கொழுப்பும் கோளாறுகளும்

Spread the love

கொழுப்பு மனிதனுக்கு மிக இன்றியமையாத ஊட்டச் சத்துக்களில் ஒன்று என்பதில் கருத்து வேறுபாடே இல்லை. ஆனால் இது அளவில் அதிகமாகும் போது உடலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கக் கூடியது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். உடல் பருமன் மிக்கவர்களது வாழ்நாள், சராசரி பருமன் உடையவர்களது வாழ்நாளை விடக் குறைவு என்பது தெளிவாக்கப்பட்டுவிட்டது.

உடல் பருமன் என்பது பெரும்பாலும் அதிக உணவு உண்பவர்களிடையே தான் காணப்படுகிறது. எந்நேரமும் எதையாவது கொறித்துக் கொண்டும் அசை போட்டுக் கொண்டும் இருப்பதும் அதிக உணவு உண்பது தான். உணவு மேஜையில் இருந்து உணவு வேளைகளில் இவர்கள் உண்பது குறைவாக இருந்த போதிலும் தொடர்ந்து நொறுக்குத் தீனி தின்னும் பழக்கத்தால் இவர்கள் தங்கள் உடல் தேவைக்கு மிக அதிகமாகவே உட்கொண்டு விடுகின்றனர். மேலும் இவ்வகைச் சிறு தீனிகளிலும் சிற்றுண்டிகளிலும் பெரிய அளவில் கொழுப்பும் உப்பும் பொதிந்து கிடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எடுத்துக்காட்டாக உருளைக்கிழங்கு சிப்ஸையும், முந்திரிப் பருப்பு வறுவலையும், சாக்லெட்டுகளையும், ஐஸ்கிரீமையும் எடுத்துக் கொள்வோம். இவைகளில் இருக்கும் கொழுப்பின் அளவைக் கணக்கிட்டால் நம் கலோரித் தேவைக்கு மிக அதிகமாகவே உண்பது தெரிய வரும். ஒவ்வொரு கிராம் கொழுப்பும் ஒவ்வொரு கிராம் மாவுப் பொருள் அல்லது புரதத்தை விட இரண்டே கால் மடங்ழு அதிக கலோரி சக்தி கொண்டது. 1 கிராம் கொழுப்பு 9 கலோரி தருகிறது. ஆனால் ஒரு கிராம் புரதம் அல்லது மாவுப் பொருள் தருவதோ 4 கிராம் தான்.

கொழுப்பானது கிளிசரின் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றால் ஆன ஒரு கூட்டுப் பொருளாகும். தாவரக் கொழுப்பானாலும் விலங்குக் கொழுப்பானாலும் கிளிசரின் என்பது மாறாமல் இருக்கக்கூடிய ஒன்று. மாறுதல்கள் ஏற்படுவதெல்லாம் கொழுப்பு அமிலங்களின் விகிதம் தான். மாட்டுக் கொழுப்பில் உள்ள கொழுப்பு அமிலம், நல்லெண்ணெயில் உள்ள கொழுப்பு அமில விகிதத்திலிருந்து மாறுபட்டது. இவையிரண்டுமே வெண்ணெயில் உள்ள கொழுப்பு அமில விகிதத்திலிருந்து மாறுபட்டவை.

அடிப்படையாக இரண்டு வகை கொழுப்புகள் உள்ளன. அவை

1.    நிறை செறிவுற்ற கொழுப்பு

2.    நிறை செறிவுறாத கொழுப்பு

பெரும்பாலும், நிறை செறிவுற்ற கொழுப்புகள் திட வடிவிலேயே உள்ளன. அநேகமாக இவை விலங்குளிடமிருந்தே பெறப்படுகின்றன. தாவர எண்ணெய்களில் திரவ வடிவிலே இருக்கின்ற நிறை செறிவுறாத கொழுப்பு செயற்கை முறையில் ஹைட்ரஜனேற்றம் செய்யப்படும் போது நிறை செறிவுற்ற கொழுப்பாக மாறித் திட வடிவை அடைகிறது. இதைத்தான் என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிறை செறிவுற்ற கொழுப்புகள் இரத்த நாளங்களில் எளிதாகப் படிந்து விடுகின்றன. இதனால் உயர் இரத்த அழுத்தமும் இதயத் தாக்கும் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகரிக்கிறது.

பசும்பாலிலும் இவ்வகை நிறைசெறிவுற்ற கொழுப்பு ஏறக்குறைய 7 சதவிகிதம் இருக்கிறது. பசும்பால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. விரைந்து வளருகின்ற மழலைப் பருவத்தில் இருக்கும் இவர்களுக்கு தினமும் கிட்டத்தட்ட 4000 முதல் 5000 கலோரி வரையிலும் தேவைப்படலாம். ஆனால் அதே நேரத்தில் உடல் உழைப்பு அதிகமில்லாத 40 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஒரு குவளை பால் அருந்துவது தேவையற்றது. குழந்தையின் எரிசக்தி தேவையும் பெரியவர்களின் எரிசக்தி தேவையும் மாறுபடுவதே இதற்குக் காரணம்.

இதே போன்று முட்டையும் நிறை செறிவுற்ற கொழுப்பு மிகுதியும் கொண்ட ஒரு உணவு. குறிப்பாகச சொல்லப் போனால் முட்டையை ஒரு சக்திக் குவியல் என்று கூடச் சொல்லலாம். அத்தனையும் கொலஸ்ட்ரால். வளரும் குழந்தைகளுக்கு இது அவசியம் தேவை எனலாம். நிறைசெறிவுறாக் கொழுப்பை ஒற்றை நிறை செறிவுறாக் கொழுப்பு எனவும் பல்நிறை செறிவுறாக் கொழுப்பு எனவும் இருவகையாகப் பிரிக்கலாம். இவற்றில் எது நல்லது என்னும் சர்ச்சை தொடர்கிறது. ஒற்றை நிறை செறிவுறாக் கொழுப்பு இதயத் தாக்கைத் தவிர்க்கும் என்று கூறப்படுகின்ற அதே நேரத்தில் இது பித்தப் பைக் கற்களை உண்டு பண்ணக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இருவகைக் கொழுப்பும் கலந்த உணவுகளை உண்பதே சிறந்தது. இருந்த போதிலும் கொழுப்பைக் காட்டிலும் மோனோஸ்டர்ட்டடு கொழுப்பு ஒரு படி உயர்ந்தது என்பதை மறுக்க முடியாது.

இந்த பல்நிறை செறிவுறாக் கொழுப்பை லினோலெனிக் அமிலம் (என்3) மற்றும் லினோலிக் அமிலம் (என்6) என இரு வகையாகப் பிரிக்கின்றனர். இதில் லினோலிக் அமிலத்தை விட லினோலெனிக் அமிலம் மேலானது என்று கருதப்படுகிறது.

மீன் எண்ணெயில் மற்றொரு வகைக் கொழுப்பு இருக்கிறது. இது மற்ற எல்லா விதக் கொழுப்புகளையும் விடச் சிறந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல நாட்களுக்கு மீன் உண்ணுகின்ற பழக்கமுடைய சமூக மக்களிடையே இரத்த நாள நோய்களும் இதயத் தாக்கும் மிகக் குறைவாகவே ஏற்படுகிறது என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

மரக்கறி மட்டுமே உண்பவர்கள் சில முக்கியமான ஊட்டச் சத்துக்களைப் பெறாது போகின்றனர் என்ற கருத்து இனிமேலும் சரிவராது. நிறை செறிவுற்ற கொழுப்பைக் காட்டிலும் நிறை செறிவுறாக் கொழுப்புகள் அதிக அளவு கலோரி சக்தி கொண்டுள்ளன. மரக்கறி உணவிலும் பிற ஊட்டச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஏறக்குறையப் புலால் உணவில் காணப்படுகின்ற எல்லா வகைப் புரதங்களையும் மரக்கறியிலிருந்தும் பெற முடியும். புரதங்கள் என்பவை அமினோ அமிலங்கள் எனும் வேதிப் பொருட்களால் ஆனவை. புரதப் பொருட்கள் அனைத்திலுமுள்ள 22 அமினோ அமிலங்களில் எட்டு அல்லது ஒன்பது அமினோ அமிலங்களே முக்கியமானவை என்றும் மனித உடலினால் தன்னிச்சையாக உற்பத்தி செய்ய முடியாதவை என்றும் கருதப்படுகிறது. ஆனால் பலவகைக் காய்கறிகளும், தானியங்களும் பயறுகளும் சேர்ந்த சமச்சீர் உணவை உண்ணுகின்ற போது அனைத்துப் புரதங்களும் கிடைக்கின்றன.

நாம் உண்ணுகிற உணவிலுள்ள கொழுப்புத் தான் நமது உடலில் கொழுப்புக் கோளங்களை உண்டுபண்ணுகின்றன என்பதை உடல் பருமன் மிக்கவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதிக கொழுப்பினால் வாழ்நாள் குறைகிறதோ இல்லையோ, இரத்த நாள நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு, பித்தப்பைக் கற்கள் போன்ற நோய்கள் இவர்களை எளிதாகத் தாக்குகின்றன. மேலும இந்த அதிக எடையைத் தாங்குகின்ற இடுப்பு மற்றும் கால் மூட்டுகள் விரைவில் தேய்ந்து வலுவிழந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகத் தங்களது பருத்த உடல் தோற்றம் குறித்த தாழ்வுணர்வு இவர்களை வாட்டுவதுடன் வாழ்க்கையில் உற்சாகமின்மையும் செய்து விடுகின்றன.

உடற் கொழுப்பைக் குறைக்க ஒரே வழி உணவிலிருந்து இயன்ற மட்டும் கொழுப்பைக் குறைப்பதுடன் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்வது தான். மேலும் உடற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து தான் பயிற்சி செய்ய வேண்டுமென்பதில்லை. விரைந்து நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், பூப்பந்து, இறகுப்பந்து ஆடுதல் மற்றும் பிற எளிய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தால் போதுமானது.

மிக அதிகமாக எடை உள்ளவர்கள் மருத்துவர் ஒருவரது கண்காணிப்பின் கீழ் “வெரி லோ கலோரி டயட்” என்ற குறைவான உணவு உண்ணும் முறையை மேற்கொள்ள வேண்டும். இது ஏறக்குறைய அரை வயிறு உண்பதைப் போன்றது. நாளொன்றுக்கு 500 முதல் 800 கலோரி அளவுடைய உணவே பரிந்துரைக்கப்படுகிறது. இதுவே மனிதனின் உடல் செயல்பாட்டிற்குத் தேவையான குறைந்த அளவாகும். இதன் மூலம் நான்கு வாரங்களில் சுமார் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டும். கேட்பதற்கு சிறிது கடுமையாகத் தோன்றினாலும் அதிக எடை உடையவர்களுக்கு இன்றைய அத்தியாவசியத் தேவை இது தான்.

உணவு நலம் அக்டோபர் 2010

கொழுப்பும், கோளாறுகளும், கொழுப்பு, ஊட்டச் சத்து, உடல் பருமன், சராசரி பருமன், கிளிசரின், கொழுப்பு அமிலங்கள், இரண்டு, வகை, கொழுப்புகள், நிறை செறிவுற்ற, கொழுப்பு, நிறை செறிவுறாத, கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இதயத் தாக்கு, பித்தப்பைக் கற்கள், லினோலெனிக் அமிலம், புரதப் பொருட்கள், உடல், இரத்த நாள நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு, இடுப்பு, கால் மூட்டுகள், உடற்பயிற்சி, விரைந்து நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், பூப்பந்து, எளிய பயிற்சி, மருத்துவர், மனிதனின் உடல், எடை, அதிக எடை, கொழுப்புகள், அதிக உடல் எடை,


Spread the love
error: Content is protected !!