பலர் தங்களது இரத்த கொலஸ்ட்ரால் அளவைப் பயத்தோடும் பக்தியோடும் கவனித்து வருகிறார்கள். கொலஸ்ட்ரால் அளவில் ஏற்படும் ஒரு சிறிய ஏற்ற இறக்கம் கூட இவர்களது இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. இதனால் பொரித்த கறியையும் பொன்னிற ஆம்லெட்டையும் துறந்தவர்கள் பலர். ஏர் கண்டிஷனரின் இதமான குளுகுளுப்பில் தம்மை மறந்து உறங்க வேண்டிய காலைப் பொழுதில் கடவுளே என்று சொல்லிக் கொண்டு மெல்லோட்டம் பழகுகின்றவர் சிலர்.
மருத்துவ ஆய்வு முடிவுகள் ஒரு கடிகாரத்தில் தொங்குகின்ற ஊசலி (Pendulam) போன்றவைகள். அவை இருபுறமும் செல்லும். 1987 ல் கொலஸ்ட்ரால் பற்றிய பரபரப்பான பேச்சு எழுந்தது. எங்கு பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் கொலஸ்ட்ரால் பற்றிய உரையாடல்தான். ஆங்கிலம் படிக்கத் தெரியாத என் அம்மாவும் பாட்டியும் கூட கொலஸ்ட்ரால் பற்றிப் பேச ஆரம்பித்த காலம் அது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் காற்று திசைமாறியது. 1989ல் ஆர்தர் ஜெ மூர் எழுதிய Heart Failure என்ற நூல் வெளியாயிற்று. அதில் நுட்பமில்லாத அரை குறையான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பணத்தாசை கொண்ட பார்மசூடிக்கல் கம்பெனிகள் கிளப்பி விட்ட புரளிதான் இந்தக் கொலஸ்ட்ரால் புரளி என்று திட்டவட்டமாக எழுதப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கொலஸ்ட்ரால் தொடர்பாகச் செய்யப்பட்ட ஆய்வுகளும், சோதனைகளும் அவற்றின் முடிவுகளும் அரைகுறையாகவும் அவசர கதியிலும் செய்யப்பட்டவை என்று U.S Department of Health and Human Services அறிவித்தது. அன்று தொடங்கிய ஊசலாட்டம் இன்னமும் தொடர்கிறது.
கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் உற்பத்தியாகும் ஒரு வகைக் கொழுப்புப் பொருள். ஏறக்குறைய 200 கிராம் கொலஸ்ட்ரால் நம் ஒவ்வொருடைய உடலிலும் இருக்கிறது. இதில் ஒரு சிறு பகுதி பாலியல் ஹார்மோன்கள் மற்றும் கார்ட்டிக்காய்டு ஹார்மோன்கள் ஆகியவற்றின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கொலஸ்ட்ராலில் பெரும்பகுதி செல்சவ்வுகளிலும் நரம்பு நார்களைச் சுற்றியுள்ள கொழுப்பினால் ஆன உறைகளிலும் இருக்கிறது. குறிப்பாகச் சொல்லப் போனால் மூளையின் நீரற்ற எடையில் (Dry matter) 5ல் ஒரு பங்கு கொலஸ்ட்ராலால் ஆனது. இதிலிருந்து நமது உடலுக்கு கொலஸ்ட்ரால் ஒரு முக்கியமான பொருளெனத் தெரிந்து கொண்டோம்.
இந்த மெழுகு போன்ற கொலஸ்ட்ரால் இரத்தச் சுற்றுக்கு எப்படி வருகிறது? இரத்த பிளாஸ்மாவிலுள்ள லிப்போபுரோட்டீன்ஸ் எனப்படும் கொழுப்புப் புரதங்களுடன் இணைந்து இது இரத்தச் சுற்றினுள் வருகிறது. சில வேளைகளில் பாலில் வெண்ணெய் மிதப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதேபோல இரத்தச் சுழற்சியின் வேகத்தில் சில நேரம் கொலஸ்ட்ரால் இரத்தக் குழாயின் உட்புறச் சவ்வில் ஒட்டிக் கொண்டு அங்கேயே நிலைத்துவிடும்.
20 வயதளவில் இந்த நடவடிக்கை தொடங்கப்படுகிறது. நாற்பது வயதாகின்றபோது தமனிச் சுவர்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மெழுகுப் பொருளின் அளவு அதிகமாகலாம். அதிலும் புகைப்பழக்கமும், உயர் இரத்த அழுத்தமும் கொண்டவர்களிடையே இது விரைந்து ஏற்படக்கூடும். அதன் காரணமாக இரத்தக் குழாயின் உள் விட்டம் (inner dia) குறையவும் குறுக்கம் ஏற்படவும் நேரிடும். இவ்வாறு கொழுப்புப் படிவதால் இரத்தக் குழாய்கள் தங்களது மீள்திறனையும் இழக்கக்கூடும்.
(Atherosclerosis) இந்தக் கொழுப்புப் படிவம் இதயத் தமனிகளில் ஏற்படும்போது இதயத் தசைகளுக்கு இரத்தம் போவது தடைப்பட்டு இதயத்தாக்கு எற்படுகிறது. இதே நிகழ்ச்சி மூளையில் நடைபெறுகின்றபோது Paralytic Stroke எனப்படும் மூளைத்தாக்கு ஏற்படுகிறது.
ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இந்தக் கொலஸ்ட்ரால் இல்லாமலும் நம்மால் வாழ முடியாது. பித்த அமிலங்கள் மற்றும் செரிமான அமிலங்களின் உற்பத்திக்கு இது தேவைப்படுகிறது. மேலும் நாம் முன்னரே சொல்லியதுபோல் பலவிதமான ஹார்மோன்களின் சுரப்பிற்கும் இது தேவைப்படுகிறது. தேவையான அளவு கொலஸ்ட்ராலை உடலே உற்பத்தி செய்து கொள்ளும் என்றாலும் நாம் உண்ணும் உணவிலிருந்தும் கொலஸ்ட்ரால் உடலில் சேர்கிறது.
நடைமுறை இவ்வாறிருக்க இரத்தக் குழாய்க் குறுக்கம் கொலஸ்ட்ராலினால் ஏற்படுவதில்லை. உடலின் வேதியியல் செயல்பாட்டிலுள்ள ஏதோ ஒரு குறையினால் கொழுப்பு அமிலங்கள் மிகுதியாகச் சேரத் தொடங்குகின்றன. அவற்றிலிருந்து அளவுக்கதிகமான கொலஸ்ட்ரால் உற்பத்தியாகிறது என்று பல அறிவியலாளர்கள் வாதிடுகின்றனர்.
இதற்கிடையில் ஒரு மனிதரது மொத்த கொலஸ்ட்ரால் அளவு என்னவென்று அறிவதைக் காட்டிலும் உயர் அடர்த்தி லிப்போபுரோட்டீன், தாழ் அடர்த்தி லிப்போபுரோட்டின் ஆகியவற்றின் தகவு (Ratio) என்னவென்று அறிவதே முக்கியம் என்று NCEP எனப்படும் U.S. National Cholesterol Education Program அமைப்பு அறிவித்துள்ளது.
இரத்தச் சுழற்சியில் கொலஸ்ட்ரால் தானாகப் பயணிப்பதில்லை. லிப்போ புரோட்டீன்ஸ் எனப்படும் புரோட்டீன் மூலக்கூறுகளுடன் சேர்ந்தே பயணிக்கிறது. சாதாரணமாக 20 முதல் 30 சதவிகித அளவு கொலஸ்ட்ரால் HDL என்று சொல்லப்படும் (High Density Lipoproteins) (உயர் அடர்த்தி லிப்போ புரோட்டின்) என்ற வடிவில் எடுத்துச் செல்லப்படுகிறது. மீதி கொலஸ்ட்ரால் LDL எனப்படும் தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டின் வடிவில் உள்ளது. இதில் பிஞிலி நல்ல கொலஸ்ட்ரால் என்று கருதப்படுகிறது. காரணம்? இது இதயத்தமனிச் சுவர்களிலிருந்து கொலஸ்ட்ராலை வெளியே எடுத்துச் செல்வதே காரணம்.
நல்ல கொலஸ்ட்ரால் என்பது எப்படி இருக்கிறது என்றால் நல்ல போக்கிரி என்பது போல் (Good Villan) இருக்கிறது. இங்கே சொற்கள் முரண்படுகின்றன என்றாலும் உண்மை அதுதான். எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் குறிப்பிட்ட அளவிற்குக் குறையாமல் மனிதர்களுக்குத் தேவைப்டுகிறது. டெஸிலிட்டருக்கு 35 மி,கிராமுக்கு (35mg/dl) குறைவாக பிஞிலி உள்ளவர்கள் இதயத்தாக்கினால் எளிதாகப் பாதிக்கப்படக்கூடும். இந்த 35 மிகி அளவிலிருந்து குறைகின்ற ஒவ்வொரு மி. கிராமிற்கும் இதயத்தாக்கு ஏற்படும் கூறுபாடு அல்லது அபாயம் 2 அல்லது 3 சதவிகிதம் உயர்கிறது. இன்னும் சொல்லப்போனால் HDL அளவு கூடக் கூட இதயத்தாக்கு அபாயம் மிக மிகக் குறைந்து விடுகிறது.
அதனால் மொத்த கொலஸ்ட்ராலையும் HDL ஆக மாற்றிக் கொள்ள முடியாது. எங்காவது ஓரிடத்தில் சமரசம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும் LDL என்னும் தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டினின் அளவில் மிகுவதைத் தவிர்த்து HDL உயர் அடர்த்தி லிப்போ புரோட்டினின் அளவை உயர்த்துவோம். யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவைகள் (High Density Lipoprotein) அளவை உயர்த்துவதாக அறியப்பட்டுள்ளது.