கிறிஸ்துமஸ் கேக்குகள்
கேக்குகள் வயது வித்தியாசம், தேச வித்தியாசம் இன்றி அனைவராலும் விரும்பப்படும் உணவு. அதுவும் கிறிஸ்துமஸ்ஸின் போது பல தேசங்களில் பல விதமான கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இலேசான, குறைந்த பழங்கள் (உலர்ந்த பழங்கள்) கொண்ட கேக்குகளிலிருந்து, ஆப்பிள், பல உலர்ந்த திராட்சைகள், கிரீம், முட்டை முதலியன சேர்த்து செய்யப்படும் “பணக்கார” கேக்குகள் வரை பல ரக கேக்குகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கென தயார் செய்யப்படுகின்றன.
கேக் செய்ய பொதுவான குறிப்புகள்
கேக் செய்ய தேவையான அடிப்படை பொருட்கள் – மாவு (மைதா), கொழுப்புகள், பேக்கிங் சோடா (உப்ப வைக்கும் பொருட்கள்), முட்டை, பழங்கள்.
அவனில் கேக் வைக்கும் தட்டு, நீங்கள் தயாரிக்கும் கேக்கின் அளவுக்கு சரியாக இருக்க வேண்டும். வெண்ணெய், செயற்கை வெண்ணெய்யுடன் மார்கரீன் – இவை இரண்டும் கேக்கில் வெகுவாக பயன்படுத்தப்படும் கொழுப்புகள்.
சாதாரண மாவு (மைதா) அல்லது “தானே உப்பும்” மாவு பயன்படுத்தப்படுகிறது. செழிப்பான உயர்தர கேக்குகளில் இந்த இரண்டு மாவுகளும் கலந்த கலவை பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் தயாரிக்கப் போகும் கேக்குகள் தேவையான பொருட்களை முன்பே சரியான அளவுகளில் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். கேக்குகள் “உப்புவதின்” காரணம், கேக் செய்ய பயன்படுத்தும் கோதுமை மைதாமாவில் ‘ரப்பர்‘ போன்ற ‘க்ளூடென்‘ என்ற பொருள் உள்ளது. பேக்கிங் பவுடரால் ஏற்படும் கார்பன் – டை – ஆக்ஸைடை, க்ளூடென் ஈரமாகும் போது, சிறு காற்று குமிழ்களாக “மிதக்க” வைக்கிறது – சூடானால் எல்லா காற்றுகளும் மேல் நோக்கி எழும். அதனால் இந்த சிறு குமிழ்கள் பெரிதாகி, கேக் உப்புகிறது. கேக்கை உப்ப வைக்க சோடா பை கார்பனேட்டும், கிரீம் ஆஃப் டார்டர்டும் பயன்படுத்தப்படுகின்றன.
கேக் செய்ய எந்த மாவை பயன்படுத்தினாலும் சரி, அதை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும். உப்பு கேக்கை திடமாக்கும்.
முட்டைகள் கேக்கை ‘லேசாக‘ ஆக்குகின்றன. சூடாகும் போது முட்டை விரிவடைந்து காற்றை பிடித்துக் கொள்கின்றன. கார்பன் – டை – ஆக்ஸைடைடுக்கு பதில் காற்றே கேக்கை உப்ப வைக்கும். அதிகமாக முட்டை நிறைந்த கேக்குகளும் உப்ப வைக்கும் பொருட்களும் தேவைப்படாது.
கேக்குகளில் உபயோகிக்கப்படும் பழத் தோல்கள், ஆரஞ்ச், எலுமிச்சை பழம் முதலியவற்றின் தோல்களாகும். கேக், பிஸ்கட்டுகள் செய்ய வெண்ணெய் தான் சிறந்த கொழுப்புப் பொருள். வெண்ணெய் கொலஸ்ட்ரால் செறிந்தது தான். ஆனால் வெண்ணெய்யை விட்டால் சுவை சேர்ப்பதற்கு வேறு கொழுப்புப் பொருள் உதவாது.
கிறிஸ்துமஸ் கேக் – 1
தேவை
தானே உப்பும் மாவு (மைதா) – 325 கி
உப்பு – 1/2 டீஸ்பூன்
கலந்த மசாலாப் பொருட்கள் –1 டெஸர்ட் ஸ்பூன்
பொடித்த ஜாதிக்காய் – 1 டீஸ்பூன்
பொடித்த லவங்கப்பட்டை – 1 டீஸ்பூன்
பொடித்த லவங்கம் – 1/2 டீஸ்பூன்
பொடித்த பாதாம் பருப்பு – 110 கி (கால் பவுண்டு)
குறிப்பு – கலந்த மசாலாப்பொருட்கள் என்றால் ரெடிமேடாக தயாரிக்கப்பட்ட வாசனை திரவிய கலவை. இலவங்கப்பட்டை, தனியா, ஜாதிக்காய், லவங்கம் மற்றும் இஞ்சி சேர்ந்தவை.
உலர்ந்த சிறு திராட்சை – 450 கி
உலர்ந்த திராட்சை – 450 கி
சுல்தானா – 450 கி
சர்க்கரை தேய்த்த செர்ரி பழங்கள் – 225 கி
தோலுரித்த பாதாம் பருப்பு – 110 கி
கலந்த சிட்ரஸ் பழத்தோல்கள் – 225 கி
ஒரு எலுமிச்சைபழத்தின் தோல் மற்றும் சாறு
உப்பில்லா வெண்ணெய் – 450 கி
மிருதுவான பழுப்பு சர்க்கரை – 275 கி (இல்லாவிட்டால் வெள்ளை சர்க்கரை)
முட்டை – 8 – 9
பிராந்தி – 8 டே. ஸ்பூன்
இவை தவிர, பாதாம் களிம்பு, ஐசிங் க்ரீம் – தேவைக்கேற்ப
செய்முறை
அவனின் வைக்க 25 செ.மீ (10 அங்குலம்) அகலமுள்ள வட்ட அல்லது சதுர தகர டின்னின் அடியிலும், பக்கவாட்டிலும் வெண்ணெய்யை தடவவும். எண்ணெய் ஊற்றாத கீரிஸ் பேப்பரால் லைனிங் செய்யவும். இந்த பேப்பரில், ப்ரெஷால், உருக்கிய வெண்ணெய்யை பூசவும். தவிர பழுப்பு காகிதத்தால் டின்னின் வெளிபாகத்தை மூடி, இந்த பேப்பர், தட்டின் பக்கவாட்டில் சுவர்களின் மேல் நீட்டி கொண்டிருக்கும் படி சுற்றவும். இதனால் பேக் செய்யும் போது கேக் கருகி போகும் அபாயம் தவிர்க்கப்படும்.
எல்லா உலர்ந்த பொருட்களையெல்லாம் (மாவும், மசாலாக்கள், வாசனை திரவியங்கள், பொடித்த பாதாம்) ஒரு பெரிய கிண்ணத்தில் சலித்துக் கொள்ளவும்.
கூடவே சிறியதாக நறுக்கிய உலர்ந்த பழங்களையும், நறுக்கிய பாதாம் பருப்புகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வேறு பாத்திரத்தில், சர்க்கரை, வெண்ணெய், துருவிய எலுமிச்சைப் பழத்தோல் இவற்றைக் கலந்து நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு ஒவ்வொரு முட்டையாக எடுத்து உடைத்து கலவையில் கலக்கவும். இப்போது மாவு, பழக்கலவை, லெமன் சாறு மற்றும் நான்கு டேபிள் ஸ்பூன் பிராந்தியையும், ஒவ்வொன்றாக சேர்த்துக் கலக்கவும். கலவை மிருதுவாக, ஈரமாக இருக்க வேண்டும்.
முன்பே சூடு செய்யப்பட்ட அவனின் மத்தியின் கேக் தட்டை வைத்து, முதலில் ஒன்றரை மணி நேரம் 300 டிகிரி எஃப் வெப்பத்தில் பேக் செய்யவும். பிறகு சூட்டை 250 டிகிரி எஃப்க்கு குறைத்து மூன்று அல்லது மூன்றரை மணி நேரம் பேக் செய்யவும். பக்கவாட்டிலிருந்து கேக் பிரிந்து வந்தால் அது வெந்துவிட்டது என்று அர்த்தம்.
கடைசி சில மணி நேரங்களுக்கு கேக்கை பரப்பி பேப்பரால் மூடி வைக்கவும். கேக் ஒன்றாக வெந்தவுடன் அவன்லிருந்து எடுத்து குளிர வைக்கவும். நன்கு குளிர்ந்தவுடன் கேக்கை ஃபாயிலில் சுற்றி, கிறிஸ்துமஸ் 6 வாரம் முன்பிலிருந்து பாதுகாத்து வைக்கவும்.
பின்பு கேக்கின் அடியில் துளைகளை போட்டு ஒரு சிறு புனல் மூலம், மீதியுள்ள 4 டேபிள் ஸ்பூன் பிராந்தியை ஊற்றி மறுபடியும் ஃபாயிலில் ஆல் சுற்றி சீல் செய்து வைக்கவும்.
கிறிஸ்துமஸ்ஸுக்கு 10 நாட்கள் முன்பு கேக்கை எடுத்து பாதாம் களிம்பால் (1.1 கிலோ 21/2 பவுண்டு) எடுத்து கேக்கின் மேல் பாகம் மற்றும் பக்கவாட்டில் தடவி வைக்கவும். இதைச் செய்த மூன்று நாட்கள் கழித்து ஐசிங் செய்யலாம்.
ஐசிங் செய்யும் முறை
தேவை
நான்கு முட்டையின் வெள்ளை பாகங்கள் – 900 கி
ஐசிங் சர்க்கரை – 1 டே.ஸ்பூன்
எலுமிச்சைபழச்சாறு – 900 கி
கிளிசரின் – 2 டே. ஸ்பூன்
செய்முறை
ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக ஐசிங் சர்க்கரையை சேர்த்து மரக்கரண்டியால் நன்றாகக் கலக்கவும். பாதி சர்க்கரையை சேர்த்தவுடன் எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மறுபடியும் தொடர்ந்து சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக கிளிசரின் சேர்க்கவும். ஒரு நாள் முழுவதும் ஐசிங் கலவையை பாலித்தீனால் மூடி வைக்கவும். இந்தக் கலவை, 10 அங்குல அகலமும், இரண்டு அங்குலம் ஆழமும் உள்ள கேக்குக்கு தடவ சரியாக இருக்கும். ஐசிங்கை கேக்கின் மேல் தடவி அலங்கரிக்கவும்.
கிறிஸ்துமஸ் கேக் – 2
பாதாம் கேக்
தேவை
மார்கரின் – 100 கி
பழுப்பு சர்க்கரை – 50 கி
முட்டை – 2
தானே உப்பும் மைதா மாவு – 175 கி
Baking சோடா – 1 டீஸ்பூன்
பால் – 4 டே.ஸ்பூன்
சுத்தமான தேன் – 2 டே.ஸ்பூன்
உடைத்த பாதாம் பருப்பு – 50 கி
சிரஃப்
தேன் – 150 மி.லி.
எலுமிச்சைபழச்சாறு – 2 டே.ஸ்பூன்
செய்முறை
18 செ.மீ. அல்லது 7 அங்குலமுள்ள மட்டமான கேக் தட்டில் பேக்கிங் பேப்பரை லைனிங் செய்து வைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் மார்கரின், சர்க்கரை, முட்டை, மாவு, பேக்கிங் பவுடர், பால், மற்றும் தேன் – இவற்றை போட்டு நன்றாக நுரை வரும் படி மரக்கரண்டியால் கலக்கவும்.
இந்தக் கலவையை ஒவ்வொரு கரண்டியாக கேக் தட்டிலிட்டு பரவலாக நிரப்பவும். பாதாம் துண்டுகளை தூவவும். இந்தக் கலவை உள்ள கேக் தட்டை முன்பே சூடுபடுத்தப்பட்ட அவனில் வைத்து 350 டிகிரி எஃப் சூட்டில் 50 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஒரு கம்பியை கேக்கில் நுழைத்தால் அது சுலபமாக, சுத்தமாக வெளியே வந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம். கேக் வேகும் சமயத்தில் சிரப்பை தயார் செய்யவும். ஒரு வாணலியில் தேனையும், எலுமிச்சை பழச்சாறையும் கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
கேக்கை அவனிலிருந்து எடுத்தவுடன் சிரப்பை கேக்கின் மீது ஊற்றவும். இரண்டு மணிநேரமாவது கேக்கை பயன்படுத்தும் முன் குளிர வைக்கவும்.
டிரைபில் புட்டிங்
டிரைபில் என்றால் ஸ்பான்ஜ் கேக்கிலிருந்து அல்லது பழைய கேக்கிலிருந்து செய்யப்படும் இனிப்பு இது பொதுவாக ஓயின் அல்லது ஜெல்லி நனைக்கப்பட்டு கஸ்டர்டு மற்றும் கிரீம் ஆல் மேலே தடவப்பட்டு இருக்கும் உணவுப்பொருள். முதலில் இந்த டிரைபில் புட்டிங் தயாரிக்கத் தேவையான ஸ்பான்ஜ் கேக்
செய்யும் முறை
தேவை
மைதா மாவு – 250 கி
சர்க்கரை – 200 கி
முட்டை – 6
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்
வெனிலா எஸன்ஸ் – 1 டீஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் – 6 டே.ஸ்பூன்
வெதுவெதுப்பான தண்ணீர் – 2 டே.ஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் மூன்று முட்டையின் மஞ்சள் கருவையும், மூன்று முட்டைகளையும், சர்க்கரையையும் போட்டு, முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும். எஸன்ஸ் சேர்க்கவும்.
மைதாமாவை பேக்கிங் பவுடருடன் சேர்த்துக் சலிக்கவும். மூன்று முட்டையின் வெள்ளைக் கருவை முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும்.
சலித்த மாவையும், முட்டையும், சர்க்கரையும் கலந்த கலவையில் சிறிது சிறிதாகப் போட்டு விரல் நுனிகளால் கலக்கவும்.
உருக்கிய வெண்ணெய்யையும், வெதுவெதுப்பான தண்ணீரையும் தயாரித்த கலவையில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
கடைசியாக அடித்த வெள்ளைக்கருவை கலவையுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். 10 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில், உருக்கிய வெண்ணெய்யை மிகவும் நன்றாகக் தடவவும்.
கலவையைத் தட்டில் போட்டு நிரப்பி விடவும். 400 டிகிரி எஃப் சூட்டில் சுமார் 30 டிகிரி முதல் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.கேக் தயாரானவுடன் ஆற வைக்கவும்.
புட்டிங் செய்ய தேவையான பொருட்கள்
ஆப்பிள் பழம் – 2
வாழைப்பழம் – 4
திராட்சைப்பழம் – 100 கி
கிரீம் – 1 கப்
கஸ்டர்ட் – 1 கப்
செய்முறை
எல்லாப் பழவகைகளையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.4 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையை 11/2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.கேக்கைக் குறுக்கு வாட்டில் 4 மெல்லிய பாகங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் முதலில் ஒரு பாகம் கேக்கை வைக்கவும். தயாரித்துள்ள சர்க்கரைத் தண்ணீரைத் தெளிக்கவும்.
நறுக்கிய பழத்துண்டுகளைச் சிறிதளவு போட்டுப் பரவலாக நிரப்பி விடவும். சிறிதளவு கிரீம், கஸ்டர்ட் இவைகளைப் பழத்தின் மேல் ஊற்றவும்.
மற்றொரு கேக் துண்டைப் பழத்துண்டுகளின் மேல் வைக்கவும். முதலில் சொன்னது போல் சர்க்கரை தெளிக்கவும். பழத்துண்டுகள், சிறிதளவு கிரீம், கஸ்டர்ட் முதலியவற்றை கேக்கின் மேல் சமமாகப் போடவும்.
மூன்றாவது கேக் துண்டையும் பழத்துண்டுகளின் மேல் வைத்து, முறையே சர்க்கரைத் தண்ணீர் தெளித்து, பழத்துண்டுகள், கிரீம், கஸ்டர்ட் இவற்றைப் போட்டு நிரப்பி விடவும்.
கடைசி அடுக்கு கேக்கின் மேல் கிரீமோ அல்லது கஸ்டர்ட் கலவையோ தடவி விடவும். மேலே செர்ரிப் பழங்கள், சில்வர் பால்ஸ், பழவகைகள் முதலியவற்றால் அலங்கரிக்கவும். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து “சில்” லென்று பரிமாறவும்.
கஸ்டர்ட் செய்ய தேவையான பொருட்கள்
கஸ்டர்ட் பவுடர் – 2 டே.ஸ்பூன்
பால் – 2 கப்
செய்முறை
கஸ்டர்ட் பவுடரை 1/4 கப் பாலில் கரைத்துக் கொள்ளவும். மீதி இருக்கும் பாலை அடுப்பில் வைக்கவும். பால் கொதிவரும் பொழுது கரைத்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடரை அதில் விடவும். 1 நிடமிடம் கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். 4 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
ஆப்பிள் புட்டிங்
தேவை
ஆப்பிள் – 2
வெள்ளை சர்க்கரை – 50 கி
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
பொடித்த ரொட்டி –200 கி
எலுமிச்சைபழச்சாறு – 1 டீஸ்பூன்
செய்முறை
ஆப்பிளை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு குறைந்த தண்ணீரில் வேக வைக்கவும். வெள்ளை சர்க்கரையையும், வெண்ணெய்யையும் வேக வைத்த ஆப்பிளுடன் சேர்க்கவும்.
6 அங்குலமுள்ள மட்டமான புட்டிங் தட்டில் அடியிலும், பக்கவாட்டிலும் வெண்ணெய்யை பூசிக் கொள்ளவும். பொடித்த ரொட்டியை தட்டின் அடியிலும், பக்கவாட்டிலும் தூவிக் கொள்ளலாம்.
ஆப்பிள் துண்டுகளை எலுமிச்சைபழச்சாற்றில் நனைத்து தட்டில் வைக்கவும். ஆப்பிள் துண்டுகளின் மேல் ரொட்டித் தூளைத் தூவவும். மேலே உருக்கிய வெண்ணெய்யை விடவும். முன்பே சூடுபடுத்திய அவனில் வைத்து 350 டிகிரி எஃப் சூட்டில் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
குறிப்பு
அவன் இல்லாவிட்டால் ஒரு பெரிய வாணலியை 3 அங்குலம் உயரம் வரை மண்ணை / மணலை நிரப்பி நன்றாக சூடுசெய்து கொள்ளவும். புட்டிங் செய்யும் தட்டை மண்ணின் மேல் வைத்து வாணலியை தட்டினால் மூடிவிடவும். புட்டிங்கின் மேல் பாகம் மொறமொறப்பாக ஆகும் வரை பேக் செய்யவும்.
பிஸ்கட் தயாரிப்பு
பிஸ்கட் என்ற வார்த்தை “இரு தடவை சமைத்தது” என்ற பொருளுள்ள ஃப்ரெஞ்சு வார்த்தையான ‘பிஸ்கட்‘ என்பதிலிருந்து வந்தது. உண்மையிலேயே பிஸ்கட்டுகள் பழங்காலத்தில் இருமுறை சமைக்கப்பட்டன. அந்த காலங்களில் நீண்ட கடல் பயணத்தின் போது, மாலுமிகளின் தினசரி சிற்றூண்டிக்காக சிறிய, கெட்டியான கேக்குகள் எடுத்துச் செல்லப்பட்டன. இவை கெடாமலிருப்பதற்காக கப்பலில் ஏற்று முன் சமைக்கப்பட்டன. இவற்றை உண்பதற்கு முன், கெட்டித்தன்மையை மிருதுவாக்க, மறுபடியும் சமைக்கப்பட்டன. இப்போதெல்லாம் பிஸ்கட்டுகள் ஒரு முறை தான் சமைக்கப்படுகின்றன. அவை தயாரிக்க அவன் சூளை போன்ற) அடுப்பு தேவை. பிஸ்கட் தயாரிக்க சில டிப்ஸ்
“அவன்” அடுப்பில் இரு தட்டுகள் இருந்தால் அவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். பாதி நேரம் வெந்தவுடன் தட்டுகளின் வரிசையை மாற்றவும். இதனால் தட்டிலிலுள்ள பிஸ்கட்டுகள் சீராக வேகும்.
கம்பியால் ஆன தட்டுக்களில் பிஸ்கட்டுகளை ஆறவிடவும். அவன் தட்டுக்களிலிருந்து எடுத்தவுடன் கம்பித்தட்டில் போடவும். சிரப்பு, தேன் கலந்த பிஸ்கட்டுகளை மாத்திரம் சிறிது நேரம் அவனிலேயே இருக்கட்டும்.
சாக்லேட், ஆரஞ்சு பிஸ்கட்டுகள்
தேவை
வெண்ணெய் – 85 கி
கேஸ்டர் சர்க்கரை – 6 டே.ஸ்பூன்
முட்டை – 3
பால் – 1 டே.ஸ்பூன்
மாவு (மைதா) – 225 கி
கோகோ பவுடர் – 2 டே.ஸ்பூன்
ஐசிங்
ஐசிங் சர்க்கரை – 175 கி
ஆரஞ்சு ஜுஸ் – 3 டே.ஸ்பூன்
உருக்கிய கறுப்பு சாக்லேட் – சிறிதளவு
செய்முறை
இரண்டு பேகிங் தட்டை எடுத்து அவற்றை பேகிங் பேப்பரால் லைனிங் செய்யவும்.
வெண்ணெய்யையும், சர்க்கரையையும் கலந்து நுரை வரும் வரை அடிக்கவும். முட்டையையும், பாலையும் கலந்து நன்கு அடிக்கவும். சலித்த மாவையும், கோகோ பவுடரையும் கலந்து மேலும் அடிக்கவும். கைகளால் பிசைந்து மிருதுவாக்கவும். பிசைந்த மாவை 1/2 இன்ச் தடிமனாக ரொட்டி போல் உருட்டிக் கொள்ளவும்.
இரண்டு அங்குல வட்டங்களாக ஒரு கட்டரின் உதவியால் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வட்டங்களை பேகிங் தட்டுகளில் வைத்து, முன்பே சூடுபத்திய அவனில் வைத்து 350 டிகிரி எஃப் சூட்டில் 12 நிமிடங்கள் அல்லது பிஸ்கட்டுகள் பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும்.
பேக்கிங் தட்டுகளிலேயே பிஸ்கட்டுகளை சில நிமிடங்கள் ஆறவிடவும். பிறகு ஒரு கம்பித் தட்டில் பிஸ்கட்டுகளை மாற்றி முழுமையாக ஆறவிடவும்.
ஐசிங் செய்யும் முறை
ஒரு கிண்ணத்தில் ஐசிங் சர்க்கரையை போட்டு ஆரஞ்சு ஜுஸை ஊற்றிக் கலக்கவும். ஒவ்வொரு டீஸ்பூனாக எடுத்து ஒவ்வொரு பிஸ்கட்டுகளின் மேல் வைத்து கெட்டியாகும் வரை விடவும். மேலே உருக்கிய சாக்லேட்டை கம்பிப் போல் இழுத்து அலங்கரிக்கவும். உருக்கிய சாக்லேட் கெட்டியாகும் வரை வைக்கவும்.
பாதாம் பிஸ்கட்
தேவை
தோலுரிக்கப்படாத பாதாம் பருப்புகள் – 150 கி
வெண்ணெய் – 225 கி
ஐசிங் சர்க்கரை – 6 டே.ஸ்பூன்
மைதா மாவு – 275 கி
வெனிலா எஸன்ஸ் – 2 டீஸ்பூன்
பாதாம் எஸன்ஸ் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
இரண்டு பேகிங் தட்டை எடுத்து அவற்றை பேகிங் பேப்பரால் லைனிங் செய்யவும். பாதாம் பருப்புகளை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும். பருப்புகள் களிம்பாக ஆகக் கூடாது.
ஒரு கிண்ணத்தில் வெண்ணெய்யை போட்டு ஐசிங் சர்க்கரையும் (சலித்தது) போட்டு நன்றாகக் அடிக்கவும்.
கிண்ணத்தில் சலித்த மாவை சேர்க்கவும். இரண்டு எஸன்ஸைகளையும் சேர்க்கவும். மிருதுவாக மாவை நன்றாகப் பிசையவும். நறுக்கிய பாதாம் பருப்புகளையும் சேர்க்கவும். ஒரு கரண்டியின் உதவியால் ஒரு அக்ரூட் கொட்டை அளவுக்கு 32 பந்துகளாக பிசைந்த மாவை உருட்டவும். இந்த பந்துக்களை பேகிங் தட்டுக்களில் இடைவெளி விட்டு வைக்கவும்.
முன்பே சூடுபடுத்திய அவனி ல் வைத்து 350 டிகிரி எஃப் சூட்டில் 25 நிமிடங்கள் அல்லது பிஸ்கட்டுகள் பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். பேக்கிங் தட்டுகளிலேயே பிஸ்கட்டுகளை இரண்டு நிமிடங்கள் ஆறவிடவும். பிறகு ஒரு கம்பித் தட்டில் பிஸ்கட்டுகளை மாற்றி முழுமையாக ஆறவிடவும்.
ஐசிங் சர்க்கரையை பிஸ்கட்டுகளின் மேல் இலேசாக தூவவும். காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பாதுகாக்கவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
உணவு நலம் டிசம்பர் 2010
கிறிஸ்துமஸ், உணவு, கேக், புட்டிங், பிஸ்கட், கிறிஸ்துமஸ் கேக்குகள், உணவு, ஆப்பிள், திராட்சைகள், கிரீம், முட்டை, பணக்கார கேக்குகள், பண்டிகை, கேக், பொதுவான, குறிப்புகள், மாவு, கொழுப்புகள், பேக்கிங் சோடா, முட்டை, பழங்கள்.
அவன், வெண்ணெய், மார்கரீன்,
கிறிஸ்துமஸ், கேக், செய்முறை, தானே உப்பும் மாவு, உப்பு, டெஸர்ட், பொடித்த ஜாதிக்காய், பொடித்த லவங்கப்பட்டை, பொடித்த லவங்கம், பொடித்த பாதாம் பருப்பு, ஐசிங், செய்யும், முறை, செய்முறை, முட்டை, ஐசிங் சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, கிளிசரின், பாதாம், கேக், செய்முறை, மார்கரின், சர்க்கரை, முட்டை, மாவு, பேக்கிங் பவுடர், பால், டிரைபில், புட்டிங், செய்முறை, முட்டை, மஞ்சள் கரு, மைதா, மாவு, சர்க்கரை, புட்டிங், செய்முறை, ஆப்பிள் பழம், வாழைப்பழம், திராட்சைப்பழம், கிரீம், கஸ்டர்ட், ஆப்பிள், புட்டிங், செய்முறை,
ஆப்பிள், வெள்ளை சர்க்கரை, வெண்ணெய், பொடித்த ரொட்டி, எலுமிச்சை,
உணவு நலம் டிசம்பர் 2010
பிஸ்கட், தயாரிப்பு, ஃப்ரெஞ்சு, சிற்றூண்டி, சாக்லேட், ஆரஞ்சு, பிஸ்கட்டுகள், செய்முறை, வெண்ணெய், கேஸ்டர் சர்க்கரை, முட்டை, பால், மாவு, கோகோ பவுடர், பாதாம், பிஸ்கட், செய்முறை, பாதாம் பருப்புகள், வெண்ணெய், ஐசிங் சர்க்கரை, மைதா மாவு, வெனிலா எஸன்ஸ்,