குழந்தை வளர்ச்சியைக் காண உதவும்

Spread the love

மிகு அதிர்வு ஒலிவரைவி 

மிகுஅதிர்வு ஒலியை உடலில் செலுத்தி அவை எழுப்பும் எதிரொலியைக் கொண்டு நோயறியும் பாங்கு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எதிரிகளின் இருப்பிடத் தொலைவினைக் கண்டறிவதற்காக விலங்கினங்களால் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பழமையான உத்தியை அடியொற்றியே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. படை வீரர்களின் பாதாளக் கப்பல்கள், கடலில் மீன்கள், நண்டுகள் இவைகள் இருக்குமிடத்தை அறிவதற்காகப் பழங்கால மனிதர்கள் இந்த மிகு அதிர்வு ஒலிக்கோட்பாட்டைப் பிரயோகித்து வந்துள்ளனர்.

அண்மைக் காலமாகத்தான் மருத்துவ உலகில் மிகு அதிர்வு ஒலி வரைவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 1950 களில் உடலினுள் ஏற்படும் உறுப்புக் கோளாறுகளைக் கண்டறிய உடலை நீரினுள் அமிழ்த்தி வைத்துப் பின் பரிசோதனை செய்வதில் தொடங்கிய வளர்ச்சி, தற்போது மிகுஅதிர்வு ஒலிவரைவி மூலம் உடலினுள் காணப்படும் மென்திசுக்களை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அளவிற்கு முன்னேறியிருக்கிறது.

உடல் உள்ளுறுப்புக்களின் அமைப்பையும், அதன் செயல்பாட்டையும் துல்லியமாக அறிய உதவும் மிகு அதிர்வு ஒலிவரைவி, இதயவியல் பெண்ணுறுப்பு மற்றும் மகப்பேறியல், கண்நோயியல் சிறுநீரகயியல் எனப் பலதரப்பட்ட மருத்துவப் பிரிவுகளிலும் தற்போது மிகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவப் பரிசோதனைத் துறையில் ஆதிக்கம் புரிந்து வந்த எக்ஸ்  கதிர் வீச்சினை இக்கருவி முறியடித்தது. எக்ஸ் கதிர் வீச்சுக்கள்  அளவிற்கு அதிகமானால் உடலிற்கு கேடு விளைவிக்கக் கூடியவை. ஆனால் இந்த மிகு அதிர்வு ஒலியலைகள், நோயாளிக்கு எவ்வித பாதிப்பபையும் உண்டாக்குவதில்லை.

இதோடுமட்டுமல்லாமல் நுழைவு முறையில் செய்யப்படுகின்ற சோதனைகளான கதீட்டரைசேஷன் ஆன்ஜியோகிராபி அம்னியோசென்டஸில் போன்றவற்றின் தேவையையும் மிகுஅதிர்வு ஒலிவரைவி அகற்றி விட்டது.

அடிப்படை

மிகுஅதிர்வு ஒலிவரைவி, பீசோ எலெக்ட்ரிசிட்டி என்ற இயற்பியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்வரிய கருவியில் மிக முக்கியமாகக் கருதப்படுவது ட்ரான்ஸ்டூசர் எனப்படும் ஒலி அலை உருவாக்கும் பகுதி. இதன் மூலம் உருவான ஒலி அலைகளை உடலிற்குள் கொண்டு செல்லக்கூடிய வண்ணம் அமைந்திருக்கும் எலெக்ட்ரானிக் இணைப்புகளுடன் கூடிய புரோப் என்னும் எலெக்ட்ரானிக் இணைப்பு, மற்றும் கம்ப்யூட்டர் இணைந்த தொலைக்காட்சிப் பெட்டி ஆகியன.

ட்ரான்ஸ்டூசர் வாயிலாக எழுப்பப்படுகின்ற ஒலி, புரோப் மூலம் உடல் உறுப்புக்களுள் வெவ்வேறு அதிர்வெண்களில் அனுப்பப்படுகின்றன. இவ் வலைகள் உறுப்புகளின் மீது மோதி எதிரொலித்து மீண்டும் புரோப் வழியாகவே மிகுஅதிர்வு ஒலிவரைவிக்குத் திரும்புகின்றன. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர், இவ்வலை அதிர்வெண்களைப் படமாக்கி, இதன் பிம்பத்தைத் திரையில் தெளிவாகக் காண்பிக்கிறது. தேவைப்பட்டால் இவ்வாறு திரையில் தோன்றும் பிம்பத்தை புகைப்படமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மிகுஅதிர்வு ஒலிவரைவி எழுப்பும் ஒலி அலைகள், சாதாரண அதிர்வுகொண்ட ஒலி அலைகளாக இல்லாமல் மிகஅதிகமான அதிர்வலைகளையுடையதாக இருப்பதால் இது காதிற்கும் கேட்பதில்லை, ஒரு சாதாரண ஒலியின் அதிர்வு 10 பிக்ஷ் முதல் 20,000 பிக்ஷ் என்றால் இந்த மிகுஅதிர்வு ஒலி, 2 லட்சம் முதல் 10 லட்சம் பிக்ஷ் என்ற அதிர்வளவில் இருக்கக்கூடும். எனவே இவ்வொலிகள் செவிப்புலன் கடந்த ஒலிகளாவதுடன் காதிலும் கேட்பதில்லை.

கருப்பை ஆராய்ச்சியில் இக்கருவியின் பங்கு

இம்மிகு அதிர்வு ஒலிவரைவி கருப்பைத் தொடர்பான சோதனைகளுக்கு மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது. கருவுற்றிறுக்கும் போது இரத்தப் போக்கு, கருப்பையில் குழந்தை உண்டாகி உள்ளதா, கருப்பையினுள் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா, ஒரு குழந்தையா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டதா, கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா, போன்ற பல தகவல்களைப் பிரசவத்திற்கு முன்பே, இவ்வரைவியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இவைதவிர, கருப்பையில் பிளாசண்டா எனப்படும் நச்சுக்கொடி சரியான இடத்தில் இருக்கிறதா, குழந்தையின் தலை மேலாகவோ, கீழாகவோ, குறுக்காகவோ இருக்கிறதா, அவ்வாறிருந்தால் அது குழுந்தையின் பிறப்பை எவ்விதத்திலாவது பாதிக்குமா, என்பன போன்ற விவரங்களை குழந்தை பிறப்பதற்கு முன்கூட்டியே, இம்மிகு அதிர்வு ஒலிவரைவி மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர, கருப்பையில் ஏற்பட்டிருக்கும், கெடுதல்கள், நுண்ணுயிரிகளின் தாக்கம், கோளாறுகள், கட்டி புற்றுநோய், போன்ற அபாயங்களைத் தெளிவாக அறியவும், இவ்வரைவி உதவுகிறது. மேலும் சினையகத்தில் சினை முதிர்ச்சி அடைந்து விடுபட்டு கருப்பையை நோக்கிப் பயணம் செய்வதை இம்மிகு அதிர்வு ஒலி வரைவி மூலம் அறிந்து, சரியான காலகட்டத்தில் சோதனைக் குழாய் முறையில் கருத்தரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை எவ்விதத்தயக்கமுமின்றி முனைந்திட உதவுகின்றது.

இவ்வரைவி மூலம் குறையுள்ள குழந்தைகளைக் கருப்பையில் இருக்கும் போதே தெளிவாக அறிந்து கொண்டு, அக்குழந்தையின் பிறப்பைத் தவிர்க்க முடிகிறது. குழந்தை கருவிலிருக்கும் 4 வது மாதத்தில் அதன் நிலையை அறிந்து கொள்வதன் மூலம் பிறவிக் கோளாறுகள், மற்றும் எனன்செப்பாலி எனப்படும் தலையற்ற குழந்தைப் பிறப்பு, போன்றவற்றை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதர நன்மைகள்

மிகுஅதிர்வு ஒலி வரைவி கருப்பைத் தொடர்பான பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி, கல்லீரல், சிறுநீரகம், கண் மற்றும் வயிறு போன்ற உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளையும் இனம் அறிய உதவுகிறது.

கல்லீரலில் ஏற்படும் ஹெபடோமா சிறுகட்டிக்கும் இடையேயான வேறுபாட்டை எளிதாக இவ்வரைவியின் துணைகொண்டு அறிந்து கொள்ளலாம். கல்லீரல் கட்டிகளைக் கண்டறியவும், அக்கட்டிகளை இம்மிகு அதிர்வு ஒலி வரைவிகளின் துணையுடன் ஆஸ்பிரேஷன் எனப்படும் உறிஞ்சுமுறைச் சிகிச்சையால் நீக்கவும் பயன்படுகிறது.

சிறுநீர்ப்பையில் கல் இருப்பதைக் கண்டறிவதற்கும் மிகுஅதிர்வு நுண்ணொலி அலைகள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வரைவியின் துணையுடன் சிறுநீரகத்தில் ஏற்படும் வீக்கம், கட்டி, கல், சுருக்கம், அடைப்பு, சீழ் போன்றவற்றை நோயின் ஆரம்ப காலத்திலேயே அறிந்து, அதற்கேற்ற சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். இதுதவிர கண்களினுள் தோன்றும் கட்டிகள், ரத்தக்கசிவு, ரெட்டினா விடுபடுதல் முதலியவற்றை தொடரவும் இம்மிகு அதிர்வு வரைவி துணைசெய்கிறது.

மிகுஅதிர்வு வரைவியோடு இணைந்த எதிரொலிக் கருவி உதவியுடன் இதயத்தின் செயல்பாட்டைக் கண்டறியலாம். இதய எதிரொலி வரைவிகளின் உதவியால் இதய அறைகளின் அளவு, அவற்றின் சுருங்கி விரியும் தன்மை, இதய வால்வுகளின் கோளாறு, இதய வெளி உறையில் நீர்க்கோர்த்தல், இதயச்சுவர்களில் ஓட்டை விழுதல், பிறவியிலேயே ஏற்படும் இதயக்கோளாறுகள் ஆகியவற்றை மிகச் சரியாக கணித்துவிடலாம்.

இம்மிகு அதிர்வு ஒலி வரைவிகள் உடலினுள் சென்ற உலோக மற்றும் பிற புறப்பொருட்களின் இடத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன.

மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றியும் படப் பரிசோதனைகள், அவற்றின் முடிவுகள் பற்றி நோயாளிகள் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பதன் மூலம் தங்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகள் தேவையா, இல்லையா என்பதை அவர்களாலேயே அறிந்து கொள்ள முடியும். இதனால் மருத்துவர்களைக் குற்றம் கூறுவதும் ஓரளவு குறையும்.

நோயாளி, தங்களுக்கு வந்திருக்கும் நோயின் தன்மையை உடனடியாகத் தெரிந்து கொள்ள முற்படுவதாலும், மருத்துவர்கள் தங்கள் நோய்க்கணிப்பு தவறாகப் போய்விடக்கூடாதே என்கிற எச்சரிக்கை உணர்வில் செயல்படுவதாலும் நோய் அறிவதில் காலதாமதம் ஏற்பட்டு விடுகிறது.

புதுவகை மருத்துவக் கருவிகள் நோயறிவதற்கும், அவற்றிற்கான சிகிச்சையினை விரைவாக மேற்கொள்ளவும் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில் மிகுஅதிர்வு ஒலி வரைவி மருத்துவர்களுக்கும், நோயாளிக்கும் மிகுந்த நன்மையையே தந்துவருகிறது.


Spread the love