குரோமியம், உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் தாதுப்பொருள். இன்சுலீன் ஹார்மோன் சரியாக செயல்பட உதவுகிறது. கார்போ-ஹைடிரேட், மற்றும் கொழுப்புக்களின் வளர்சிதை மாற்றத்திற்கும் (Metabolism) உதவுகிறது. குரோமியம் குறைந்தால் உடலின் குளூக்கோஸ் ஏற்புத் தன்மை (Glucose tolerance) பாதிக்கப்படும். 1950ல் எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில், குரோமியம் கொடுக்கப்பட்ட எலிகள் சரிவர சர்க்கரையை (குளூக்கோஸ்) ஜீரணிப்பது தெரியவந்தது. இதன் பிறகு நீரிழிவை பொருத்தவரை குரோமியத்தின் பங்கு என்ன என்பதைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை உறுதியான முடிவுகள் தெரியவில்லை.
இருந்தாலும் குளூக்கோஸ் ஏற்புத்தன்மையை, குறிப்பாக வயதானவர்களுக்கு, குரோமியம் அதிகரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
ஒரு மனிதனின் தினசரி குரோமியத் தேவை 75 ம்யூ கிராம். நமது நாட்டு உணவுகளின் (ஏழை உணவானாலும் சரி, ‘பணக்கார‘ உணவானாலும் சரி) மூலம் தினசரி குரோமியத் தேவையை சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளலாம். குரோமியம் கேரட், உருளைக்கிழங்கு, முழுத்தானியங்கள், வெல்லக்குழம்பு (Molasses) இவற்றில் கிடைக்கிறது. குரோமிய குறைபாடு நமது நாட்டில் அபூர்வம். எனவே குரோமியத்தை தனியாக, ‘எக்ஸ்ட்ராவாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. நீரிழிவு நோயாளிகள் கூட குரோமியம் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அளவுக்கு மேல் குரோமியம் உட்கொண்டால், அதன் நாட்பட்ட விளைவுகள் என்னவென்று இன்னும் சரிவர தெரியவில்லை.