“புகைப் பழக்கம் புற்றுநோய் மற்றும் மாரடைப்பைத் தரக் கூடியது” என்று சினிமா தியேட்டர்களில் விளம்பரம் வந்தால், சிகரெட் பிடித்தவாறு கைதட்டுகிற கூட்டம் தான் அதிகம். “புகைப் பிடிக்காதே” என்று எந்த வகையில் அறிவுறுத்தினாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவர்களை, நோய்வாய்ப்பட்டு பார்க்கும் போது பரிதாபமாகத் தான் இருக்கும்.
மனஅழுத்தம், தனிமை, விரக்தி என்கிற நிலையைக் கடப்பதற்கு பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பது புகைப் பிடிப்பதைத் தான். அந்தந்த நிமிடங்களுக்குத் தேவையான தீர்வை பெற்றுவிட்ட சந்தோஷத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியாது “நிரந்தரத் தீர்வை நோக்கி அவர்கள்” பயணிப்பது, என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
புகை பிடித்தல், எந்த வகையானதாக (பீடி, சிகரெட், சுருட்டு) இருந்தாலும், இவர்களிடம் 5 மடங்கு மாரடைப்பு இளமையிலேயே வர வாய்ப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு நோயாளியும் சொல்லும் கருத்து, மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நிலையில், புகை பிடிப்பதால் மன அழுத்தம் குறைகிறது என்பது.
இந்நிலையில் மன அழுத்தம், புகை பிடித்தலும் சேர்ந்து,இதயத்தை மிக அதிக அளவில் பாதிக்கின்றது.
சிகரெட் புகையில் உள்ள இரசாயனங்கள்
சிகரெட் புகையில் ஆயிரக்கணக்கான தீய பொருட்கள் இருப்பினும், 230 பொருட்களை முக்கியமாகச் சொல்லலாம்.
நிகோட்டீன் (Nicotine)
கரியமில வாயு (Carbon-di-oxide)
கார்பன் மோனாக்ஸைடு (Carbon-mono-oxide)
நைட்ரஜன் (Nitrogen)
அம்மோனியம் (Ammonium)
கரி (Coal)
நீராவி (Stream)
அதிக உஷ்ணம் (Heat)
தார் (Tar)
ஆர்சினிக் (Arsenic)
என்று வரிசையாகப் பலவற்றைக் கூறிக் கொண்டே போகலாம்.
இவற்றில் மிக மிக நச்சுப் பொருளான நிக்கோட்டீன் இரத்தத்தில் கலந்து பற்பல தீங்குகளை இழைக்கின்றது.
இதயத் துடிப்பை அதிகரித்து, இதயத்தை சீர் குலையச் செய்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கூட்டுகிறது.
நம் கல்லீரலிலேயே தயாராகும் கெட்ட கொலஸ்ட்ராலை ( Endogenous Hepatic Cholestreol ) அதிக அளவில் உற்பத்தி செய்து இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
கல்லீரலில் உற்பத்தியாகும் நல்ல கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்தத்தில் கலந்து இருக்கும் அளவைக் குறைக்கிறது.
எல்லா இரத்தக் குழாய்களும், முக்கியமாக இதயம், மூளை இரத்தக் குழாய்கள் இளம் வயதிலேயே சுருங்கி, அடைப்பட்டு மாரடைப்பு, மூளை பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
கால்களின் இரத்தக் குழாய்கள் அடைபட்டு, இரத்த ஓட்டம் இழந்து, கால்கள் அழுகி, இறப்பு ஏற்படுகிறது.
வயிற்றுப் புண்ணை உருவாக்குகிறது.
வாய் துர்நாற்றம், பற்களில் கறை படிதல், வாய், உணவுக் குழாயில் புற்றுநோய். நுரையீரல் புற்றுநோய் மற்றும் இருமல், ஆஸ்துமா.
கை நடுக்கம், ஞாபக மறதி, நாளடைவில் சோர்வு.
மேற்கூறிய தீய விளைவுகள், புகைபிடிப்பவர்களை மட்டுமல்லாமல், அருகில் உள்ளவர்களும் அந்தப் புகையை சுவாசிப்பதால் (Passive smoking) அதே விளைவிற்கு ஆளாக்குகின்றது.
கர்ப்பிணிகள் புகை பிடிப்பதாலும், புகை பிடிப்பவர்கள் அருகில் இருப்பதாலும், அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வயிற்றில் வளரும் கருவும் மிகவும் பாதிக்கப்பட்டு கருச் சிதைவு ஏற்படவோ அல்லது ஊனமுடைய குழந்தையாக பிறக்கவோ வாய்ப்பு ஏற்படும்.
புகையிலை ஆபத்து
புகையிலையை, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் வாயில் வைத்து மெல்லுவது.
புகையிலையைப பற்பொடியாக பயன்படுத்துவது.
புகையிலையை மூக்குப் பொடியாகப் போடுவது. இவை அனைத்தும் இதயத்தைப் பாதிப்பது, மட்டுமல்லாமல், நாக்கு, வாய், தொண்டை, மூக்குப் புற்றுநோயும் வரக் காரணமாகிறது.
மேற்கூறிய தீய விளைவுகளினால் தான், புகைத்திடும் ஒவ்வொரு சிகரெட்டும் ஒருவனைக் கொல்லும் துப்பாக்கியின் குண்டுக்கு (Bîllet) சமமாகிறது.
புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
தீய விளைவுகளை மனதில் பதியவைத்து, மன உறுதியை ஏற்படுத்திக் கொண்டு, புகை பிடிப்பதை உடனடியாக, முழுமையாக நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
முதலில் கடினமாகத் தோன்றினாலும், அறிவின் தன்மையால் மனதை அடிபணிய வைத்து, இந்தத் தீய பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்.
புகை பிடிக்கும் நண்பர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.
அந்த நினைப்பு வரும்போது, மனதை வேறு நல்ல திசையில் திருப்ப வேண்டும். இசை கேட்பது, இசைக் கருவிகளை இயக்குவது போன்றவற்றில் மனதை ஈடுபடச் செய்யலாம்.
காற்றோட்டமான இடத்தில் உடற்பயிற்சி செய்தல்.
மூச்சுப் பயிற்சி, யோகாசனம், தியானம் பழகுதல் ஆகியவற்றை கடைபிடித்து, புகை பிடிக்கும் பழக்கத்தை நீக்கி விட முடியும்.