கொழுப்பு அதிகமானால் பிரச்னை தான்…

Spread the love

அளவுக்கு மீறி உணவு உட்கொள்ளும் பழக்கம் உடையவர்களுக்கு, உடலில் கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக சேர்ந்து தங்கி அவரது உடல், அதாவது அடிவயிறு பருத்து விடும். உடலுக்கு கொழுப்புச் சத்து அவசியம் தான். அது 10 முதல் 15 சதவீதம் வரை சேர்வது உடலுக்கு அழகையும், பாதுகாப்பையும் வழங்கும். ஆனால், 20 சதவீதத்திற்கும் மேற்பட்டால் உடல் பருமன் என்ற நோயாக அழைக்கப்படும்.

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்

உடல் பருமன் நோயை, மன நோய்களின் தந்தை எனக் கூறலாம். பருமனாக உள்ள உடம்பையும், உறுப்புக்களையும் இயக்குவதில் இயற்கையாகவே சிறிது சிரமம் ஏற்படுகிறது. பருமனாக உள்ள உடம்பின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இரத்தம் அனுப்புவதில் இதயத்தின் வேலைப் பளு அதிகரிக்கிறது. இவர்களுடைய இரத்தத்தில் ‘கொலஸ்ட்ரால்’ அளவு அதிகமாகப் பெருகும் வாய்ப்பு இருப்பதால் ரத்த நாளங்கள் தடித்து மாரடைப்பு நோய் ஏற்படலாம்.

உடல் பருமன் காரணத்தினால் சுவாசிப்பதில் சிறிது இடையூறுண்டாகும். இதனால் நுரையீரல் நோய்கள், இருமல் முதலியனவும், வயிற்றில் உள்ள தசையில் கொழுப்புத் தங்குவதால் ஹெர்னியா என்ற நோயும், கல்லீரல் பழுதடைதலும், பெண்களுக்கு மாதவிடாய், குழந்தைப் பேறு காலங்களில் சில சிரமங்கள் ஏற்படலாம். நடு வயதில் ஒருவருக்கு சர்க்கரை நோய் தோன்றி இருக்குமானால் அதற்கு உடல் பருமனும் ஒரு காரணமாகும்.

உடல் பருமன் மூளையின் திறனைக் கூட மட்டுப்படுத்துகிறது. உடல் அமைப்பை, அழகை பாதிக்கிறது. பருமனாக உள்ள ஒருவர் உடல் எடையைக் குறைப்பதால் அவரின் ஆயுள் கூடுகிறது. ஹைபோதலாமஸ் என்ற உறுப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதி பழுது ஏற்பட்டால் ஒருவர் பசி அடங்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். சிலருக்கு உணவு எளிதாக கிடைப்பதால் நினைத்த நேரத்தில் எல்லாம் உணவு உட்கொள்கிறார்கள். இதனால் உடலில் கொழுப்புச் சேர்ந்து விடுகிறது. சிலருக்கு பிட்யூட்டரி, தைராய்டு முதலிய நாளமில்லாச் சுரப்பிகளின் கோளாறினால் உடல் பருமன் தோன்றக் கூடும்.

பரம்பரை பரம்பரையாக பருமன் பிரச்சனையும் ஒரு சிலர் குடும்பத்தில் அமைந்து விடும். 7 கலோரி அளவுக்கு சமமான உணவு உட்கொள்ளும் பொழுது ஒரு கிராம் கொழுப்பு உடலுக்கு சேருகிறது. ஒருவரின் பணிச் சூழல், வயது, தொழில் பொறுத்து கலோரி அளவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு வேலை கொடுக்காமல் உட்கார்ந்த இடத்திலேயே ஆடாமல், அசையாமல் பணி புரிபவர்களுக்கு தினசரி 2500 கலோரிகள் உணவு போதும். கடின உடல் உழைப்பாளிகளுக்கு சுமார் 4000 கலோரிகள் உணவு தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் செய்யும் மனிதர்களுக்கு, அவர்கள் உடலில் சேரும் கொழுப்பு உடல் உழைப்பில் கரைந்து விடுவதால் அவர்கள் உடல் பருமன் ஆக வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது.

அளவுக்கு மீறிய தூக்கத்தாலும் உடல் பருமன் தோன்றுகிறது. ஆகவே உணவும், உறக்கமும் சரியான அளவில் அமைத்துக் கொள்வது நல்லது.

உடல் பருமன் குறைக்க வழி

தினசரி ஒரு மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வேலை பார்க்கும் அலுவலகம் ஒரு கிலோ மீட்டருக்குள் அமைந்திருந்தால் வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து செல்வது நல்லது. அன்றாட உணவுப் பட்டியலில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிட்டு வர அவை பசியைத் தணிக்கும். மலச்சிக்கல் வராமலும் தடுக்கும்.


Spread the love