கிளீன் அண்டு கிளியர் சருமம்…

Spread the love

பாதுகாக்க ஈஸி டிப்ஸ்!

முகம் பொலிவை இழப்பதற்கு புகை, தூசு, வெயில், வியர்வை… என எத்தனையோ காரணங்கள் உள்ளன. இவை பொலிவை மட்டும் கெடுப்பது இல்லை… சருமப் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. வீட்டிலேயே எளிமையான இயற்கை வழிகள் மூலமாக அழகைப் பாதுகாக்க முடியும். அதற்கான சில டிப்ஸ்…

கண் கருவளையத்தைப் போக்க, ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை மிதமான வெந்நீரில் நனைத்து, கண்களின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து, கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்தால், சுருக்கம், கறுப்பு வளையங்கள் படிப்படியாக நீங்கும்.

முகத்தில் பூசும் ஃபேஸ் பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக, தனியாகத் தெரியாது.

வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம்சூடு பதத்துக்கு ஆறியதும், அதை தலையில் நன்கு தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்துக் குளித்தால், பொடுகுப் பிரச்னை தீரும். பொடுகால் ஏற்படும் பருக்கள் தவிர்க்கப்படும்.

வெளியே செல்வதற்கு முன்பு, சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்ட ஐஸ்கட்டியால் முகத்தில் மசாஜ் செய்வதால் நீண்ட நேரம் முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும் கூட பருக்கள் ஏற்படுகின்றன. மேலும், உடலில் சேரும் கொழுப்பு, மன இறுக்கம், மலச்சிக்கல் போன்றவற்றாலும்கூட பருக்கள் உண்டாகின்றன. இவற்றைத் தவிர்க்க, துத்தநாகம், பி காம்ப்ளெக்ஸ் நிறைந்த ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மிதமான வெந்நீர் ஊற்றி உப்பு, எலுமிச்சைச் சாறு விட வேண்டும். அதில் இரு பாதங்களையும் பத்து நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்ய வேண்டும். இதேபோல் கை விரல் நகங்களையும் சுத்தம் செய்யலாம்.

– வி.மோ.பிரசன்னா


Spread the love