வர, உதிரப்போக்கு இயல்பாகும்.
கண் இமைகளில் ஏற்படும் கட்டிகளுக்கு கிராம்பு கண்கண்ட மருந்து. கிராம்பு தைலமும் கண் இமைக்கட்டிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இதர பயன்கள்
அழகு சாதன கிரீம்கள், லோஷன்களின் கிராம்பு தைலம் சேர்க்கப்படுகிறது.
உணவுப் பொருட்களில், குறிப்பாக ஊறுகாய்கள், சாஸ், கேக்குகளில் கிராம்பு சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
சோப்புகளில் பயனாகிறது.
சென்டுகளில் சேர்க்கப்படுகிறது.
எச்சரிக்கை
கிராம்பு வீரியமான வாசனை திரவியம். அதை அளவோடு பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள் கிராம்பை தவிர்க்க வேண்டும்.
கிராம்பு சூப்
தேவை
கிராம்பு-4
உருளைக்கிழங்கு-1/4 கிலோ
வெண்ணெய்-1 டே.ஸ்பூன்
வெங்காயம்-1
தண்ணீர்-1 லிட்டர்
பால்-1/2 கப்
உப்பு, மிளகுத்தூள்-தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கு, வெங்காயம், கிராம்பு ஆகியவற்றை வெண்ணெய்யில் வதக்கிக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். கிராம்பை நீக்கிவிட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அதோடு பால், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்துக் கொள்ளவும். கடைசியாக வேக வைத்த கிராம்பை போட்டு பரிமாறவும்.
உணவு நலம் ஜனவரி 2011
கிராம்பு, வாசனை திரவியம், உணவு, லவங்கா, லவங்க், கிராம்பின், தன்மைகள், நறுமணம், பாக்டீரியா, வைரஸ், தாவிர, விவரங்கள், ஜான்சிபார், 100 கிராம், உலர்ந்த, கிராம்பு, ஈரப்பசை, புரதம், கொழுப்பு, யூஜீனால், கிராம்பின், மருத்துவ, குணங்கள், வாயுக்கோளாறுகள், மருந்து, பல் வலி, வாய் துர்நாற்றம், ஆன்டி செப்டிக், புண்கள், காயங்கள், பூச்சிகடிகள், தலைவலி, வயிற்று வலி, மாதவிடாய் கோளாறுகள், உதிரப்போக்கு, அழகு சாதன கிரீம்கள், லோஷன்கள், எச்சரிக்கை,
கர்ப்பிணிகள், தவிர்க்கவும், கிராம்பு, சூப், செய்முறை, வெங்காயம், உருளைக் கிழங்கு, பால், உப்பு, மிளகுத்தூள்,