அலுவலகம் என்று சொன்ன உடனே பலருக்கு அழுகை தான் வரும். காரணம், வேலை பளுவாக இருக்கலாம், வேலையில் உடன் பணிபுரிபவர்களாக இருக்கலாம். அதனால் தான் அலுவலகம் என்ற உடனே அழுகை வருகிறது.
பெரும்பாலும், அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, ஒரு கோப்பை சூடான காபி அருந்தலாம் அல்லது கொஞ்சம் சாக்லேட் சாப்பிடலாம் என்று தோன்றுகிறதா? நீங்கள் நிச்சயம் `போரடித்து’ போயிருக்கிறீர்கள்.
இங்கிலாந்தின் மத்திய லங்காஷயர் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அலுவலகப் பணி புரியும் சுமார் 100 பேரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களுக்குப் பணியின்போது போரடித்தால் நொறுக்குத் தீனிகளைக் கொறிப்பதாகவும், காபி போன்ற பானங்களைப் பருகுவதாகவும் தெரிவித்தனர்.
“வேலையில் ஒருவருக்கு போரடிக்கிறதா, இல்லையா என்பது, வேலை எந்தளவு நெருக்கடியானது, ஒருவரின் ஆளுமை எப்படிப்பட்டது என்பன போன்றவற்றைப் பொறுத்தது”.
இதை ஆய்வாளர்கள் தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பணியாளர்களிடம், அவர்களின் வேலை நேரப் பழக்கம் குறித்த கேள்வித்தாளை நிரப்பித் தரும்படி கேட்டனர். அதிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஓர் அறிக்கையைத் தயார் செய்தனர். அதை, பிரிட்டீஷ் மனோதத்துவவியல் கழகத்தின் பணி உளவியல் பிரிவின் வருடாந்திர மாநாட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பணியாளர்களிடம் `போரடிப்பது’ எந்த அளவுக்கு இருக்கிறது என்றும் கேட்கப்பட்டது. அதில், `போரடிப்பதே இல்லை’ என்பது முதல், `பெரும்பாலான நேரங்களில் `போர் தான்’ என்பது வரை பதிலாக வந்தன.
பணியாளர்களில் 25 சதவீதம் பேர், தாங்கள் பெரும்பாலான வேளைகளில் உற்சாகம் குன்றிப் போவதாகக் கூறினர். அதிகமாக போரடிப்பதாக கூறியவர்கள், அதிகமாக விடுப்பு எடுக்கவும், வேலையை விடவும் விருப்பம் உள்ளவர்களாக இருந்தனர்.
வேலை அலுப்பில் இருந்து தப்பிக்கவும், தங்களைத் தாங்களே உற்சாகபடுத்தி கொள்ளவும் பணியாளர்கள் பலரும் சாக்லேட், பானம் போன்றவற்றை நாடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.