படுக்கையை நனைக்கும் பழக்கமா? பயப்படாதீர்கள்

Spread the love

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது சாதாரண விஷயம்தான். கைக்குழந்தையை தூக்கி வைத்திருக்கும்போது, சிறுநீர் கழித்தால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ‘யார் மேல பாசம் இருக்கோ.. குழந்தை அவர் மேலதான் மூத்திரம் போகும்’ என்று வியாக்கியானம் செய்வார்கள். நான்கு அல்லது ஐந்து வயது வரை குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை பெற்றோர் உட்பட யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், 5 வயதுக்கு மேல் படுக்கையை நனைக்கும் பழக்கம் இருந்தால் பெற்றோர்கள் பயந்து விடுகிறார்கள்.

ஐந்து வயது முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை இருக்கலாம். இது தன்னிச்சையான செயல்தான். பதட்டப்பட வேண்டாம். 10 வயதுக்கு மேல் இது சிறிது சிறிதாகக் குறையும். சில குழந்தைகள் எப்பொழுதும் இரவில் படுக்கையிலேயே சிறுநீர் போவார்கள். உடல் அதிகச் சிறுநீரை உற்பத்தி செய்வதாலும், சிறுநீரைத் தாங்கிக்கொள்ள இயலாததாலும், குழந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருப்பதாலும் இப்படி ஏற்படும். இதனால் குழந்தைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. சில குழந்தைகளுக்குக் கூச்ச உணர்வு வரலாம். இது சாதாரண விஷயம்தான் என்பதை பெற்றோர் உணர்ந்து கொண்டு,  இது மாறிவிடும் என்பதை சம்பந்தப்பட்ட குழந்தைக்கும் எடுத்துக் கூறி அவர்கள் கூச்சத்தை போக்க வேண்டும். இரவு தூங்கும் முன்பு, அவர்களை கண்டிப்பாக சிறுநீர் கழிக்கும்படி செய்ய வேண்டும்.

இரவு நேரத்தில் குளிர்ந்த உணவு, திரவ உணவு கொடுப்பதைக் குறைக்க வேண்டும். சில நேரம் அலாரம் வைத்துக் குழந்தையை எழுப்பி, சிறுநீர் போகச் செய்ய வேண்டும். சிறிது சிறிதாகக் குழந்தை தானாக எழுந்து போய்ச் சிறுநீர் கழித்த பின் படுத்துக் கொள்ளும். இந்த முறை நடைமுறையில் பலனளிக்க கொஞ்சம் காலம் பிடிக்கும். அதுவரை பெற்றோர் பொறுமை காக்க வேண்டும்.

மூத்திரப்பையில் பழுப்பு, காய்ச்சல் போன்றவை இல்லையா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சில நேரம் இதற்கென்று மருந்துகள் தேவைப்படுகின்றன. அபான வாயுவின் ஜலக் குணம் அதிகரித்து, மூத்திரத்துடன் சேர்ந்து தன்னிச்சையாக மூத்திரம் வெளியேறலாம். இப்படிப்பட்டவர்களுக்கு நல்லெண்ணெயைச் சூடாக்கி, தொப்புளுக்குக் கீழே தடவி வருவது பலன் கொடுக்கும். விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவுவதும் நல்லது.


Spread the love